Friday, 3 July 2015

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும்

டாக்டர் ராமதாஸ்

திருவொற்றியூர், ஜூலை 2:இடைத் தேர்தலை நேர்மையாக நடத்தத் தவறிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
  வடசென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது,
  ஊழலற்ற, நேர்மையான, மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும் கொள்கைகளோடு கண்ணியமான அரசியலில் பா.ம.க.ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் அனைத்திலும் பணம், அதிகார பலத்துடன் ஆளும் கட்சியினர் செயல்படுவதால் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்பதை பா.ம.க கொள்கையாகக் கொண்டுள்ளது. இதனால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் 
நாங்கள் போட்டியிடவில்லை. இங்கு போட்டியிட்டிருந்தால் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை பெற்றிருப்போம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்ததால் ஸ்ரீங்கம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு 110 நாள்களுக்குப் பிறகே இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட 10 நாள்களில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அ.தி.மு.க ஆட்சி பதவியேற்று நான்கு ஆண்டுகள் மே 23 அன்றே முடிவடைந்த நிலையில் பொதுத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்கும் குறைவாக உள்ள நிலையில் 
எப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது?. இத்தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் ராஜினாமா செய்ததில் இருந்து அனைத்துமே அவசர கோலத்தில்தான் நடைபெற்றன. 
   குண்டும் குழியாக இருந்த சாலைகள் அனைத்தும் போலீஸார் உதவியுடன் தினசரி இரவோடு இரவாக புதிதாகப் போடப்பட்டன. தேர்தல் நாளன்று அனைத்து வாக்குச் சாவடிகளையும் ஆளும் கட்சியின் கைப்பற்றி வாக்குகளைப் பதிவு செய்தனர். 
 தேர்தல் நடைபெற்ற நாளன்றும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடனேயே 
1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என 
கூறி விட்டேன். இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. இதெற்கெல்லாம் காரணம் தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் சந்தீப் சக்சேனாதான் காரணம்.  இவர் தொடர்ந்து நீடித்தால் 2016-ல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே சந்தீப் சக்சேனாவை உடனடியாக இப்பொறுப்பிலிருந்து அகற்ற இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆளுநர் மீது புகார்:
   தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லட்சக் கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று வருகிறது. இது குறித்து 203 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் ஆளுநரிடம் பா.ம.க. அளித்தது.  மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் ஆளுநர்தான். பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் ஆளுநரால் எடுக்கப்படவில்லை. 
   தமிழகத்தின் நடைபெற்றுவரும் ஊழல்கள் குறித்து பத்திரிகைகள், ஊடகங்கள் 
எவ்வித செய்திக் கட்டுரைகளையும் வெளியிடுவதில்லை. அரசுத் தேர்வுகளில் ஒரு கேள்வி தவறாக இருந்தால் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடுவோர் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள கணக்கீட்டுத் தவறுகள் குறித்து ஊடகங்கள் விமர்சனங்கள் செய்யவில்லை. நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள தவறுகளைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் ஒரு வாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 
   எதிர்க்கட்சிகளுக்கு இலக்கணம் என்பது ஆட்சி குறித்து புதிய கருத்துக்கள், தெளிவான விமர்சனங்கள், ஆக்கப்பூர்வமான யோசனைகள் உள்ளிட்டவைகளைக் கொண்டிருக்க வேண்டும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ளவரோ, இதர அரசியல் கட்சிகளோ இத்தகைய இலக்கணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பா.ம.க. தொடர்ந்து உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. எட்டு அமைச்சர்களை வைத்துக் கொண்டு திறம்பட ஆட்சி நடத்தியவர் காமராஜர். ஆனால் இப்போதுள்ள தமிழக அமைச்சர்களுக்கு அனைத்து அமைச்சர்களின் துறைகள் கூட சரிவரத் தெரியாத நிலை உள்ளது. 
   தமிழகம் முழுவதும் பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே 2016-ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பா.ம.க. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார் ராமதாஸ்.
    இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, மாவட்டச் செயலாளர் சீமான் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment