Sunday, 19 February 2017

திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் வெள்ளிவிழா 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று வாழ்த்து

திருவொற்றியூர், பிப்.19:திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், நிஷாபானு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
   திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதனையடுத்து வெள்ளி விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், நிஷாபானு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம்,அரிபரந்தாமன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள் சங்கம் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    இதில் வழக்குரைஞர் பணியில் 25 ஆண்டுகளைக் கடந்த எஸ்.சுரேஷ்குமார், என்.நாகசுந்தரம், எஸ்.ஆஞ்சலா, டி.பாஸ்கரன் உள்ளிட்ட 8 பேர் பாராட்டி 
கௌரவிக்கப்பட்டனர். மேலும் திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் நீதிபதிகளாக பணியில் சேர்ந்த வி.ஆர்.வேல்ராஜ், ஜி.கிறிஸ்டியன், எஸ்.சுகந்தி ஆகியோர்களை நீதிபதி ஜெயச்சந்திரன் பாராட்டினார். 
  மேலும் திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிபதி டி.இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி டி.இந்திராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.திருமால், திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எம்.வசந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியின் போது கௌரவிக்கப்பட்டனர். 
   நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் என்.நாகசுந்தரம், செயலாளர் கே.முருகன், பொருளாளர் என்.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, பிரபுதாஸ், சி.தன்ராஜ் , சி.ராஜேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காணாமல் போன சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக மீட்பு

பொதுமக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்,பிப்.19:திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரித்திகா (3) என்ற சிறுமி சனிக்கிழமை காணாமல் போன நிலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இறந்து போன நிலையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.


     திருவொற்றியூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பழனி, மீனவர். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகள் ரித்திகா. மூன்று வயது சிறுமியான ரித்திகா காணாமல் போய்விட்டதாக சனிக்கிழமை எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இந்நிலையில் திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இறந்து போன சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. கருணாகரன் என்பவர் லாரியில் எடுத்து வந்த குப்பையைப் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோதுதான் சிறுமியின் சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது. 
இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்தக் குப்பை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பிலிருந்து சேகரித்து கொண்டு வரப்பட்டது என தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீஸார் குப்பைக் கிடங்கில் கிடந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இச்சடலம் சனிக்கிழமை காணாமல் போன ரித்திகாவின் சடலம்தான் என்பது தெரியவந்தது. பின்னர் ரித்திகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
பொதுமக்கள் சாலை மறியல்:
     காணாமல் போன ரித்திகா கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்த சுனாமி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இரு நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கொலையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை எழுப்பினர். சாலை மறியலால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, எண்ணூர் விரைவு சாலைகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாரின் உறுதியையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
     இந்நிலையில் ரித்திகா கொலைச் சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
சென்னைத் துறைமுகம் வந்த கம்பி வடம் பதிக்கும் சிறப்புக் கப்பல்

திருவொற்றியூர்,பிப்.19:கடலுக்குள் தகவல் தொடர்பு கம்பி வடம் பதிக்கும் எல்.வி.நார்த் ஓசன் 105 என்ற சிறப்புக் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்கு வந்துள்ளது. சிறப்பு வடிவம் கொண்ட இக்கப்பல் காண்போரை வியக்க வைக்கும் வகையில் புதுமையாக உள்ளது என பலரும் கூறுகின்றனர்.
இக்கப்பல் குறித்து கப்பலின் ஏஜென்சி மேலாளர் கூறியது, 
       உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு வளர்ச்சியையடுத்து நாடுகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடலுக்கடியில் தகவல் தொடர்பு கம்பி வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர்-கொழும்பு இடையே கம்பி வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் எல்.வி.நார்த் ஓசன் 105 என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது.
     இதில் கம்பி வடத்தை நவீன முறையில் கடலுக்குள் செலுத்தும் சிறப்பு உருளைகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகபட்சம் 10 ஆயிரம் அடி ஆழத்திற்கு 
கடலுக்கு அடியில் கம்பி வடத்தை செலுத்த முடியும்.  இது தவிர இப்பணிக்கான 
தேவையான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன. 
நடுக்கடலில் வேலை செய்யும்போது உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், தளவாடச் சாமான்கள், எரிபொருள் உள்ளிட்டவைகளை ஏற்றிச் செல்வதற்காகவே இக்கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வந்த இக்கப்பல் வரும் புதன்கிழமை புறப்பட்டுச் செல்லும் என்றார் 
அவர். 
ஒப்பந்தம் பெறுவதில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்: போலீஸார் தடியடி

திருவொற்றியூர், பிப்.17:தாற்காலிக பாலம் அமைக்கும் பணி  தொடர்பாக ஒப்பந்கமிஷன் பெறுவதில் அதிமுகவின் இரு குழுவினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
   சென்னை மணலியில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் நிறுவனத்தில் விரிவாக்கப் பணிகள் சுமார் ரூ.3,500 மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 
கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் உயர் ரக கொதிகலன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாக உள்ளது. இதன் எடை சுமார் 750 டன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகர் அருகே பக்கிங்காம் கால்வாயில் தாற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான ஒப்பந்தப் பணியை அதிமுக வட்டச் செயலாளர்கள் செபாஸ்டின், பிரபாகரன், மணிக்குமார், அரசு ஆகியோர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
       இந்நிலையில் அதிமுக பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் தலைமையில் 
அதிமுகவினர் திரண்டு வந்து தங்களுக்கும் ஒப்பந்தப் பணியை பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வேலை செய்து வந்து தொழிலாளர்கள் அங்குமிங்கும் ஓடினர். இதனால் இப்பகுதியே கலவரமாக மாறியது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
     இது குறித்து சாத்தாங்காடு போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து தாற்காலிக சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. 
எண்ணூர் துறைமுக ரயில்வே கடவுப் பாதையில் லாரி மோதி விபத்து 

போக்குவரத்து ஸ்தம்பித்தது

திருவொற்றியூர், பிப்.16:எண்ணூர் துறைமுக ரயில்வே கடவுப் பாதையில் லாரி மோதி தடுப்பு
தாழ்வாரம் உடைந்து விழுந்தது. இதனையடுத்து ரயில் பாதை மின்சாரம் லாரிகள் மீது பாயலாம் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சில மணி நேரங்கள் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
    எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கடவு பாதை உள்ளது. வியாழக்கிழமை காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் நோக்கி இரும்புத் தளவாடங்கள் ஏற்றிச் சென்ற லாரி கடவு பாதை தாழ்வு கம்பித் தடங்கள் மீது மோதியது. இதனையடுத்து ரயில்பாதை மின்கம்பிகள் உரசாமல் இருக்க உயரத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் தாழ்வு கம்பித் தடங்கள் கீழே விழுந்தன. இதனையடுத்து இதே தடத்தின் வாகனங்கள் சென்றால் மின்கம்பிகள் உரசி பெரும் தீவிபத்து ஏற்படும் அபாயம் உண்டாகியது. இதனையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் இரண்டு துறைமுகங்களுக்குமான போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
சீரமைப்பு: 
   இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் போக்குவரத்து மேலாளர் கருப்பையா வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் ரயில்வே மற்றும் துறைமுக ஊழியர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சேதமடைந்த தாழ்வு கம்பித் தடங்கள் சீரமைக்கப்பட்டு கடவுப் பாதையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. 
வி.கே.சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகச் சிறைக்கு மாற்றப்படுகிறார்?

விதிகளில் தடையில்லை: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

திருவொற்றியூர், பிப்.:சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 
வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பண அக்ரகாரா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தமிழகச் சிறைக்கு மாற்றுவதில் சட்டவிதிகள் ஏதும் தடையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து 
மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினர். இதனையடுத்து இங்குள்ள பரப்பண அக்ரகாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அப்போது சிறையில் முதல்வகுப்பு சிறைக் கைதிகளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் வி.கே.சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாயின. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறியது,
சிறைமாற்றம் என்பது வழக்கமானதுதான்:
எஸ். அறிவழகன் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர்):
    சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டம் 1950-ல் கூறப்பட்டுள்ள விதிகளின் படி 
எந்த ஒரு கைதியையும் ஒரு மாநிலத்திற்குள் உள்ள எந்த சிறைக்கும் சிறைக் கண்காணிப்பாளர்களே உடனடியாக மாற்றிவிட முடியும். ஆனால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கைதிகளை மாற்ற வேண்டும் எனில்
இரு மாநில அரசுகளின் ஒப்புதல்கள் தேவை. வி.கே.சசிகலா வழக்கினைப் பொருத்தவரை குற்றம் நிகழ்ந்த இடமே தமிழ்நாடுதான். வழக்கு விசாரணை மட்டுமே கர்னாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் முறைப்படி விருப்ப மனு அளித்தால் தமிழகச் சிறைக்கு மாற்றுவதற்கு 
தார்மீக அடிப்படையிலும், சட்ட விதிகளின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க
கர்னாடக அரசு மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இது போன்று ஏராளமானவர்கள் தொடர்ந்து சிறைச்சாலை மாற்றப்படுவது வழக்கமானதுதான் என்றார் அறிவழகன்.
அந்தந்த மாநில சிறைவிதிகள் பொருந்தும்:
வி.கண்ணதாசன் (சிறைக்கைதிகளுக்கான சிறப்பு வழக்கறிஞர்):
     சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டத்தின் படி  பெங்களூரு சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு சசிகலா மாற விரும்பினால் இதற்கான மனுவை தற்போதைய சிறையின் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளிக்க வேண்டும். இம்மனு அம்மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இக்கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிறைக்கைதிகளுக்கான பாதுகாப்பு, உடல் நலம், மருத்துவ வசதிகள், அமைதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் சசிகலா மற்றும் இருவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் விடுப்புகள், சலுகைகள் உள்ளிட்டவைகள் எந்த மாநில வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதோ அந்த மாநில சிறை விதிகள்தான் பொருந்தும். தற்போதைய நிலையில் இது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். இதற்காக மற்றவர்கள் வழக்கு ஏதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது, அது தேவையும் இல்லை என்றார் கண்ணதாசன்.
மறுஆய்வு மனுவால் மாற்றம் இராது:
எஸ்.நந்தகுமார்,(உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், டெல்லி):
      அரசியலமைப்புச் சட்ட விதி 32-ன்படி உச்சநீதிமன்றத்தில் நேரடியாகவே ரிட் மனு தாக்கல் செய்து கர்நாடகச் சிறையிலிருந்த தமிழக சிறைக்கு சசிகலா மாற்றிக்கொள்ளலாம். தண்டனை குறித்து மறு ஆய்வு செய்யக் கோரும் மனு என்பது தீர்ப்பு அளித்த நீதிபதிகள் முன்புதான் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் இதில் பயன் ஏதும் இருக்காது. நிச்சயமாகத் தள்ளுபடி செய்யும் வாய்ப்பே உள்ளது என்றார் 
சிறை மாற்றம் குறித்து பரிசீலனை: 
ஏ.நவநீதக்கிருஷ்ணன் (அதிமுக எம்.பி., வழக்கறிஞர் பிரிவு செயலாளர்):
     இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் தண்டனை குறித்த மறுஆய்வு 
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழு ஈடுபட்டு வருகிறது. இதன் பின்னர்தான் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான 
நடவடிக்கைகள் தொடங்கும். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின்
ஆலோசனைக்குப் பிறகே மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்  என்றார் நவநீதக்கிருஷ்ணன்.
      வி.கே.சசிகலாவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் எடப்படி கே. பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக வியாழக்கிழமை பதவி ஏற்றுள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அதிமுக முன்னணி தலைவர்களின் கருத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிறை மாற்றத்திற்கான நடவடிக்கைகள் சில தினங்களில் தொடங்கும் என்பதே தற்போதைய நிலை.
எண்ணெய் சிதறல்களை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணியில் தொடரும் சவால்கள்  

எளிமையான வழியைப் பின்பற்றாததே பிரச்னைக்குக் காரணம்?   

திருவொற்றியூர், பிப்.16:கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியின்போது சிதறிய எண்ணெய்ப் படிமங்களை தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு சிரமங்களால் தூய்மைப்படுத்தும் பணி சவாலாகவே உள்ளது.  
    எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜன.28-ல் எம்.டி. மாபில் என்ற கப்பல் மோதியதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் சேதமடைந்தது. இதிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை அருகே படலமாகத் தேங்கியது. இந்நிலையில் இதனை வாளிகள் மூலம் அகற்றும் பணி கடந்த ஜன.29-ம் தேதி முதல் பிப்.9-ம் தேதிவரை தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்றன. கடலோரக் காவல் படையினர் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  ஈடுபடுத்தப்பட்டனர். 
அப்போது மொத்தம் சுமார் 300 டன் வரை எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட எண்ணெய் கழிவுகள் அனைத்தும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இங்கு உயிரி தொழில்நுட்பம் மூலம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
தூய்மைப்படுத்துவதில் தொடரும் சவால்கள்: 
      இந்நிலையில் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும்போது ஏற்பட்ட சிதறல்களால் இப்பகுதி முழுதும் மாசடைந்துள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பணிகள் முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் எண்ணெய்ச் சிதறல்கள் தடுப்புச் சுவர் பாறாங்கற்கள் முழுவதும் பரவியுள்ளது.  எண்ணெயைக் கரைக்கும் ரசாயனம் கலந்த கலவையை முதலில் எண்ணெய்ச் சிதறல்கள் மீது தெளிக்கின்றனர். பின்னர் மிகுந்த அழுத்தத்துடன் பிஸ்டன்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து எண்ணெயைக் கரைக்கின்றனர். இருப்பினும் அவ்வளவு எளிதாக பணியாக இது இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் தூய்மைப்படுத்தப்படும் எண்ணெய் கலந்த தண்ணீர் மீண்டும் கடலில்தான் கலக்கிறது. இதனால் கடல் மணல் கருப்பாகி வருகிறது. மேலும் பாறாங்கற்களின் இடுக்குகளில் எண்ணெய்ச் சிதறல்கள் பெருமளவில் புகுந்துள்ளதால் இவற்றை 
அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல நாள்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்தாலும் முழுமையாக தூய்மைப்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே 
உள்ளது என்கிறார் இப்பகுதி சமூக சேவகர் கே.சுப்பிரமணி. 
திட்டமிடலில் தோல்வியே பிரச்னைக்கு காரணம்:
    எண்ணெய்ப் படலம் பாதுகாப்பான இடத்தில்தான் கரைஒதுங்கியிருந்தது. அவை மீண்டும் கடலுக்குள் அடித்து செல்லப்படும் வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் இது குறித்தெல்லாம் ஆய்வு செய்யாத கடலோரக் காவல்படை, மாசுக்கட்டுபாட்டு வாரிய
அதிகாரிகள் உடனடியாக எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் 
ஈடுபட்டனர். காரணம் மீனவர்களின் கொந்தளிப்பு, ஊடகங்களின் மூலம் பரவிய அழுத்தம் காரணமாக அகற்றல் பணியை உடனடியாகத் தொடர்ந்தனர். எனவே திட்டமிடும் முன்பே வேலையைத் தொடங்கினர் இப்பிரச்னைக்கு மூல காரணமாக உள்ளது.  மேலும் வேலை தொடங்கும்போது சுமார் 4 டன் மட்டுமே இருக்கலாம் என அணுமானித்து முதல் தவறு, குழாய்கள் மூலம் உரிஞ்சி எடுக்கத் திட்டமிட்டது  இரண்டாவது தவறு. இதனால் கெட்டியாக உள்ள எண்ணெயை கழிவுநீர் லாரிகள் மூலம் உரிஞ்சத் திட்டமிட்டு மூன்று லாரிகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு வாளிகள் மூலம் அகற்ற முற்பட்டது, எண்ணெய் படலத்தின் நச்சுத் தன்மையைக் கூட பரிசோதனை செய்யாமல் தன்னார்வலர்கள், மாணவர்கள் என அனைவரையும் பங்கெடுக்க வைத்ததுதான் தவறுகளின் உச்சகட்டம்  என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பாலசுப்பரமணி. 
எளிய வழியைப் பின்பற்றாதது ஏன்?
    எண்ணெய்ப் படலத்தை வாளிகள் மூலம் அகற்ற முற்படாமல் முறையாகத் திட்டமிட்டிருக்க வேண்டும். சுமார் 200 லாரிகள் கழிவுகள் இருக்கிறது என்பதை முன்பே கண்டறிந்திருக்க வேண்டும். பிறகு தடுப்புச் சுவர் பாறாங்கற்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றி கடற்கரைக்கு பாதை ஏற்படுத்தி இருக்க வேண்டும். பின்னர் தார் எடுத்துச் செல்லும் லாரிகளை தேங்கியிருந்த எண்ணெய் படலம் அருகே எடுத்துச் சென்றிருந்தால் எவ்வித சிரமமும் இல்லாமல், குறைந்த நாள்கள், மனித உழைப்பு சேமித்திருக்க முடியும். தார் லாரிகளின் எடுத்து சென்றிருந்தால் இவற்றை மறுபயன்பாட்டிற்கோ அல்லது மீண்டும் கப்பல் எரிபொருளாகவோ பயன்படுத்தியிருக்க முடியும் என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
     எப்படியோ ஒரு சிறிய பிரச்னையை பெரிதாகப் படம் பிடித்து தமிழகமே வியந்து எதிர்பார்க்கும் செய்தி கருப்பொருளாக மாறியதற்கு முன்யோசனை இல்லாத அதிகாரிகளின் செயல்பாடுகளும்தி, திட்டமிடுதலில் ஏற்பட்ட தோல்வியே முக்கிய காரணங்கள் என்பதே இப்பணி குறித்த பொதுமக்களின் மதிப்பீடாக உள்ளது. 

Thursday, 16 February 2017

உணவு பொருட்கள் முறையாக வழங்காததைக் கண்டித்து 
ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்  

திருவொற்றியூர், பிப்.15: திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் ரேஷன் கடையில் உணவு பொருட்களை முறையாக விநியோகம் செய்யாததைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி செயலாளர் எஸ்.பாக்கியம் கூறியது, 
  இங்குள்ள கடையில் கடந்த இரண்டு மாதங்களாக பாமாயில் வழங்கப்படவில்லை. மொத்தத்தில் துவரம்பருப்பு  300 கிலோ ஒருமாதத்தில் போடப்பட்டுள்ளது. இதனால்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான நாட்களில் அனைத்து பொருட்களும் காலியாகிவிட்டன என்றே கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியெனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 
ஒதுக்கீடு செய்யப்படும் பொருள்கள் எங்கே என்பதில் ஐயம் உள்ளது. இதனைக் கண்டித்தே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் பாக்கியம். 
   இதனையடுத்து உணவு பொருள் வழங்கல் துறை திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் நேரில் வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு வாரத்திற்குள் நிலுவையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர். 
வி.கே.சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகச் சிறைக்கு மாற்றப்படுவாரா?

விதிகளில் தடையில்லை: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

திருவொற்றியூர், பிப்.:சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 
வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பண அக்ரகாரா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தமிழகச் சிறைக்கு மாற்றுவதில் சட்டவிதிகள் ஏதும் தடையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து 
மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினர். இதனையடுத்து இங்குள்ள பரப்பண அக்ரகாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அப்போது சிறையில் முதல்வகுப்பு சிறைக் கைதிகளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் வி.கே.சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாயின. இது குறித்து சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்கள்:
எஸ். அறிவழகன் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர்):
    சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டம் 1950-ல் கூறப்பட்டுள்ள விதிகளின் படி 
எந்த ஒரு கைதியையும் ஒரு மாநிலத்திற்குள் உள்ள எந்த சிறைக்கும் சிறைக் கண்காணிப்பாளர்களே உடனடியாக மாற்றிவிட முடியும். ஆனால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கைதிகளை மாற்ற வேண்டும் எனில்
இரு மாநில அரசுகளின் ஒப்புதல்கள் தேவை. வி.கே.சசிகலா வழக்கினைப் பொருத்தவரை குற்றம் நிகழ்ந்த இடமே தமிழ்நாடுதான். வழக்கு விசாரணை மட்டுமே கர்னாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் முறைப்படி விருப்ப மனு அளித்தால் தமிழகச் சிறைக்கு மாற்றுவதற்கு 
தார்மீக அடிப்படையிலும், சட்ட விதிகளின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க
கர்னாடக அரசு மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இது போன்று ஏராளமானவர்கள் தொடர்ந்து சிறைச்சாலை மாற்றப்படுவது வழக்கமானதுதான் என்றார் அறிவழகன்.
அந்தந்த மாநில சிறைவிதிகள் பொருந்தும்:
வி.கண்ணதாசன் (சிறைக்கைதிகளுக்கான சிறப்பு வழக்கறிஞர்):
     சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டத்தின் படி  பெங்களூரு சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு சசிகலா மாற விரும்பினால் இதற்கான மனுவை தற்போதைய சிறையின் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளிக்க வேண்டும். இம்மனு அம்மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இக்கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிறைக்கைதிகளுக்கான பாதுகாப்பு, உடல் நலம், மருத்துவ வசதிகள், அமைதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் சசிகலா மற்றும் இருவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் விடுப்புகள், சலுகைகள் உள்ளிட்டவைகள் எந்த மாநில வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதோ அந்த மாநில சிறை விதிகள்தான் பொருந்தும். தற்போதைய நிலையில் இது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். இதற்காக மற்றவர்கள் வழக்கு ஏதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது, அது தேவையும் இல்லை என்றார் கண்ணதாசன்.
கோரிக்கை மனு அளிக்க வாய்ப்பு உள்ளது:
ஏ.நவநீதக்கிருஷ்ணன் (அதிமுக எம்.பி., மூத்த வழக்கறிஞர்):
     இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் தண்டனை குறித்த சீராய்வு மனு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழு ஈடுபட்டு வருகிறது. இதன் பின்னர்தான் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான 
நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் நவநீதக்கிருஷ்ணன்.
      அதிமுக பொதுச்செயலாளராக உள்ள வி.கே.சசிகலா தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் பதவியேற்க வேண்டும். இதற்கே ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்க வில்லை. இதில் குழப்பம் ஏதேனும் ஏற்பட்டால் பெங்களூருவிலேயே இருப்பதே பாதுகாப்பாக இருக்கும்.  எனவே தமிழகத்தில்  புதிய அரசு பதவி ஏற்ற பிறகு சூழ்நிலைக்குத் தகுந்தவாறே சிறைச்சாலை மாற்றம் குறித்து முடிவெடுப்போம் என்பதே சசிகலா தரப்பினரின் கருத்தாக உள்ளது.

போக்குவரத்து போலீஸாரின் தடை நடவடிக்கையால் முடங்கும் சென்னைத் துறைமுகம் 

திருவொற்றியூர், பிப்.13: போக்குவரத்துப் போலீஸாரின் தடை நடவடிக்கைகளால் 
சென்னைத் துறைமுக வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை அடிக்கடி ஏற்படுவதாக துறைமுக உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
    சென்னைத்துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவைகளில் பெரும்பாலான வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலை மூலமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்துப் போலீஸார் இப்போக்குவரத்துக்கு பல்வேறு தடைகளை விதித்து வருவதாகவும், இதனால் சென்னைத் துறைமுகமே அடிக்கடி முடங்கி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
அடிக்கடி தடை விதிக்கும் போலீஸார்: 
இது குறித்து சுங்கத்துறை ஏஜென்சியைச் சேர்ந்த என என்.கஜேந்திரன், ஜெகநாதன் ஆகியோர் கூறியது, 
   கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எர்ணாவூர் பாரதியார் நகரில் கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் கடற்ரையில் தேங்கியது. இதனை அகற்றும் பணி
தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைப் பார்வையிட முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போதெல்லாம் கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்தை போலீஸார் நிறுத்தி வைத்தனர். இதனால் அடுத்தடுத்த தினங்களுக்கு போக்குவரத்து நெரிசலின் தன்மை அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டது. 
   இந்நிலையில் எர்ணாவூரில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து கண்டெய்னர் போக்குவரத்து எண்ணூர் விரைவு சாலையில் தடை செய்யப்பட்டது. இதேபோல் துறைமுகத்திலிருந்து ஒரு லாரியும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து குறிப்பிட்ட கப்பல்களுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் திட்டமிட்டபடி அனுப்ப இயலவில்லை. சிலர் கூடுதலாக தண்டக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தடையால் மாதவரம்வரை சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு 
கண்டெய்னர் லாரிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. போக்குவரத்து தடை பிரச்னையால் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரிசெய்ய இன்னும் மூன்று நாள்களுக்கும் மேலாகும். இத்தனைக்கும் திங்கள்கிழமை இரவுவரை முதல்வர் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.
6 வழிச்சாலையால் பயன் என்ன?:
இது குறித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சாகுல்ஹமீது கூறியது, 
 எண்ணூர் விரைவு சாலை 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சாலையில் துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து என்ன இடையூறு ஏற்படப் போகிறது?. முக்கியப் பிரமுகர்களுக்கு 
பாதுகாப்பு அளிக்க வேண்டியது போலீஸாரின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் மற்றவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளால் தொழில் வளர்ச்சியே முடங்கிப் போயிருக்கும் நிலையில் போலீஸாரின் இது போன்ற தடைகளால் சென்னைத் துறைமுகம்  அடிக்கடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட காலமாக இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் மத்திய, மாநில
அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை தன்னிச்சையாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போலீஸார் இது போன்று தடைவிதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார் சாகுல்ஹமீது.

வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

திருவொற்றியூர், பிப்.13:தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகள் குறித்து யாரும் பொருள்படுத்தப்பட வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
    அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தற்போது கூவாத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வெளியேறிவிட்டதாக கடந்த இரு தினங்களாக வதந்திகள் பரவின. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை திங்கள்கிழமை பார்வையிட திருவொற்றியூர் வந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, இது குறித்து திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதன்மூலம் சிலர் ஆதாயம் அடைய திட்டமிடுகின்றனர். பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப்  பெற்ற அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார். 
எண்ணூரில் தீ விபத்து: 75 குடிசைகள் சாம்பல்

திருவொற்றியூர், பிப்.13:எண்ணூர் எர்ணாவூரில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 75 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. சேதமதிப்பு சுமார் ரூ.60 லட்சம்வரை ரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் புது குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தீ மளமளவெனப் பரவியது. இதனையடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு லாரிகள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.  இதனால் இப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் தீ விபத்திலிருந்து தப்பின. இருப்பினும் சுமார் 75 வீடுகள் முற்றிலும் சாம்பலாயின.
நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உயிர் தப்புவதையே 
முதல் நடவடிக்கையாக இருந்ததால் துணிமணிகள், புத்தகங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாயின. சேதமதிப்பு சுமார் ரூ.60 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர், எம்.எல்.ஏ. பார்வையிட்டனர்:
    இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு உடமைகள் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மாற்று தங்குமிடம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்தார். இதனையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இங்கு வந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய ஜெயக்குமார், இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தையும் அகற்றிவிட்டு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் மூலம் தீப்பிடிக்காத வீடுகளை அமைத்தல் அல்லது குடிசை மாற்று வாரியம் மூலம் விலையில்லா அடுக்குமாடி தொகுப்பு வீடுகளை அமைத்துத் தர  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தீ விபத்தால் ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அரசு நிவாரண உதவிகளை வழங்க ஏதுவாக கணக்கெடுக்கும் பணியை உடனடியாக 
மேற்கொள்ள வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். 
பங்களாதேஷ் கடலோரக் காவல்படை கப்பல் சென்னை வருகிறது

திருவொற்றியூர், பிப்.12:பங்களாதேஷ் நாட்டின் கடலோரக் காவல்படை கப்பலான தாஜூதீன் செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறது. இக்கப்பலை இந்தியக் கடலோரக்காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா 
நேரில் வரவேற்கிறார்.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
     நல்லெண்ணம் வளர்த்தல், பாதுகாப்பு தொழில்நுட்ப உத்திகளை பரிமாறுதல் உள்ளிட்டவைகள் மேம்படுத்தும் பணிகளை இந்திய கடலோரக் காவல்படை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பங்களாதேஷ் கடலோரக் காவல்படை
கப்பலான தாஜூதீன்  செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறது.  வரும் பிப்.17-வரை இக்கப்பல் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதேபோல் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பலான பகீரதர் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இதில் 
இதில் இரு நாட்டு வீரர்களும் கப்பல்களைப் பார்வையிடுவார்கள். பின்னர்
கடல்சார் மீட்பு மையத்தை பங்களாதேஷ் வீரர்கள் பார்வையிடுகின்றனர். அப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு கைப்பந்து போட்டி நடைபெறுகிறது. 
பின்னர் பிப்.17 இக்கப்பல் புறப்பட்டுச் செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Saturday, 11 February 2017

முத்தியால்பேட்டை மல்லிகேஸ்வர் மரகதாம்பாள் கோயில் மகாகும்பாபிஷேகம்  

திருவொற்றியூர், பிப்.9:தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றான சென்னை முத்தியால்பேட்டை  மல்லிகேஸ்வரர் உடனுறை மரகதாம்பாள் கோயில் 
மகாகும்பாபிஷேகம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. 
     இதற்கான விழா நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை கலசாபிஷேகம், யாகசாலை நிர்மாணம் உள்ளிட்டவைகளும், செவ்வாய்க்கிழமை பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும் நடைபெற்றன. புதன்கிழமை அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  இந்நிலையில் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு பூஜைகள் தொடங்கின. பின்னர் சுமார் 7.30 மணியளவில் ராஜகோபுரத்தின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது 
அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தி பரவசத்தில் ஈஸ்வரா, ஈஸ்வரா என உரத்த குரலில் கோசமிட்டனர். இதனையடுத்து கும்பாபிஷேக
நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஏ.ரமேஷ், குருக்கள் எஸ்.சேகர், காளிதாஸ் சிவாச்சாரியார் மற்றும் சிவனடியார்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம், தண்ணீர், மோர் பந்தல்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பு:

இழப்பீடு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம் 

கப்பல் போக்குவரத்து இயக்குனர் மாலினி சங்கர் தகவல்

திருவொற்றியூர், பிப்.6: விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக இழப்பீட்டு அலுவலகம் (Claims Desk) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது என கப்பல் போக்குவரத்து இயக்குனர் டாக்டர் மாலினி சங்கர் 
சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
    இது குறித்து சென்னைத் துறைமுகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாலினி சங்கர் கப்பல் விபத்து குறித்து அளித்த விளக்கம்:
     எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த பிப்.28-ம் தேதி மாபில், டான் காஞ்சிபுரம் ஆகிய டேங்கர் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக துறைமுக நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் விபத்தில் பலத்த சேதமடைந்த டான் காஞ்சிபுரம் கப்பல் மீட்கப்பட்டு பத்திரமாக காமராஜர் துறைமுகத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இதில் இருந்த 32 ஆயிரம் பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. மாபில் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்து துணை கடல்சார் ஆலோசகர் கேப்டன் கே.பி.ஜெயக்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைமுகங்களின் நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதிகபட்சமாக இரு மாதங்களுக்குள் விபத்துகான காரணம், கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 
குறித்து அறிக்கை அளிக்கும். விசாரணை முடியும்வரை கப்பல்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்படாது. மேலும் கடல்சார் வணிகச் சட்ட விதிகளின் படி விபத்துக்குள்ளான கப்பல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பெட்ரோலிய அமைச்சக கூடுதல் செயலாளர், கப்பல்த் துறை அமைச்சக இணைச் செயலாளர் சில தினங்களுக்கு முன்பு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இழப்பீடு வழங்க ஆயத்தம்:
      விபத்து குறித்து விசாரணை ஒரு புறம் நடைபெற்றுவரும் நிலையில் கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவால் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்களும் முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் எண்ணெய்க் கசிவு வெளியே டான் காஞ்சிபுரம் கப்பலுக்கு காப்பீடு அளித்துள்ள பி அன் ஐ என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை அளிக்கும். இதற்கான அலுவலகம்  எம்.எல்.எம். பில்டிங், 9, வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம். இழப்பீட்டைப் பெறுவது குறித்து மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே இழப்பீடு குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
கடல்சார் சட்டங்களின் படிதான் இழப்பீடு:
    இதற்கிடையே எண்ணெய்க் கசிவால் ரூ.123 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில மீன்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் பொத்தாம் பொதுவாக இத்தொகையை வழங்க முடியாது. சர்வதேச கடல்சார் சட்டங்களின் அடிப்படையில்தான் கப்பல் நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற முடியும். பாதிப்புகள் குறித்த புகார்களின் உண்மைத் தன்மை, ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகே காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்கும். எண்ணெய்க் கசிவுகளை அகற்றுவதற்கான செலவாகும் தொகை உடனடியாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் மாலினி.
    பேட்டியின்போது கப்பல் போக்குவரத்துத் துறை கூடுதல் இயக்குனர் அமிதாப் குமார், 
விசாரணை குழு தலைவர் கேப்டன் ஜெயக்குமார், துறைமுகத்தலைவர்கள் பி.ரவீந்திரன் (சென்னை), எம்.ஏ.பாஸ்கராச்சார் (காமராஜர்), கடலோரக்காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா ஆகியோர் உடன் இருந்தனர். 


மோதிய கப்பலின் மாலுமியின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம்:
எம்.ஏ.பாஸ்கராச்சார், காமராஜர் துறைமுகத் தலைவர்
  விபத்து ஏற்பட்டவுடன் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே துறைமுக நிர்வாகம் மெத்தனமாகச் செயல்பட்டது என்ற புகாரில் உண்மை இல்லை. மேலும் துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பலான மாபிலில் துறைமுகத்தின் மாலுமி கருணாநிதி சென்றுள்ளார். ஆனால் துறைமுகத் தடுப்புச் சுவரைக் கடந்தவுடன் இவரை இனி எவ்வித பிரச்னையும் இல்லை, இறங்கிச் செல்லலாம் என கப்பலின் மாலுமி கூறியுள்ளார். எனவே அவர் கப்பலிலிருந்து இறங்கிவிட்டார். அப்போதுதான் டான் காஞ்சிபுரம் துறைமுகத்தின் கடல் எல்லைக்கு  உள்ளே நுழைய ஆயத்தமாகியுள்ளது. இந்தக் கப்பலில் காமராஜர் துறைமுகத்தின் மாலுமியான டேனியல் என்பவர் இருந்துள்ளார். அப்போது விபத்து ஏற்படும் வாய்ப்பு இருந்ததையடுத்து மாபில் கப்பலின் மாலுமியை கருணாநிதி தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் எச்சரித்துள்ளார். ஆனால் அதனை மாபில் கப்பலின் மாலுமி கவனத்தில் கொள்ளவில்லை. இதனையடுத்துதான் விபத்து ஏற்பட்டது. உடனடியாக மாலுமி கருணாநிதி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுதான் இந்த விபத்தின் முதற்கட்ட தகவல்கள். ஆனால் விபத்துக்கான முழுமையான காரணங்கள் விசாரணைக் குழுவின் அறிக்கையில்தான் தெரிய வரும் என்றார் பாஸ்கராச்சார். 
எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியை 
முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார் 

திருவொற்றியூர், பிப்.5:விபத்துக்குள்ள கப்பலிலிருந்து வெளியேறி கடற்கரையில் படிந்துள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். 
     கரை ஒதுங்கிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர், மத்திய, மாநில அரசுத் துறைகள், நிறுவனங்கள், மீனவர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மொத்த எண்ணிக்கையில்  5,700 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.  இந்நிலையில் எண்ணெய் படலம் அகற்றும் பணி நடைபெற்று வரும் எர்ணாவூருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.சி.கருப்பண்ணன், பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு துறை செயலாளர்கள் வந்தனர். 
பின்னர் பணிகள் குறித்து கடலோரக் காவல்படை கமாண்டர் ராஜன் பர்கோத்ராவிடம் கேட்டறிந்தார். அப்போது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதி முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது எனவும், மீதமுள்ள கடற்கரைப் பகுதிகள் இன்னும் ஓரிரண்டு நாட்களில் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் எனவும் 
அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் எர்ணாவூர் பகுதியிலுள்ள கடலோர தடுப்புச் சுவர் பாறைகளில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை தூய்மைப்படுத்தும் பணி நிபுணர்கள் குழு மேற்பார்வையில் மேற்கொண்டு விரைவில் முடித்திடுமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மீன் மாதிரிகளை  தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு  பொதுமக்கள் சாப்பிடுவதற்கு தகுதியானதென 
அளித்துள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.  பின்னர் தலைமைச் செயலகத்தில் இப்பிரச்னை குறித்து விரிவான ஆலோசனை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. 

ஏழாவது நாளாகத் தொடரும் எண்ணெய்ப் படலம் அகற்றும் பணி

கண்காட்சிகூடமாக மாறிய எர்ணாவூர் கடற்கரை

திருவொற்றியூர், பிப்.4:கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை 
அகற்றும் பணி ஏழாவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது. இந்நிலையில் இப்பகுதியே கண்காட்சிக் கூடமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
   எண்ணெய்ப் படலத்தை இயந்திரங்களைக் கொண்டு அகற்ற கடலோரக் காவல் படையினர் முடிவு செய்தனர். ஆனால் அது இயலாததால் ஆள்கள் மூலம் இதனை அகற்றும் பணி தொடங்கியது. முதலில் எண்ணெய்க் கழிவு 4 டன் அளவிற்கே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏழாவது நாளான சனிக்கிழமை இரு நூறு டன் அளவைத் தாண்டிவிட்டது. இப்பணியில் பல் துறை ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
கண்காட்சி கூடமாக மாறி வரும் கடற்கரை:
    இந்நிலையில் இதனைப் பார்வையிட நூற்றுக்கணக்கானக பொதுமக்கள் சாரை சாரையாக வந்து பார்வையிடுகின்றனர். வழுக்கி விழும் ஆபத்து நிறைந்த பாறாங்கற்களில் பொதுமக்கள் ஏறி வருவதை போலீஸாரும் தடுப்பதில்லை. 
மீனவர்கள் பணியில் ஈடுபட்டதையடுத்து இதன் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனையடுத்து எண்ணூர் துறைமுகம் சார்பில் சுமார் ஆயிரம் பேருக்கு தொடர்து உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை விநியோகிக்கவும், வாங்கிச் செல்லவும் போட்டியிடும் நிலையும் நீடிக்கிறது. பொதுமக்கள் அதிகம் திரளுவதால் தாற்காலிக தள்ளுவண்டிக் கடைகளும் அதிகரித்துள்ளன. மேலும் தினமும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் தலைவர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் வந்தவாறு உள்ளனர். அவர்களைச் சுற்றியொரு தொண்டர்கள் கூட்டம் என கண்காட்சிக் கூடமாகவே களைகட்டுகிறது எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை.
ஆபத்தை உணராத செய்தியாளர்கள்

கடந்த நான்கு நாள்களாக ஒரே மாதிரியான செய்திகளை நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம்வரை கேமராக்களுடன் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை மீனவர்கள் வசூலிப்பதைக் காண முடிந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய செய்தியாளர்கள் எவ்வித பாதுகாப்பு சாதனங்களையும் அணியாமல், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக பயணிப்பது சரிதானா? மேலும் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைவுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகளை துறைமுக அதிகாரிகள் எழுப்புகின்றனர். 



ஆபத்தை உணராத செய்தியாளர்கள்

கடந்த நான்கு நாள்களாக ஒரே மாதிரியான செய்திகளை நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம்வரை கேமராக்களுடன் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை மீனவர்கள் வசூலிப்பதைக் காண முடிந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய செய்தியாளர்கள் எவ்வித பாதுகாப்பு சாதனங்களையும் அணியாமல், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக பயணிப்பது சரிதானா? மேலும் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைவுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகளை துறைமுக அதிகாரிகள் எழுப்புகின்றனர். 
சேதமான கப்பல் கேப்டனிடம் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை 

திருவொற்றியூர், பிப்.4:விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த கப்பலான டான் காஞ்சிபுரத்தின் கேப்டனிடம் தரைவழிப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்  கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.
     கடந்த ஜன.28-அன்று ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 32 ஆயிரம் டன் டீசல் மற்றும் ஸ்பிரிட் இறக்கப்பட்டுவிட்டன. இதனைடுத்து இக்கப்பல் துறைமுகத்தில் உள்ள திரவ முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 
இதன் மீது மோதி சேதம் விளைவித்த மாப்பில் என்ற கப்பல் துறைமுகத்திற்கு வெளியே 
நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து குறித்து கடல்சார் வணிகத் துறை  விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. 
அதற்கடுத்தபடியாக கடல்சார் துறை பொது மேலாளர் ஏ.கே.குப்தா மீஞ்சூர் காவல்நிலையத்தில் விபத்து குறித்து புகார் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து கடந்த ஐந்து நாள்களாக பல்வேறு தரப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பெற்று வருகிறது. இருப்பினும் விபத்துக் காரணங்கள், மனிதத் தவறுகள், நிர்வாகக் குளறுபடிகள் குறித்த பல்வேறு யூகங்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.
கப்பல் கேப்டனிடம் 2 மணி நேரம் விசாரணை: 
    இந்நிலையில் துறையின் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் துறைமுகத்திற்கு சனிக்கிழமை திடீரென வந்தார். பின்னர் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டான் காஞ்சிபுரம் கப்பலை பார்வையிட்டார். பின்னர் கப்பலின் உள்ளே சென்ற அமைச்சர், கப்பலின் கேப்டனை அழைத்து நேரில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது துறைமுகத் தலைவர்கள் பி.ரவீந்திரன் (சென்னை), எம.ஏ.பாஸ்கராச்சார் (எண்ணூர் காமராஜர்) ஆகிய இருவர் மட்டும் உடனிருந்தனர். 
பின்னர் துறைமுக அதிகாரிகளுடன் சில விபரங்களைக் கேட்டறிந்தார். கப்பல் கேப்படனிடம் நடத்திய விசாரணை குறித்து எவ்வித தகவலையும் அமைச்சர் 
ராதாகிருஷ்ணன் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவிப்பது நடைபெற்று
வரும் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்பதால் தவிர்த்துவிட்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். 
கடற்கரையில் அகற்றப்பட்ட எண்ணெய்க் கழிவுகளை

உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிக்கும் பணி தொடங்கியது

3 மாதங்களில் மக்கிப் போகும்: விஞ்ஞானிகள் தகவல் 

திருவொற்றியூர், பிப்.4: சென்னை எர்ணாவூர் கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு வரும் எண்ணெய்க் கழிவுகளை உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்கான பணிகள் ஹரியானா மாநிலம் பரிதாபாதில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை விஞ்ஞானிகள் முன்னிலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் 
நடைபெற்று வருகிறது. 
    எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜன.28-ல் நடைபெற்ற விபத்தில் இரண்டு கப்பல்கள் மோதியதையடுத்து சேதமடைந்த கப்பலிலிருந்து எண்ணெச் கசிவு ஏற்பட்டது. இது எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையொட்டி படிந்துள்ளது. சுமார் 200 டன் எடையுள்ள இந்த எண்ணெய்க் கழிவுகள் ஆள்கள் மூலம் கடந்த ஒரு வாரமாக அகற்றப்பட்டு வருகிறது. அகற்றப்பட்டு வரும் கழிவுகளை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் எவ்வாறு அழிக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் பொதுமக்கள், 
சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 
உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிப்பு:
     இந்நிலையில் எண்ணெய்க் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டு வரும் எண்ணெய்க் கழிவுகள் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே உள்ள காலியான இடத்தில் சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு சுமார் ஒன்றரை அடி அளவில் பள்ளம் தோண்டப்பட்டு இதன்மீது தார்பாலின் பாய்கள் விரிக்கப்பட்டன. பின்னர் எண்ணெய்க் கழிவுகளும், மணலும் கலக்கப்பட்டது. இதில் மைக்ரோசோம்ஸ் (Microsomes) என்ற நுண்ணுயிரிகள் மற்றும் ஊட்டச் சத்துகள் (Nutrients) இக்கலவையுடன் சேர்க்கப்பட்டன. இதற்கான செயல் விளக்கத்தை பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை விஞ்ஞானிகள் எஸ்.கே.பூரி, எம்.கே.உப்ரேதி ஆகியோர் செய்து காண்பித்தனர்.
சுற்றுச் சுழலுக்கு சேதம் விளைவிக்காது: விஞ்ஞானிகள் விளக்கம்
அப்போது விஞ்ஞானிகள் இருவரும் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்:
   கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவு கடல் நீரோடு கலந்து சேறு (Sludge) போல் மாறிவிட்டது. இதனை மீண்டும் உபயோகப் படுத்தவோ, கச்சா எண்ணெயுடன் கலந்து சுத்திக்கரிக்கவும் முடியாது. அவ்வாறு கலந்தால் சுத்திக்கரிக்கப்படும் முறையில் பாதிப்புகள் ஏற்படலாம். இதில் பல்வேறு வகையான் ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. எனவே வேறு வகையில் எரித்தால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படும். எனவே இது குறித்து ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றன. இதில் இந்த உயிரி தொழில்நுட்பம் (Bio Remedian) கண்டறியப்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சுமார் 200 டன் எண்ணெய்க் கழிவுகள் இவ்வாறு கலவையிடப்பட்டு பள்ளத்தில் பரவப்படும். இதற்கான பணிகள் நான்கு நாள்களில் நிறைவுறும். பின்னர் இக்கலவையில் உள்ள எண்ணெய் கழிவுகள் மக்கும் தன்மை 
தொடர்ந்து கண்காணிக்கப்படும். சுமார் 3 மாதங்களில் முற்றிலுமாக வளமான மண்ணாக மாறிவிடும். இதனை மரம் வளர்ப்பது முதல் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்தலாம். ஒரு டன் எண்ணெய்க் கழிவுக்கு ஒரு கிலோ நுண்ணுயிரி கலவை பயன்படுத்தப்படும். இத்தொழில்நுட்பம் மூலம் முற்றிலுமாகச் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். 
வெறும் மணலால் மட்டுமே மக்காது:
     எண்ணெய்க் கழிவுகளை வெறும் ஆற்றுமணல், கடற்கரை மணல் மூலம் மக்கச் செய்ய முடியாது. நுண்ணுயிரிகள் கலக்கப்படுவதன் மூலம்தான் இயற்கையாக எண்ணெய்க் கழிவுகள் மக்கிப் போகும். தார்பாலின் பாய்கள் கீழே விரிப்பது இக்கலவை கீழே புதையாமல் இருப்பதற்குத்தான். மேலும் சாதாரண மழையால் இச்செயல்முறை பாதிக்கப்படாது. ஆனால் பெருவெள்ளம் ஏற்பட்டால் பாதிப்பு இருக்கக் கூடும். இருப்பினும் தற்போதைய இடத்தில் எவ்வித பாதிப்பிற்கும் வாய்ப்பு இல்லை. எண்ணெய் சுத்திக்கரிப்பு ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய்க் கழிவுகள் இந்த முறையில்தான் அழிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் 
ஒரு கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் இந்த முறையில்தான் அழிக்கப்பட்டன. எனவே எதிர்காலத்தில் எத்தகைய எண்ணெய்க் கழிவுகளையும் நுண்ணுயிரி தொழில்நுட்பம் மூலம அழிக்க முடியும். எண்ணெய்க் கழிவு தேங்கியுள்ள கடற்கரையிலேயே இச்செயல்முறை செய்வது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
  எண்ணெய்க் கழிவு குறித்த தகவல்கள் கப்பல்த் துறை அமைச்சகம் மூலம்
பெட்ரோலிய அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அஜய் பிரகாஷ் எண்ணூர் துறைமுகத்திற்கு 
வந்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்கு இத்திட்டம் அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்  துறையின் முக்கிய அதிகாரிகளுடன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார். இதனையடுத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இச்செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், மேலும் இதன் மூலம்  எண்ணெய்க் கழிவுகளை அழிப்பது குறித்த பொதுமக்களின் அச்சம் முடிவுக்கு வரும் என இந்தியன் ஆயில் கார்போரேசன் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கப்பல் விபத்து குறித்து தகவல் தெரிவிப்பதில் தாமதம் இல்லை

கடலோரக் காவல் படையின் புகாருக்கு காமராஜ் துறைமுகம் மறுப்பு 

திருவொற்றியூர், பிப்.3:கப்பல்கள் விபத்துக்குள்ளானது குறித்த தகவல் தாமதமாகவே தங்களுக்கு தெரிவிக்கப்பட்டது என கடலோரக் காவல்படை பிராந்திய தளபதி வெள்ளிக்கிழமை தெரிவித்த புகாருக்கு காமராஜர் துறைமுக நிர்வாகம் மறுப்பும், விளக்கமும் தெரிவித்துள்ளது.
இது குறித்து துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கடந்த சனிக்கிழமை விபத்து நடந்தவுடன் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் இந்த இடத்திற்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து விபரங்களும் முடிந்த அளவு சேகரிக்கப்பட்டன. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை, சுற்றுச் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இது உடனடியாக ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. பின்னர் ஜன.30 தேதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடையாளம் காண முடியாத வகையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடைபெற்று மிகக் குறைந்த கால அளவில் கடலோரக் காவல்படைக்கு துறைமுக அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து ஹெலிகாப்டர், கப்பலில் 
கடலோரக் காவல்படையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் எண்ணெய் கசிவை அகற்றும் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு ஒன்றரை நாள்களுக்குப் பிறகே கரையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடுக்கடலில் பரவிய எண்ணெய் படலத்தை 
இருட்டின் காரணமாக துறைமுக அதிகாரிகள் முழுமையாக அறிய முடியவில்லை. 
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அது தற்போது 
நடைபெற்று வரும் நிலையில் அரசு சார்ந்த இன்னொரு துறை துறைமுக நிர்வாகத்தின் மீது உண்மைக்கு மாறான தகவல்கள், புகார்களைத் தெரிவிப்பது முறையானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆழ் கடல் பகுதியில் பரவியிருந்த எண்ணெய் மாசு முற்றிலும் அகற்றம்

கடலோரக் காவல் படை அறிவிப்பு

திருவொற்றியூர், பிப்.3:விபத்துகுள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய ஆழ்கடலில் படர்ந்திருந்த எண்ணெய் மாசு முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது என கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்ஹோத்ரா வெள்ளிக்கிழமை அறிவித்தார். 
    கடந்த சனிக்கிழமை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்த கப்பலிலிருந்து வெளியேறிய எரிவாயு எண்ணெய் எர்ணாவூர் கடற்கரை பகுதியை அடைந்தது. இதனை அகற்றும் பணி ஆறாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடற்பகுதியில் மீன்கள், ஆமைகள் செத்து மிதப்பதாகவும், பல கி.மீ. தூரத்திற்கு எண்ணெய்ப் படலம் பரவியுள்ளதாகவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.
எண்ணெய் படலம் கலைத்து அழிப்பு: 
   இந்நிலையில் இரு இடங்களில் எண்ணெய் படலங்கள் மிதப்பதாக 
கடலோரக் காவல் படை வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதனை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை கடலோரக் காவல் படை மேற்கொண்டது. 
இப்பணியை விளக்குவதற்காக வரத் என்ற ரோந்துக் கப்பலில் பத்திரிகையாளர்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர். அப்போது காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார்  10 கடல் மைல் தூரத்தில் பரவியிருந்த எண்ணெய் படலத்தின் மீது கப்பலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கருவிகள் மூலம் 
எண்ணெய் கசிவு கலைப்பான் (OSD-Oil Spill Dispersant) பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதனையடுத்து அப்போது எண்ணெய் படலத்தின் வண்ணம் மாறி பிறகு கடல்நீரோடு கலந்து படலம் இருந்த சுவடே தெரியவில்லை. பின்னர் எண்ணூர் துறைமுகத்திலிருந்து 
திருவான்மியூர் வரையிலான கடல்பகுதியில் செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது எங்கும் எண்ணெய்க் கசிவுகளைக் காண முடியவில்லை 
எண்ணெய் மாசு முற்றிலும் அகற்றம்:
அப்போது கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியது,
   ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் படலங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன என்பதை அறிந்து கொள்வதற்காகவே பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டனர். தற்போது எவ்வித மாசும் இல்லை. எனவே வீணாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதற்கு எண்ணெய்க் கசிவு காரணம் இல்லை. ஆமைகள் இறந்து போவது என்பது வயது முதிர்வு, கப்பல்களில் சிக்குவது போன்ற காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம். எனவே மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் தாராளமாக மீன்களை சாப்பிடலாம். 
4 நாள்களில் மெரினா தூய்மையாகும்:
    சென்னைத் துறைமுகத்திற்கு தெற்கே மெரினா, பட்டணம்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் பரவியுள்ள எண்ணெய் கசிவு மாசு இன்னும் 4 நாள்களில் முற்றிலுமாக அகற்றப்படும். கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தில் சுமார் 10 சதவீதம் மட்டுமே இப்பகுதிக்கு வந்தடைந்ததுள்ளது. மீதமுள்ள 90 சதவீதம் எர்ணாவூர் கடற்கரையை அடைந்துவிட்டன. இதனை அகற்றும் பணியில் மாநில அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் 
ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 176 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எண்ணெய் கசிவு என்று கூறிவிட முடியாது. இதில் மண், தண்ணீர் உள்ளிட்டவை கலந்துள்ளன. எனவே கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெயின் அளவு குறித்து துள்ளியமாக அறிய முடியவில்லை. இதனை அகற்றி, தூய்மைப்படுத்தும் முற்றிலுமாக முடிய சுமார் ஒரு வார காலம் ஆகும்.
விபத்து குறித்து தாமதமாகவே தகவல்:
    விபத்து நடைபெற்று இரண்டரை மணி நேரத்திற்கு பிறகுதான் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக ரோந்துக் கப்பல் ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வந்தடைந்தன. அப்போது முதல்கட்டமாக சேதமடைந்த கப்பலின் நிலை, கப்பல் சிப்பந்திகளின் நலன், சுற்றுச்சூழல் பாதிப்பு குறி்த்த ஆய்வு மூன்று காரணிகள் மீதுதான் கவனம் செலுத்தினோம். பெரிய விபத்து, குறைவான எண்ணெய்க் கசிவு என்பதுதான் எங்களின் அப்போதைய முடிவாக இருந்தது. இதற்குள் ஏற்கனவே வெளியாகியிருந்த எண்ணெய்க் கசிவு கடற்கரையை அடைந்துவிட்டது. உடனடியாக அவற்றையும் அகற்ற முயற்சி மேற்கொண்டோம். அது எளிதாக இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் உதவி கோரப்பட்டு பல்வேறு துறைகளும் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனவே கடலோரக் காவல்படையின் மெத்தனப்போக்கால்தான் இப்பிரச்னை பெரிதாகியது என்பதில் உண்மை இல்லை. கப்பல் விபத்துக்கு என்ன காரணம், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது விசாரணை நடத்துவது கடலோரக் காவல்படையின் பொறுப்பு அல்ல. இவ்விசாரணை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது என்றார் ராஜன் பர்ஹோத்ரா.

பெட்டிச் செய்தி:

விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை:
கப்பலில் உடன் வந்த சென்னைத் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது,
  சேதமான கப்பலில் இருந்து சரக்குகள் முற்றிலுமாக இறக்கப்பட்டுவிட்டன. இரண்டு கப்பல்களும் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 
விபத்துக்குக்கான காரணம் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த கப்பல்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டதையடுத்து கேப்டன் சுபாஷ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சார்பில்இணைச் செயலாளர்கள் நேரில் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். எண்ணெய்க் கசிவின் மாதிரி சேகரிக்கப்பட்டு வியாழக்கிழமை பரிதாபாத்தில் உள்ள மைய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்தின் தன்மை குறித்து தனியார் மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் தெரியவரும். அப்போது தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ரவீந்திரன்

Friday, 3 February 2017

எண்ணெய்க் கசிவு பிரச்னையால் மீன்களை வாங்க மறுக்கும் பொதுமக்கள் 

வதந்தியால் பரவும் பீதி 

திருவொற்றியூர்,பிப்.2:எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து கடல் மீன்களை பொதுமக்கள் வாங்க மறுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வீணாகப் பரப்பப்படும் வதந்தியால் பொதுமக்கள், மீனவர்களிடையே பீதி நிலவுகிறது. 
ஆமைகள் சாவுக்கு எண்ணெய் கசிவு காரணமா?
    விபத்தில் சிக்கிய கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவு எர்ணாவூர் கடற்கரையில் படலமாக ஒதுங்கியது. அப்போது இதனுடன் ஆமை ஒன்றும் செத்து மிதந்தது. இதேபோல் மெரினா கடற்கரையிலும் ஒரு ஆமை ஒதுங்கியது. பிறகு ஆய்வு செய்தபோது அழுகிய நிலையில் காணப்பட்ட ஆமை ஏற்கனவே இறந்து போயிருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் அதற்குள்ளாகவே எண்ணெய்க் கசிவால் ஆமைகள் செத்தன, மீன்கள் செத்து மிதக்கின்றன என பெரும்பாலான ஊடகங்கள் பரபரப்பாக ஒளிபரப்பின. நாளேடுகள் செய்திகள் வெளியிட்டின. இதனையடுத்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இதே கருத்தில் பேட்டியளிக்கத் தொடங்கினர்.  இதனால் கடலே மாசுபட்டுள்ளது போன்ற வதந்தி பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டது. எண்ணெய் படலம் முழுவதுமாக கரையை எட்டிவிட்ட போதிலும் புதன்கிழமை பெரிய ஆமை ஒன்று எவ்வித எண்ணெய் ஒட்டிய அடையாளமுன் இன்றி எர்ணாவூர் கடற்கரையில் ஒதுங்கியது. ஆமைகள் சுமார் 200 ஆண்டுகள் உயிர்வாழக் கூடியது. லட்சக் கணக்கான ஆமைகள் வாழும் வங்கக் கடலில் அவ்வப்பது ஒன்றிரண்டு ஆமைகள் இறந்து போன நிலையில் வெளியேறுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பீதியைக் கிளப்பி வருவதே இப்பிரச்னைக்கு மூல காரணமாக உள்ளது.
மீன்களை வாங்க மறுக்கும் பொதுமக்கள்:
  சுனாமியின் போது மனித சடலங்களை மீன்கள் உண்டன எனப் பரவியதையடுத்து 
மீன்கள் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்தனர். இதேபோல் தற்போது மாசடைந்த எண்ணெய்க் கழிவுகளை மீன்கள் சாப்பிடுவதாக பரவிய செய்தியை அடுத்து 
பெரும்பாலானோர் மீன்களை வாங்க மறுப்பதாக மீனவ பெண்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். ஊடகங்களில் தொடர்ச்சியாக எண்ணெய் படலம் அகற்றுவது குறித்த பரபரப்பு செய்திகளால் தொடர்ந்து இந்த எண்ணம் பொதுமக்களிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. பொதுவாகவே கட்டுமரங்களைத் தவிர கரையோரத்தில் 
மீன்பிடிக்கப்படுவதில்லை. ஆனால் 7 நாள்கள்வரை  ஆழ்கடல் சென்று விசைப்படகுகள் பிடித்து வரப்படும் பெரிய ரக மீன்களையும் பொதுமக்கள் வாங்குதில் அச்சம் நிலவுகிறது. இதனால் காசிமேடு மீன்சந்தையில் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய விலை கிடைக்காததையடுத்து நட்டத்திற்கு உள்ளான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதலை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இதேபோல் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கட்டுமரம், பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 
கண்காட்சியாக மாறிய எர்ணாவூர் கடற்கரை:
    எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை ஆள்கள் மூலம் தொடர்வதால் நாள் கணக்கில் நீடிக்கிறது இப்பிரச்னை. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் நேரடியாக விவரிக்கப்படுகின்றன. இதனால் ஆர்வமடையும் பொதுமக்கள் சாரைசாரையாக 
இங்கு வருவதை வழக்கமாக்கிவிட்டனர். இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோரக் கடைகள் உள்ளிட்டவை பெருகிவிட்டன. மேலும் எங்கு பார்த்தாலும் பாறாங்கற்களில் எண்ணெய்க் கசிவு சிதறியுள்ள நிலையில் வழுக்கி விழும் அபாயத்தை உணராத பொதுமக்கள் குடும்பத்தோடு வருகின்றனர் என்பதை பார்க்க முடிந்தது. 
மீனவர்களிடையே விழிப்புணர்வு இல்லை:
   எண்ணெய் படலம் தேங்கியிருந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. இந்த இடத்தில் ஒரு கட்டுமரம் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் மீனவர்கள் 
தங்களது வாழ்வாதாரம்  பறிபோய்விட்டாதாக ஊடகங்களில் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனையடுத்து மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க உள்ளதாக
அரசு அறிவித்தது. மேலும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஒவ்வொரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு தினக்கூலி ரூ.500 அளிக்கும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது மீனவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக தெரிந்தாலும் மீன்கள் குறித்து பொதுமக்களிடையே பரவி வரும் எதிர்வரும் கருத்து 
மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதை மீனவர்கள் உணரவில்லை. இதில் அரசியல்வாதிகள் புகுந்து கணிசமாகச் சம்பாதிக்கும் முயற்சியும் தொடர்கிறது. 


ஆபத்தை உணராத செய்தியாளர்கள்

கடந்த நான்கு நாள்களாக ஒரே மாதிரியான செய்திகளை நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம்வரை கேமராக்களுடன் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை மீனவர்கள் வசூலிப்பதைக் காண முடிந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய செய்தியாளர்கள் எவ்வித பாதுகாப்பு சாதனங்களையும் அணியாமல், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக பயணிப்பது சரிதானா? மேலும் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைவுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகளை துறைமுக அதிகாரிகள் எழுப்புகின்றனர்.