Friday, 3 February 2017

எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

2 இடங்களில் எண்ணெய் படலம்: கடலோரக் காவல் படை விரைவு

திருவொற்றியூர், பிப்.1:சென்னை எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரையில் தேங்கியுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஒரே நேரத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாளில் எண்ணெய் படலம் முற்றிலும் அகற்றப் பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இரு கப்பல்கள்  மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த கப்பலிலிருந்து வெளியேறிய எரிபொருள் எண்ணெய் சுமார் 200 டன் அளவிற்கு எர்ணாவூர் கடற்கரை அருகே தேங்கியது. இதனை அகற்றும் பணியை கடலோரக் காவல் படையினர் கடந்த திங்கள்கிழமை தொடங்கினர். ஆனால் அவர்களிடம் உள்ள கருவிகள் மூலம் உரிஞ்சி இழுக்கும் கருவிகள் மூலம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து ஆள்களைக் கொண்டு வாளிகள் மூலம் 
அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இப்பணியில் மாநகராட்சி, கழிவு நீர் அகற்றல் வாரிய, துறைமுக ஊழியர்கள் கடலோரக் காவல் படையினர் இணைந்தனர். இருப்பினும் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து தலைமைச்செயலாளர் தலைமையில்  செவ்வாய்க்கிழமை அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தில், இப்பிரச்னை குறித்து போதிய முன் அனுபவம், போதிய தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில் கூடுதல் ஆள்களை ஈடுபடுத்துவதன் மூலம் எண்ணெய் படலத்தை விரைவாக அகற்றி விடலாம் என முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:
    இஇதனையடுத்து புதன்கிழமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை துணை இயக்குனரும் இது போன்ற பணிகளில் நீண்ட அனுபவம் பெற்றவருமான 
மீனாட்சி விஜயகுமார் தலைமையில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 150 வீரர்கள் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் கடலோரக் காவல்படை, சென்னை, எண்ணூர் காமராஜர், அதானி துறைமுகங்களின் ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள், கழிவு நீர் அகற்றல் வாரியம், இந்தியன் ஆயில் கார்போரேசன், ஊரகப் பணித்துறை, தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், மீனவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதன்கிழமை ஒரே நேரத்தில் இப்பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதன்கிழமை மட்டும் சுமார் 50 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் படலம் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு சேகரிக்கப்படும் எண்ணெய்ப் படலம் தொட்டிகள் மூலம் காமராஜர் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டது. 
மேலும் 2 இடங்களில் எண்ணெய் படலம்:  ரோந்துக் கப்பல் விரைவு 
     கடந்த மூன்று நாள்களில் சுமார் மட்டும் சுமார் 90 டன் அளவிற்கு எண்ணெய் படலம் அகற்றப்பட்டு விட்ட நிலையில், இந்த இடத்தில் மட்டும் இன்னும் இரண்டு மடங்கு எண்ணெய் அகற்றப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரோந்து சென்ற ஹெலிகாப்டர் அளித்த தகவல்களின் பேரில் எண்ணூர் துறைமுகம் அருகே 100 மீட்டர் அளவிற்கும், காசிமேடு மீன் பிடித் துறைமுகம் அருகில் 50 மீட்டர் அகலம், நீளத்திற்கு எண்ணெய்படலம் கடலில் மிதப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இதற்கான சிறப்பு உபகரணங்கள் அடங்கிய வரத் என்ற ரோந்துக் கப்பல் இப்பகுதிக்கு விரைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. 
அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு:
    எண்ணெய் அகற்றும் பணியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். மேலும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும்  மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ராா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை துறைமுகத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 

No comments:

Post a Comment