நெரிசலைக் குறைக்க துறைமுகம்-கான்கார் உடன்பாடு
திருவொற்றியூர், ஜூலை 24: சென்னைத் துறைமுகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் துறைமுகம் -தண்டையார்பேட்டை இடையே சரக்கு ரயில்கள் மூலம் கண்டெய்னர்களை இடமாற்றம் செய்யும் புதிய வசதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டாவது சரக்குப் பெட்டக முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா கலந்து கொண்டு கண்டெய்னர்கள் ஏற்றப்பட்ட முதல் சரக்கு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார், போக்குவரத்து துணை மேலாளர்கள் விமல், பிரபாகரன் கிருபானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்குப் பிறகு புதிய வசதிகள் குறித்து ரயில்வே அமைச்சகத்தின் துணை நிறுவனமான கான்கார் (CONCOR-Container Corporation Ltd) முதன்மை பொது மேலாளர் எஸ்.பாலாஜி அருண்குமார் 'தினமணி' செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
இந்திய துறைமுகங்களின் சரக்குகளைக் கையாள்வதில் கான்கார் நிறுவனம் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. சென்னைத் துறைமுகத்தில் நீண்ட காலமாக இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்காக சென்னைத் துறைமுகம்-சரக்குப் பெட்டக முனையம்-கான்கார் ஆகிய மூன்று நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன் முடிவின்பேரில் துறைமுகத்தின் இரண்டாவது முனையம் மற்றும் தண்டையார்பேட்டையில் உள்ள கான்கார் சரக்குப் பெட்டக முனையம் இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இப்புதிய வசதி மூலம் தலா 4 தடவை ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
78 ஏக்கரில் கண்டெய்னர் கையாளும் தளம்:
சரகுக்கு ரயில் ஒரு தடவை இயக்கப்படுவதன் மூலம் சுமார் 80 கண்டெய்னர்களை
இடமாற்றம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு சுமார் 650 கண்டெய்னர்களை
கையாள முடியும். இது இம்முனையத்தின் கையாளும் திறனில் நான்கில் ஒரு பங்கு
ஆகும். இந்த சரக்கு ரயில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தண்டையார்பேட்டைக்கு சுமார் 4 மணி நேரத்தில் வந்தடையும். இப்புதிய வசதி மூலம் கண்டெய்னர்களை வெளியே எடுத்துச் செல்வதற்கான கால அளவு வெகுவாகக் குறையும். அதேபோல் ஏற்றுமதிக்காக வரும் கண்டெய்னர்கள் லாரிகள் தண்டையார்பேட்டையில் உள்ள முனையத்தில் சுமார் ஒரு மணி நேரத்தில் கண்டெய்னர்களை இறக்கிவிட்டுத் திரும்பிச் செல்ல முடியும். இக்கண்டெய்னர்கள் சுமார் 24 மணி நேரத்திற்குள் துறைமுகத்தின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு கப்பல்களில் ஏற்றப்படும். இதற்கென கான்கார் நிறுவனம் சுமார் 78 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய சரக்குப் பெட்டகத் தளத்தினை தண்டையார்பேட்டையில் ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேரமும் சுங்கப் பரிசோதனை வசதி:
மேலும் தண்டையார்பேட்டைக்கு கொண்டு வரப்படும் கண்டெய்னர்களை சோதனையிட்டு விடுவிக்க 24 மணி நேரமும் சுங்கத் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். தண்டையார்பேட்டையிலிருந்து வேறு சரக்குப் பெட்ட நிலையங்களுக்கும் கண்டெய்னர்களை வழக்கப்போல் எடுத்துச் செல்ல முடியும். ஏற்கனவே சென்னைத் துறைமுகத்திலிருந்து பெங்களூருக்கு ஏற்கனவே சரக்கு ரயில்கள் மூலம் கண்டெய்னர்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. தற்போது தண்டையார்பேட்டைக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் மூலம் துறைமுகத்தின் கையாளும் திறன் மேம்படும். லாரிகள் மூலம் கையாளப்படுவதால் ஏற்படும் செலவினங்களை ஒப்பிட்டே புதிய வசதியில் குறைவான கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வசதி ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது. அதேவேளை சென்னைத் துறைமுகத்தில் இருந்து வரும் நெரிசலைத் தீர்ப்பதில் இப்புதிய வசதி ஒரு மைல் கல்லாக இருக்கும் என நம்புகிறோம் என்றார் பாலாஜி அருண்குமார்.
பேட்டியின்போது கான்கார் சரக்குப் பெட்டக முனைய மேலாளர் இந்திரா, முதன்மை மேற்பார்வையாளர் எஸ்.சரவண பெருமாள், துறைமுகத்தின் இரண்டாவது சரக்குப் பெட்ட முனைய மேலாளர்கள் அருள்ராஜ், சுஸ்மிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

