Friday, 29 May 2015

மீன்பிடித் தடைகாலம், அதிவேக படகுகளை பயன்படுத்துவதில் பிரச்னை

காசிமேடு மீனவர்களிடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம்

முதல்வர் தலையிடக் கோரிக்கை 

திருவொற்றியூர், மே 28: மீன் பிடி தடைகாலத்தை நீடிப்பது, அதிவேக விசைப்படகுகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னை காசிமேடு மீனவர்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
   கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால்  இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும்.  இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் மே 29 வரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் வங்கக் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. 
        ஆனால் இந்த ஆண்டு இத்தடை காலத்தை இந்த ஆண்டு ஜூன் 14 வரை முதல் 61 நாள்களாக நீடித்து மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இதனை ஏற்க முடியாது என அறிவித்துள்ளன. இதனால் 45 நாள் தடைகாலம் வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் படகுகளை வரிசையாக நிறுத்தி தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோதலைத் தவிர்க்க மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  பிரச்னைக்கான காரணம் குறித்து மீனவர் நல சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது பின் வருமாறு தெரிவித்தனர். 
அதிவேக விசைப்படகுகளால் வாழ்வாதாரம் பாதிக்கும்: 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் நல சங்கத் தலைவர் குப்பன்:
    61 நாள் தடை காலத்தை ஏற்க மறுக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை. இம்முடிவு சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு 
ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் சுமார் 80 சதவீத காசிமேடு மீனவர்களின் தொழில் சார்ந்த வாழ்வாதாரம் ஆந்திரா மாநில கடலோரப் பகுதிகளை நம்பியே உள்ளன. அம்மாநிலத்தில் தடைகாலம் 61 நாள்கள் என்ற நிலையில் வரும் ஜூன் 14-வரை தடை நீடிக்கிறது. தமிழக மீன்வளத்துறையும் இன்னும் 15 நாள்கள் வரை ஆந்திர பகுதிக்குச் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும் காசிமேடு மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கணிசமானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே காசிமேட்டில் மொத்தமுள்ள சுமார் 1,100 படகுகளும் 
சென்னையை ஒட்டிய குறுகிய பகுதியில் மீன்பிடித்தால் மீன் வளம் என்னவாகும்?
   மேலும் அதிகபட்சம் 150 குதிரை சக்தி, 20 மீட்டர் நீளம் வரை உள்ள விசைப்படகுகளுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சுமார் 300 குதிரை சக்திவரையுள்ள ஏராளான விசைப்படகுகள் காசிமேட்டில் உள்ளன. இவற்றை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும். ஆய்வு செய்வது என்பது தடைகாலத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் இதுவரை ஒரு படகினையும் கண்டறியவில்லை என்றார் குப்பன். 
அதிவேக விசைப்படகுகள் இல்லவே இல்லை: 
சென்னை விசைப்படகு மீனவர் நல சங்கத் தலைவர் ரகுபதி கூறியது,
   தடைகாலம் குறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதான் முறையானது. மீன் வளத்துறை அதிகாரிகள் கடந்த மே 21-அன்று அனைத்து விசைப்படகுகளையும் நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் ஒரு படகு கூட 20 மீட்டருக்கும் மேல் நீளம் இல்லை. இதன் பிறகு 80 படகுகள்
விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ளன என எதிர் தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சோதனையிட்டனர். 
இதிலும் எந்தப் படகும் விதிமீறலுக்கு உட்பட்டதாகக் கண்டறியப்படவில்லை. எனவே 
வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு ஒரு குறிப்பிட்ட சங்கத்தைத் சேர்ந்தவர்கள் முகத்துவாரத்தில் படகுகள் நிறுத்தி தடை ஏற்படுத்தி உள்ளனர். வெள்ளிக்கிழமை தடை காலம் நிறைவடையும் நிலையில் படகுகளைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே தடை ஏற்படுத்தியுள்ள படகுகளை உடனடியாக அகற்ற 
மீன்வளத்துறையும், காவல்த் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரகுபதி. 
மீன்வளத்துறை அதிகாரிகள் உடந்தை:
ராயபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முன்னாள் உறுப்பினருமான வேணுகோபால் கூறியது,
     காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் பதிவு செய்யப்படாத படகுகள் ஏராளமாக உள்ளன. எங்கெங்கிருந்த 150 குதிரை சக்திக்கும் அதிகமாக உள்ள இயந்திரங்களைக் கொண்ட அதிவேக விசைப்படகுகள் வாங்கி வரப்பட்டு காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ளன. இதனால் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. மேலும் இங்கு  விசைப்படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை, மீன் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னையால் மீனவர்களின் 
வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் மழை, புயல் காலங்களில் மட்டுமே தடைகாலம் அறிவிக்கப்பட்டு்ள்ளது. 
எனவே மீன் இனப்பெருக்கத்திற்காக தடைகாலம் என்றால் ஒரே நாட்டில் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். இதற்கான ஆய்வுகள் முறையாக நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய பிரச்னையையால் மீனவர்களிடையே மோதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும் என்றார் வேணுகோபால்.
   காசிமேடு விசைப்படகு மீனவர்கள் மூன்று பிரிவுகளாக சங்கங்கள் அமைத்துள்ளனர். இதன் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு ஒட்டுமொத்த மீனவர்களிடையே பிளவு ஏற்பட்டு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு சுமூக முடிவினை எடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவுக்குள் தடை ஏற்படுத்தியுள்ள படகுகளை 
அப்புறப்படுத்தும் வரை இப்பகுதியில் பதற்றம் தொடரும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.  

Friday, 8 May 2015

மாநகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?

போலீஸார் துருவி துருவி விசாரணை 

திருவொற்றியூர், மே 6:சென்னை மாநகராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் ஆர்.வி. தன்ராஜ் மற்றும் திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ரவி ஆகியோர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்புடையவர்கள் யார் என்பது இதுவரை துப்புத் துலங்கவில்லை. இதனையடுத்து இருவரிடமும் தனிப்படை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 12-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஆர்.வி.தன்ராஜ். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.ரவி என்பவருடன் இணைந்து நிலம், வீட்டுமனை விற்பனை தொழில் செய்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை இரவு இருவரும் காலடிப்பேட்டையில் உள்ள ரவியில் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர். மேலும் இருவரது அலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து கவுன்சிலர் தன்ராஜின் மனைவி விஜயலட்சுமி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீஸார் பல்வேறு கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் மனைவிக்கு போன் செய்த தன்ராஜ் தாங்கள் இருவரும் அரும்பாக்கத்தில் உள்ளோம்,  இன்னும் சில மணி நேரத்தில் வீட்டிற்கு திரும்பி விடுவோம் என தெரிவித்திருந்தார். 
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 
    இந்நிலையில் போலீஸார் நடத்திய தீவிர சோதனையில் ராயபுரத்திலிருந்து திருவொற்றியூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த தன்ராஜ் மற்றும் ரவியை போலீஸார் கண்டுபிடித்து மீட்டனர். அப்போது இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இத்தகவல் பரவியதையடுத்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு திரண்டர். இதனையடுத்து இருவரையும் வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர். 
சம்பவத்தின் பின்னணி என்ன?:
    அப்போது இருவரும் தங்களை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே வந்து அறையில் இருந்த இருவரையும் குண்டுக் கட்டாக தூக்கி சென்று காரில் ஏற்றிக் 
கடத்திச் சென்றனர். பின்னர் இருவரையும் திருவண்ணாமலை அருகே அழைத்துச் சென்று அங்கு சிறை வைத்தனர். அப்போது இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டோம். பின்னர் கடத்தல் கும்பலின் தலைவன் எனக் கூறி ஒருவர் வந்தார். எங்களை விடுவிக்கும்படி கூறினார். இதனையடுத்து விடுவிக்கப்பட்ட நாங்கள் பேருந்தில் சென்னை வந்தடைந்தோம் என போலீஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
ஆனால் யார் கடத்தினார்கள்? என்ன காரணத்தை அவர்கள் தெரிவித்து தாக்கினார்கள்?
என்ற கேள்விக்கு இருவருமே முன்னுக்குப் பின் முரணான பதிலையே தொடர்ந்து அளித்து வந்ததால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ரவிக்குமார், கிழக்கு மண்டல இணை ஆணையர் தினகரன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தினர். இருப்பினும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். புதன்கிழமை இருவரையும் ரகசிய இடத்திற்குக் 
கொண்டு சென்று துருவி, துருவி திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவத்தின்போது தொடர்பு கொண்ட அலைபேசி எண்களின் விபரத்தைக் கொண்டு கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நிலம் குறித்த பிரச்னையின் பின்னணியில் இருவரும் கடத்தப்பட்டிருக்கலாம் என நம்புவதாக விசாரணை நடத்தி வரும் போலீஸார் தெரிவித்தனர். 




விலகாத மர்மம்:
   திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கவுன்சிலர் தன்ராஜ் மற்றும் ரவி கடத்தப்பட்ட இடம் இரவு 12 மணி வரை ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். மேலும் கூப்பிடும் தூரத்தில்தான் திருவொற்றியூர் காவல் நிலையம் அமைந்துள்ளது.  எனவே இவர்கள் கடத்தப்படும்போது இச்சம்பவம் யார் கண்ணிலும் படாதது எப்படி? நள்ளிரவுவரை இருவரும் பேசிக்கொண்டிருந்தன் மர்மம் என்ன? எப்போதும் உடன் இருக்கும் கார் டிரைவரை வீட்டிற்கு அனுப்பியதன் பின்னணி என்ன? என்பது குறித்தெல்லாம் மர்மமாக உள்ளது.  கடத்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால் ஒழிய இதில் மர்மம் விலக வாய்ப்பில்லை. கடத்தப்பட்டவர் மாநகராட்சி கவுன்சிலர் என்பதால் உயர் அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக திருவொற்றியூர் போலீஸார் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர்.


கேள்வியும்...பதிலும்...


    ஜனநாயகத்தின் நான்காவது தூண். மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நாட்டினை வழிநடத்தும் வழிகாட்டி என்றெல்லாம் பத்திரிகைகள் மீது தொடர்ந்து காலம் காலமாக நம்பிக்கை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் காந்தியடிகள் முதல் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வரை ஏராளமானோர் பத்திரிகையாளர்களாக இருந்த பின்னர் தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அன்று முதல் இன்றுவரை உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அவற்றையெல்லாம் முடிந்தவரை விரைவாகவும், விளக்கமாகவும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதில் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
    ஆனால் புதுடில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது தினசரி செய்திகளை அறிந்து கொள்வதில் விருப்பம் இல்லாதவர்களிடமும் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு மட்டுமல்லாது சமீப காலமாக ஊடகங்கள் மீது அவ்வப்போது பல அரசியல் தலைவர்களும் குறை கூறுவது, பழி சுமத்துவது அதிகரித்து வருகிறது. மஹராஷ்டிரா மாநிலத் தேர்தலின் போது பத்திரிகையாளர்களிடம் பரிசுப் பொருள்களை வாங்கி மகிழும்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் ஊடகங்களில் அரசியல் ஊடுவிருவியுள்ளதா? ஒரு சாராக ஊடகங்கள் செயல்படுகின்றனவா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
     1993-ல் தொடங்கப்பட்ட சன் டி.வி. இன்றைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்களை நடத்தி வருகிறது. இது தவிர நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பண்பலை வானொலி நிலையங்களை நடத்தி வருகிறது. தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களை சன் நெட்வொர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.  இவை அனைத்தும் தி.மு.க. சார்பான பின்னணியில்தான் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவர்களுக்குள் பிணக்கு ஏற்படும்போது வெளியிடப்படும் செய்திகளை நாம் இங்கு கணக்கில் கொள்ளக் கூடாது.  
      இதனைத் தொடர்ந்து வந்த ராஜ் டி.வி. ஓரளவிற்கு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கினையடுத்து  அறிவாலயத்திலிருந்து  சன் டி.வி. 2007-ல் வெளியேறியபோது ராஜ் டி.வி. உரிமையாளர் எம்.ராஜேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது சன் டி.வி. இல்லாத நிலையில்  தி.மு.க.வின் செய்திகளுக்கு ராஜ் டி.வி. முக்கியத்துவம் அளிக்கும் எனவும் தெரிவித்தார். ஆனால் இந்த ஏற்பாடு  நீண்ட காலத்திற்கு ஒத்துவராது என்பதை உணர்ந்த அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு உடனடியாக கலைஞர் டி.வி.யைத் தொடங்கினார். சன் டி.வி.யை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றிய சரத் ரெட்டியே கலைஞர் டி.வி. தொடங்குவதிலும் மூளையாகச் செயல்பட்டார்.  அவசர கோலத்தில் தொடங்கப்பட்ட இந்த கலைஞர் டி.வி. விவகாரமே தி.மு.க.வின் சரிவிற்கு காரணமாக அமைந்தது தனிக்கதை. கலைஞர் டி.வி.யின் செய்தியில் தி.மு.க.சார்ந்த செய்திகளை சாதகமாகவும், அ.தி.மு.க.சார்ந்த செய்திகளை பாதகமாகவோ அல்லது திரித்தோ வெளியிடும் பணியைத் திறம்பட செய்து வருகிறது. 
    அ.தி.மு.க.விற்காக தொடங்கப்பட்ட ஜெயா டி.வி. இன்றைக்கு நான்கு சேனல்களை நடத்தி வருகிறது. இதில் முழுமையாக அ.தி.மு.க. மற்றும் இதன் தலைவர் ஜெயலலிதா குறித்த செய்திகள்தான் இடம்பெறும். மற்றபடி கருணாநிதியையும், தி.மு.க.வையும் வசைபாடும் செய்திகளை வெளியிடுவதில் ஜெயா டி.வி. மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு நிகரில்லை.
    தி.மு.க., அ.தி.மு.க.விற்கு ஊடகங்கள் இருப்பதால்தான் அரசியலில் நிலைத்திருக்க முடிகிறது என்று நம்பிய இதரக் கட்சிகள் தங்களுக்கென ஊடகங்களை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டின.  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்பட்ட மக்கள் தொலைக்காட்சி காலப்போக்கில் பா.ம.க.வின் செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிக்க முற்பட்டது. மேலும் பெருத்த நட்டத்துடன் தமிழோசை நாளிதழ் நின்று போனதும் பா.ம.க.வுக்கு பாதிப்புதான். 
     இதே வழியில் விஜயகாந்த் தொடங்கிய கேப்டன் டி.வி. தே.மு.தி.க.வின் பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டு வருகிறது. 2006-ல் காங்கிரஸ் பின்னணியில் ஆர்.ஏ.ஜெபராஜ் என்பவரால் தொடங்கப்பட்ட இமயம் டி.வி. தற்போது ம.தி.மு.க.வின் செய்திகளுக்கு 
பிரதான இடம் அளித்து வருகிறது.  குமரிஅனந்தனின் சகோதரர் வசந்தக்குமாரால் தொடங்கப்பட்ட வசந்த் டி.வி. காங்கிரஸ் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதை நாம் இங்கு குறிப்பிடலாம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு மெகா டி.வி.யைத் தொடங்கி நடத்தி வருகிறார். 
     தமிழக காட்சி ஊடக வரலாற்றில் நடுநிலையோடும் புதுமையோடும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இதன் நிறுவனர் பச்சமுத்து இந்திய ஜனநாயகக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கியவுடன் புதிய தலைமுறை மீதும் கட்சி பாசம் விழுந்தது. இதனை மறைத்துக் கொள்ளவும், பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கவும் பச்சமுத்து தனியாகவே வேந்தர் டி.வி.யை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர அரசியல்வாதிகள் தொடர்பில்லாத ஸ்டார் குழுமத்தின் விஜய் டி.வி.,தினத்தந்தி நாளிதழின் தந்தி டி.வி., கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் தொடங்கப்பட்ட பாலிமர், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினசரி செய்தித் தாள்களைப் பொருத்தவரை அவ்வப்போது நடுநிலையாகவும், ஒருநிலை சார்பாகவும் செய்திகளை வெளியிட்டு வருவதை வாசகர்கள் அறிவார்கள். ஆக நடுநிலை என்பது தேட வேண்டிய நிலையில்தான் இன்றைய ஊடகங்களின் நிலை உள்ளது. 
    இது தமிழ்நாட்டின் உள்ள ஊடகங்ளின்  வரலாறு. ஏறக்குறைய இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது வருத்தமான செய்தி. ஜன.29, 1780-ல் இந்தியாவின் முதல் செய்தித்தாளான பெங்கால் கெஜட் ஆங்கில மொழியில் கல்கத்தாவிலிருந்து வெளியானது. இன்றைக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக புள்ளி விபரங்களின்படி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகளில் வெளியிட பதிவு செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. மேலும் சுமார் 800 தொலைக்காட்சிகள இயங்கி வருகின்றன இதே போல் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் செய்தித்தாள்கள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் சுமார் 50 புதிய சேனல்கள் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அனுமதிக்காக வருகின்றன. 
   இந்த நிலையில் விஜயகாந்த் கூறுவதுபோல் அந்த டி.வி. செய்தியாளர் கேள்வி கேட்கக் கூடாது... இந்த நாளிதழ் இப்படி செய்தி போடுகிறது... என்றெல்லாம் பிதற்றுவது அவரின் அறியாமையைக் காட்டுகிறது. மேலும் தமிழகத்தின் அதிகாரப் பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால்தான் அவர் செல்லுமிடமெல்லாம் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  ஆனால் விஜயகாந்த் சமீப காலமாக அவர் அளித்து வரும் குதர்க்கமான, கிண்டலான, பொறுப்பற்ற பதில்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் ஒரு கேலிப் பொருளாகி வருகிறார் என்பதை அவரிடம் யார் சொல்வது?. 
    ஊடகங்களில் பெரும்பாலானவை அரசியல் பின்புலத்தோடுதான் இயங்குகின்றன
என்பதை மறுக்க இயலாது. ஆனால் இதையே நாம் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆளும் கட்சியினரின் தவறுகளை எதிர்கட்சியினரின் பின் புலத்தில் உள்ள ஊடகங்கள் வெளிக் கொண்டு வரட்டுமே!. ஆளும் கட்சியின் சாதனைகளை ஆளும் கட்சி பின்புலத்தில் இயங்கும் ஊடகங்கள் எடுத்தியம்பட்டுமே! இதிலென்ன தவறு. ஆக எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும், பத்திரிகைகளாக இருந்தாலும் இவர்கள்  வெளியிடும் செய்தியை அன்னப் பறவைபோல்தான் வாசகர்கள், பொதுமக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. 

     எனவே இனியாவது விஜயகாந்த் போன்ற தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்குத்தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர அவர் எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர் என்பது தேவையில்லாதது. இவ்வாறு எதிர் கொள்ளத் துணிவற்றவர்கள் செய்தியாளர் சந்திப்பை தவிர்ப்பது நல்லது. அதே நேரம் செய்தியாளர்களும் எந்த ஒரு விசயம் குறித்தும் யாரிடம் கேள்வி எழுப்பினாலும் அதில் விருப்பு வெறுப்புகளின்றி, ஆணித்தரமான, விளக்கமாகக் கேள்விகளைக் கேட்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நடுநிலை செய்தியாளர்களின் விருப்பமாக உள்ளது.