மணலி மாநகராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
கொலைக்கான பின்னணி குறித்து தொடரும் விசாரணை
திருவொற்றியூர்,ஜூலை 20: மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில் மதுரை சுரேஷ் (27), காஜா சுரேஷ் (28), கார்த்திக் (23), கணேஷ்குமார் (28) ஆகிய நால்வரையும் புதன்கிழமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணலியைச் சேர்ந்த மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலரான ஞானசேகரன் கடந்த ஜூலை 9 அன்று மணலியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜெபகுமார், ராஜேஸ், ராஜீவ் பகதூர், பிரபு, குமாரவேல், முத்துராஜ் ஆகிய 6 பேரை இவ்வழக்கில் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இருப்பினும் கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மதுரை சுரேஷ் (27), காஜா சுரேஷ் (28), கார்த்திக் (23), கணேஷ்குமார் (28) ஆகிய நான்கு பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இந்த நான்கு பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் கொலை செய்யப்பட்ட ஞானசேகர் மகனுடன் ஏற்பட்ட முன் விரோதமே இக்கொலைக்குக் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பின்னணி தகவல்கள் மேலும் பல முக்கிய பிரமுகர்களை நோக்கி
நகர்ந்து வருவதாகவும், இக்கொலைக்கு அரசியல் விரோதங்கள், ஒப்பந்தம் எடுப்பதில் ஏற்பட்ட போட்டி உள்ளிட்டவைதான் பின்னணி காரணங்களாக இருக்க முடியும் என
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment