Thursday, 16 February 2017


போக்குவரத்து போலீஸாரின் தடை நடவடிக்கையால் முடங்கும் சென்னைத் துறைமுகம் 

திருவொற்றியூர், பிப்.13: போக்குவரத்துப் போலீஸாரின் தடை நடவடிக்கைகளால் 
சென்னைத் துறைமுக வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை அடிக்கடி ஏற்படுவதாக துறைமுக உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
    சென்னைத்துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இவைகளில் பெரும்பாலான வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலை மூலமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டிய போக்குவரத்துப் போலீஸார் இப்போக்குவரத்துக்கு பல்வேறு தடைகளை விதித்து வருவதாகவும், இதனால் சென்னைத் துறைமுகமே அடிக்கடி முடங்கி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
அடிக்கடி தடை விதிக்கும் போலீஸார்: 
இது குறித்து சுங்கத்துறை ஏஜென்சியைச் சேர்ந்த என என்.கஜேந்திரன், ஜெகநாதன் ஆகியோர் கூறியது, 
   கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எர்ணாவூர் பாரதியார் நகரில் கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் கடற்ரையில் தேங்கியது. இதனை அகற்றும் பணி
தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனைப் பார்வையிட முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போதெல்லாம் கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்தை போலீஸார் நிறுத்தி வைத்தனர். இதனால் அடுத்தடுத்த தினங்களுக்கு போக்குவரத்து நெரிசலின் தன்மை அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டது. 
   இந்நிலையில் எர்ணாவூரில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து கண்டெய்னர் போக்குவரத்து எண்ணூர் விரைவு சாலையில் தடை செய்யப்பட்டது. இதேபோல் துறைமுகத்திலிருந்து ஒரு லாரியும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து குறிப்பிட்ட கப்பல்களுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் திட்டமிட்டபடி அனுப்ப இயலவில்லை. சிலர் கூடுதலாக தண்டக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தடையால் மாதவரம்வரை சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு 
கண்டெய்னர் லாரிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. போக்குவரத்து தடை பிரச்னையால் ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சரிசெய்ய இன்னும் மூன்று நாள்களுக்கும் மேலாகும். இத்தனைக்கும் திங்கள்கிழமை இரவுவரை முதல்வர் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றனர்.
6 வழிச்சாலையால் பயன் என்ன?:
இது குறித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சாகுல்ஹமீது கூறியது, 
 எண்ணூர் விரைவு சாலை 6 வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சாலையில் துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து என்ன இடையூறு ஏற்படப் போகிறது?. முக்கியப் பிரமுகர்களுக்கு 
பாதுகாப்பு அளிக்க வேண்டியது போலீஸாரின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் மற்றவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகளால் தொழில் வளர்ச்சியே முடங்கிப் போயிருக்கும் நிலையில் போலீஸாரின் இது போன்ற தடைகளால் சென்னைத் துறைமுகம்  அடிக்கடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட காலமாக இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் மத்திய, மாநில
அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை தன்னிச்சையாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போலீஸார் இது போன்று தடைவிதிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார் சாகுல்ஹமீது.

No comments:

Post a Comment