ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் 'ஓசன் சீல்டு'
நாளை சென்னை வருகிறது
திருவொற்றியூர், மே 16: ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 'ஓசன் சீல்டு' என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைகிறது. இதனை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் வரவேற்கின்றனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்திய கடலோரக் காவல்படையினரும் வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ணம் அடிப்படையில் கலந்துரையாடல், தகவல்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கமானது. இந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப்படை கப்பல் ஓசன் சீல்டு வியாழக்கிழமை சென்னை வருகிறது.
நடுக்கடலில் பல்வேறு வகையில் உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல் 110 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும் கொண்டதாகும். மணிக்கு 16 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பல் சுமார் 8,500 டன் எடை கொண்டாகும். மேலும் பொருள்களை எடுத்துச் செல்ல சுமார் 1000 மீட்டர் பரப்பளவிலான இடம் உள்ளது. மேலும் கப்பலின் மேல் பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் தளம் உள்ளது. காணாமல் போன மலேசியா விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பலில் ஓசன் சீல்டும் ஒன்றாகும். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment