Friday, 19 May 2017


அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும்

தமிழருவி மணியன்

திருவொற்றியூர், மே 14:அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். மேலும் பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே பெற முடியும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
   திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் சிந்தனைச்சாரல் மாதாந்திர நிகழ்ச்சி திருவொற்றியூர் சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 'வாழ்க்கையெனும் ஜீவரசம்' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியது, 
   வாழ்க்கை என்பது பொதுவாகத் துன்பம் அதிகம் நிரம்பியதுதான். ஆனால் இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர துன்பத்தை எண்ணியே வருத்தமடைய முடியாது. பசி, நோய், பகை இல்லாத வாழக்கையில் அறம் சிறக்கும். 
   பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே நாம் பெற முடியும். திருக்குறள், திருமந்திரம்,  புறநானூறு, தேவாரம், திருவாசகம், புராணங்கள்ம, இதிகாசங்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறம் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை தொன்மையான தமிழ்மொழி வகுத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழர்களைப் பொறுத்தவரை அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும். இளம்வயதிலிருந்தே இவ்வாறு கற்பதை
பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். 
   தீமையின் நிழல்படாத அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். தீயவழியில் பொருளீட்டுவதையே ஒருவன் வழக்கமாகக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அப்பழக்கம் குணப்படுத்த முடியாத வியாதியைப் போல ஒட்டிக் கொள்ளும். பிறகு துன்பத்திலிருந்து அவன் விடுபடவே முடியாது என்பதை உணர வேண்டும். 
    எதனையும், யாரையும் அற்பமாகக் கருதக்கூடாது. வாழ்வு என்பது பெற்றுக் கொண்டே இருப்பது அல்ல. ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலமே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
   படித்தவர்கள் எல்லாம் ஞானம் நிறைந்தவர்கள் என்று கருதிவிட முடியாது. தகவல்களைப் பெற்று சிந்தனை நிறைந்த அறிவாற்றலை தொடர்ந்து வளப்படுத்தி வந்தால் பிறகு ஞானத்தை அடைய முடியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் படிக்காதவர். அவரை மெத்தப் படித்த விவேகானந்தர் குருவாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் ராமகிருஷ்ணரின் ஞானம்தான்.
   தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். உணவு, உறக்கம், உழைப்பு, இன்பம், சிந்தனை ஆகியவற்றில் 
மலைக்கும் மடுவிற்கும் நடுவே நாம் செல்ல வேண்டும். எந்த விலங்கும், பறவையும் 
காலச் சூழலுக்கு ஏற்ப தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுவிடவில்லை. காரணம் அவற்றுக்கு மனிதனைப்போல சிந்தனை அறிவு கிடையாது. 
   எனவே இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டுக் கொண்டு, அறநூல்களில் கூறப்பட்டுள்ளவைகளைக் கடைப்பிடித்து 
ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுவே ஜீவரசமாக சுவையோடு இருக்கும் என்றார் மணியன். 
    இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், பள்ளியின் தாளாளர் ரங்கநாதன்,  நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, மதி, எஸ். சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
'ஓசன் சீல்டு' சென்னை வருகை:

இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளது

ஆஸ்திரேலிய படைத் தளபதி தகவல் 


திருவொற்றியூர், மே 18:ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படைக் கப்பல்  'ஓசன் சீல்டு'  வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. இதனை இந்திய கடலோரக் காவல்படையினர், பள்ளி மாணவர்கள் கூடி வரவேற்றனர். 
    இந்திய கடலோரக் காவல்படையினரும், வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ண உறவுகள் அடிப்படையில் பரஸ்பரம் அந்தந்த நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம். இதன்படி கடந்த 2004-ம் ஆண்டு 
இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் சங்கல்ப் ஆஸ்திரேலியா சென்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை கப்பலான 'ஓசன் சீல்டு' வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. அப்போது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கூடி கப்பலை வரவேற்றனர்.
பின்னர் ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்புப் படை ஆணையர் ரோமன் குவேட்வைலி கப்பல் பயணத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, 
ஆஸ்திரேலியா திறமையான கடல் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தின் மூலம் இந்திய கடலோரக் காவல்படையினருடனான ஈடுபாடு, உறவுகள் அதிகரிக்கும்.  மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இரு நாடுகளிடையே மதிப்பு மிகுந்த நல்லுறவு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை இக்கப்பல் பயணம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். பரந்த கடல் எல்லையைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் போதை மருந்துகள், ஆயுதங்கள், கடற்கொள்ளை, சட்டவிரோத மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார் சட்ட விரோதச் செயல்களைக் கண்காணிப்பதுதான் எல்லை பாதுகாப்பு படையினரின் முக்கிய பணிகளாகும். ஆஸ்திரேலிய கடல் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் மலாக்கா நீரிணைப்பு பகுதியில்தான் இதுபோன்ற பிரச்னைகள் நீடித்து வருகின்றன. 
இலங்கை அகதிகள் பிரச்னை:
    சட்டவிரோதக் கும்பல்கள் மூலம் இலங்கை அகதிகள் பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக படகுகளில் அழைத்து வரப்படுகின்றனர். இதனை ஆஸ்திரேலியா அனுமதிப்பதில்லை. இதனையடுத்து அவ்வாறு வரும் அகதிகள் மீட்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் தொடர்புடைய நாடுகளின் 
தூதரகங்கள் மூலம் அந்தந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கிறோம். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை பல்வேறு வகையில் மனிதாபிமானத்துடன்தான் நடவடிக்கை 
மேற்கொள்கிறோம். ஆனால் சட்டவிரோதக் குடியேற்றத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது என்றார் குவேட்வைலி.
   இந்நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் ஹரிந்தர் சித்து, கப்பலின் கேப்டன் ஆலன் சாம்ப்கின், இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய உதவித் தளபதி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இரு நாள்களும் 
இரு நாட்டு வீர்ர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் 'ஓசன் சீல்டு' 

நாளை சென்னை வருகிறது 

திருவொற்றியூர், மே 16: ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  'ஓசன் சீல்டு' என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைகிறது. இதனை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் வரவேற்கின்றனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 
    இந்திய கடலோரக் காவல்படையினரும் வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ணம் அடிப்படையில் கலந்துரையாடல், தகவல்கள்,  தொழில்நுட்ப பரிமாற்றம், சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கமானது. இந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப்படை கப்பல் ஓசன் சீல்டு வியாழக்கிழமை சென்னை வருகிறது.
நடுக்கடலில் பல்வேறு வகையில் உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல் 110 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும் கொண்டதாகும். மணிக்கு 16 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பல் சுமார் 8,500 டன் எடை கொண்டாகும். மேலும் பொருள்களை எடுத்துச் செல்ல சுமார் 1000 மீட்டர் பரப்பளவிலான இடம் உள்ளது. மேலும் கப்பலின் மேல் பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் தளம் உள்ளது. காணாமல் போன மலேசியா விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பலில் ஓசன் சீல்டும் ஒன்றாகும். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.