எண்ணெய்க் கசிவு பிரச்னையால் மீன்களை வாங்க மறுக்கும் பொதுமக்கள்
வதந்தியால் பரவும் பீதி
திருவொற்றியூர்,பிப்.2:எண்ணெய் க் கசிவால் ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து கடல் மீன்களை பொதுமக்கள் வாங்க மறுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வீணாகப் பரப்பப்படும் வதந்தியால் பொதுமக்கள், மீனவர்களிடையே பீதி நிலவுகிறது.
ஆமைகள் சாவுக்கு எண்ணெய் கசிவு காரணமா?
விபத்தில் சிக்கிய கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவு எர்ணாவூர் கடற்கரையில் படலமாக ஒதுங்கியது. அப்போது இதனுடன் ஆமை ஒன்றும் செத்து மிதந்தது. இதேபோல் மெரினா கடற்கரையிலும் ஒரு ஆமை ஒதுங்கியது. பிறகு ஆய்வு செய்தபோது அழுகிய நிலையில் காணப்பட்ட ஆமை ஏற்கனவே இறந்து போயிருந்தது என்பதுதான் உண்மை. ஆனால் அதற்குள்ளாகவே எண்ணெய்க் கசிவால் ஆமைகள் செத்தன, மீன்கள் செத்து மிதக்கின்றன என பெரும்பாலான ஊடகங்கள் பரபரப்பாக ஒளிபரப்பின. நாளேடுகள் செய்திகள் வெளியிட்டின. இதனையடுத்து சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் இதே கருத்தில் பேட்டியளிக்கத் தொடங்கினர். இதனால் கடலே மாசுபட்டுள்ளது போன்ற வதந்தி பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பிவிட்டது. எண்ணெய் படலம் முழுவதுமாக கரையை எட்டிவிட்ட போதிலும் புதன்கிழமை பெரிய ஆமை ஒன்று எவ்வித எண்ணெய் ஒட்டிய அடையாளமுன் இன்றி எர்ணாவூர் கடற்கரையில் ஒதுங்கியது. ஆமைகள் சுமார் 200 ஆண்டுகள் உயிர்வாழக் கூடியது. லட்சக் கணக்கான ஆமைகள் வாழும் வங்கக் கடலில் அவ்வப்பது ஒன்றிரண்டு ஆமைகள் இறந்து போன நிலையில் வெளியேறுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பீதியைக் கிளப்பி வருவதே இப்பிரச்னைக்கு மூல காரணமாக உள்ளது.
மீன்களை வாங்க மறுக்கும் பொதுமக்கள்:
சுனாமியின் போது மனித சடலங்களை மீன்கள் உண்டன எனப் பரவியதையடுத்து
மீன்கள் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்தனர். இதேபோல் தற்போது மாசடைந்த எண்ணெய்க் கழிவுகளை மீன்கள் சாப்பிடுவதாக பரவிய செய்தியை அடுத்து
பெரும்பாலானோர் மீன்களை வாங்க மறுப்பதாக மீனவ பெண்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். ஊடகங்களில் தொடர்ச்சியாக எண்ணெய் படலம் அகற்றுவது குறித்த பரபரப்பு செய்திகளால் தொடர்ந்து இந்த எண்ணம் பொதுமக்களிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. பொதுவாகவே கட்டுமரங்களைத் தவிர கரையோரத்தில்
மீன்பிடிக்கப்படுவதில்லை. ஆனால் 7 நாள்கள்வரை ஆழ்கடல் சென்று விசைப்படகுகள் பிடித்து வரப்படும் பெரிய ரக மீன்களையும் பொதுமக்கள் வாங்குதில் அச்சம் நிலவுகிறது. இதனால் காசிமேடு மீன்சந்தையில் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய விலை கிடைக்காததையடுத்து நட்டத்திற்கு உள்ளான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதலை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். இதேபோல் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கட்டுமரம், பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
கண்காட்சியாக மாறிய எர்ணாவூர் கடற்கரை:
எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை ஆள்கள் மூலம் தொடர்வதால் நாள் கணக்கில் நீடிக்கிறது இப்பிரச்னை. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் நேரடியாக விவரிக்கப்படுகின்றன. இதனால் ஆர்வமடையும் பொதுமக்கள் சாரைசாரையாக
இங்கு வருவதை வழக்கமாக்கிவிட்டனர். இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோரக் கடைகள் உள்ளிட்டவை பெருகிவிட்டன. மேலும் எங்கு பார்த்தாலும் பாறாங்கற்களில் எண்ணெய்க் கசிவு சிதறியுள்ள நிலையில் வழுக்கி விழும் அபாயத்தை உணராத பொதுமக்கள் குடும்பத்தோடு வருகின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.
மீனவர்களிடையே விழிப்புணர்வு இல்லை:
எண்ணெய் படலம் தேங்கியிருந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. இந்த இடத்தில் ஒரு கட்டுமரம் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் மீனவர்கள்
தங்களது வாழ்வாதாரம் பறிபோய்விட்டாதாக ஊடகங்களில் தொடர்ந்து கூச்சலிட்டனர். இதனையடுத்து மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க உள்ளதாக
அரசு அறிவித்தது. மேலும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஒவ்வொரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு தினக்கூலி ரூ.500 அளிக்கும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வெளிப்படையாகப் பார்த்தால் இது மீனவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக தெரிந்தாலும் மீன்கள் குறித்து பொதுமக்களிடையே பரவி வரும் எதிர்வரும் கருத்து
மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் என்பதை மீனவர்கள் உணரவில்லை. இதில் அரசியல்வாதிகள் புகுந்து கணிசமாகச் சம்பாதிக்கும் முயற்சியும் தொடர்கிறது.
ஆபத்தை உணராத செய்தியாளர்கள்
கடந்த நான்கு நாள்களாக ஒரே மாதிரியான செய்திகளை நேரடியாக ஒளிபரப்பிய செய்தியாளர்கள் புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக பைபர் படகுகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு எண்ணூர் துறைமுகம்வரை கேமராக்களுடன் சென்று திரும்புகின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம்வரை மீனவர்கள் வசூலிப்பதைக் காண முடிந்தது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய செய்தியாளர்கள் எவ்வித பாதுகாப்பு சாதனங்களையும் அணியாமல், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறாக பயணிப்பது சரிதானா? மேலும் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலைப் படம் எடுக்க கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைவுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகளை துறைமுக அதிகாரிகள் எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment