Sunday, 27 March 2016

அனல் மின் நிலைய கொதிநீர், சாம்பலால் கடும் சுற்றுச் சூழல் சீர்கேடு 

எண்ணூர் முகத்துவாரத்தை சீர்படுத்த சிறப்பு நடவடிக்கை தேவை

நீதியரசர் டி.ஹரிபரந்தாமன்

திருவொற்றியூர், மார்ச் 26:வடசென்னையில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கொதிநீர், சாம்பலால் எண்ணூர் முகத்துவாரம் பகுதி சீர்கேடு அடைந்துள்ளது. இதனைச் சீர்படுத்த சிறப்பு நடவடிக்கை தேவை என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    எண்ணூர் முகத்துவாரம், பழவேற்காடு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சுற்றுச் சூழல் சீர்கேடுகள் குறித்த பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டம் எண்ணூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எண்ணூர் அனைத்து மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு மற்றும் கோஸ்டல் ரிசோர்ஸ் சென்டர் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியன இணைத்து செய்திருந்தன. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். 
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கலந்து கொண்டார். 
அப்போது நீதிபதி ஹரிபரந்தாமன் பேசியது, 
   தமிழகத்தில் சுமார் ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான நீளமுள்ள கடற்கரை உள்ளது. 
ஆனால் எண்ணூர் முகத்துவாரத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. குசஸ்தலை ஆறு, பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய், வெளியேறித் திரும்பும் கடல் நீர் (Back water), அலையாத்தி காடுகள் (Mangroves) என ஒரு காலத்தில் எழில் மிகுந்த பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. ஆதிகாலத்தில் நீர்வழிப்பயணம்தான் முக்கிய இடம் வகித்துள்ளது. எனக்கு சொந்த ஊர் திருவள்ளூர் அருகே ஒரு கிராமம்.  எனது தந்தையார் காலத்தில் திருப்போரில் உள்ள முருகன் கோயில் செல்வதற்கு இங்கு வந்து பக்கிங்காம் கால்வாயில் படகு மூலம் பயணித்ததாகக் கூறுவார். 65 அடி நீளமுள்ள படகுகள் இக்கால்வாயில் பயணித்துள்ளன.  இதனை நம் தலைமுறையிலேயே அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. இதுவே வெளிநாடுகளில் இருந்திருந்தால் பொக்கிஷமாகப் போற்றி பாதுகாத்து இருப்பார்கள்.
     தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதற்காக இழப்பீடும், வேலை வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. ஆனால் இது சரியல்ல. நிலம் கையகப்படுத்தினால் அதற்கு பதிலாக மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு என்பது ஒரு தலைமுறையோடு முடிந்துவிடும். நிலம்தான் தலைமுறையைக் கடந்தும் இருக்கும்.
    எண்ணூர் பகுதியில் மூன்று அனல் மின் நிலையங்கள். அனைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமானவை. இங்கிருந்து வெளியேற்றப்படும் கொதிநீர், சாம்பலால் முகத்துவாரம், ஆற்றுப் பகுதி, கால்வாய் என அனைத்தும் பாழடைந்துவிட்டன. நேரில் சென்று பார்த்தபோது சாம்பல் மேடுகள் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்கின்றன.  சில இடங்களில் நீர்மட்டத்திற்கு மேலே சாம்பல் மேடுகள் உயர்ந்துள்ளன என்றால் சுற்றுச் சூழல் எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதை அறியலாம். இது தவிர காமராஜர் துறைமுகம் ஆற்றுப் படுகைகளை மண்ணைக் கொட்டி பெரிய அளவில் அபகரித்து வருகிறது. இதனால் ஆற்றின் போக்கே திசைமாறிவிடும் அபாயம் உள்ளது. வடசென்னை பகுதியின் மலக்கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்டவை பக்கிங்காம் கால்வாய் மூலம் இப்பகுதியே நாற்றம் வீசுகிறது. இது தவிர
மணலி ரசாயனத் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுகள் இங்குதான். எவ்வளவுதான் 
தாங்கும் இந்த முகத்துவாரம். தனியார் தவறு செய்தால் தண்டிக்கும் அதிகாரம் பெற்ற அரசுகளே இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் காரணமாக இருந்தால் இவர்களை யார் கேட்பது என்பதுதான் வேதனை. எனக்குத் தெரிந்தவரை இச்சீரழிவுகளை சீர்படுத்துவது எளிதல்ல.  நீண்ட கால சிறப்புத் திட்டங்கள் மூலம் மட்டும்தான் இப்பகுதியைச் சீரமைக்க முடியும். 
     எனவே எண்ணூர் முக்த்துவாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை இப்பகுதி மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். பிறகு தமிழகமெங்கும் இதன் சீரழிவு குறித்து விழிப்புணர்வு ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் ஹரிபரந்தாமன்.
     இந்நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் டாக்டர் ஹிசாமுதின் பாப்பா, பொருளாதார பேராசிரியர் டாக்டர் எஸ்.ஜானகிராமன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன், மீனவ கிராம பிரதிநிதிகள் ஆனந்தன், பார்த்தசாரதி, திருநாவுக்கரசு, வனம், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். 
கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பல் மற்றும் அதிவேகப் படகுகள் 

சென்னையிலிருந்து அந்தமானுக்கு இடமாற்றம் 

திருவொற்றியூர்,மார்ச் 25:சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றிய ராஜ்கமல் என்ற ரோந்துக் கப்பல், 6 இடைமறிக்கும் அதிவேகப் படகுகள் (Interceptor Boats) அந்தமான், நிகோபர் பிராந்தியத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டன.


   இதற்கான வழியனுப்பும் விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ரோந்துக் கப்பல் மற்றும் படகுகள் வரிசையாக அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி தல்கா, இக்கப்பல்களில் இருந்த வீரர்கள், பொறுப்பு அதிகாரிகளுக்கு கைகுழுக்கினார். பின்னர் பாண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கப்பல், படகுகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டுச் சென்றனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு பிராந்திய  டி.ஐ.ஜி. தல்கா செய்தியாளர்களிடம் கூறியது,
   நாடு முழுவதும் கடலோரக் காவல்படையை வலுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்தியாவின் கிழக்கு பிராந்திய நாடுகளிலிருந்து அந்தமான், நிகோபர் பகுதியை அனைத்து வகை சட்ட விரோத செயல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி பாதுகாப்பு அமைச்சக உத்தரவின்பேரில்  கிழக்கு பிராந்தியத்திலிருந்து ராஜ்கமல் என்ற ரோந்துக் கப்பல் மற்றும் 6 இடைமறிக்கும் அதிவேகப் படகுகள் உள்ளிட்டவைகள் இதில் தற்போது பணியாற்றும் வீரர்களுடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கப்பலுக்குப் பதிலாக ஆர்ன்வேஷ் என்ற ரோந்துக் கப்பல் கிழக்குப் பிராந்தியத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.  தற்போது கடலோரக் காவல்படையில் தற்போது சுமார் 120 ரோந்துக் கப்பல்கள் உள்ளன. மேலும் தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் 20 புதிய கப்பல்கள் விரைவில் காவல் படையில் இணைக்கப்பட உள்ளன. எனவே மேலும் புதிய கப்பல்கள் கிழக்குப் பிராந்தியத்திற்கு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். இந்திய கடலோரக் காவல்படை இருபத்தி நான்கு மணி நேரமும் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார் தல்கா.
   நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்


திருவொற்றியூர், மார்ச் 16:விபத்தில் உயிரிழந்த திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் (23) என்ற இளைஞரின் உடலுறுப்புகள் அவரது பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டதையடுத்து  புதன்கிழமை சிறுநீரகங்கள், கல்லீரல், இருதயம் உள்ளிட்டவை  அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு நான்கு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
   திருவொற்றியூர் டி.எஸ். கோபால் நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மனைவி வைரம். இவர்களுக்கு தீபா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். ராஜேஸ்வரன் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சொந்தமாக  டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்குத் துணையாக மகன் தினேஷ் டிராவல்ஸில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தினேஷ் கடந்த திங்கள்கிழமை இரவு பணி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே வந்தபோது
எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷை அருகிலிருந்தோர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷூக்கு செவ்வாய்க்கிழமை திடீரென மூளைச் சாவு ஏற்பட்டது. இதனையடுத்து இவரது உடலுறுப்புகளை தானம் செய்ய தினேஷின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். 
   இதனையடுத்து இதே மருத்துவமனையில் உள்ள உடலுறுப்பு தான சிறப்பு மையத்திற்கு தினேஷ் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டார். புதன்கிழமை சிறப்பு மருத்துவர்கள் மூலம் தினேஷ் உடலிலிருந்து இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்டவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. சிறுநீரகங்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. கல்லீரல் மற்றும் இருதயம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் கண்களின் கருவிழிகளை அகற்ற முடியவில்லை.  உடலுறுப்புகள் அகற்றப்பட்ட பிறகு தினேஷின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இறந்தும் உயிர் கொடுத்தான் என் மகன்: தந்தை பெருமிதம்
இது குறித்து தினேஷின் தந்தை ராஜேஸ்வரன் கூறியது, 
    எனக்கு ஒரு மகன், ஒரு மகள் மட்டுமே. இதில் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. என் மகன் தினேஷூக்கு  விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தோம். இந்நிலையில் விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென தினேஷூக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்செய்தி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஆனால் என்ன முயற்சி எடுத்தாலும் என் மகன் திரும்பி வரப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் உடலுறுப்பு தானம் செய்வது குறித்து உறவினர்கள், நண்பர்கள் விளக்கிக் கூறினர். எனது மகன் இறந்து போய்விட்டாலும்  அவனது உடலுறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்பதால் தானம் செய்ய ஒப்புக் கொண்டோம். இனி இறந்தும் நான்கு பேருக்கு உயிர் கொடுத்தான் என் மகன் என்பதை நினைத்துப் பெருமை கொள்ள வேண்டியதுதான் என்றார் ராஜேஷ்.

Monday, 14 March 2016

அய்யா வைகுண்டர் 184-வது அவதாரத் திருநாள் ஊர்வலம் 

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவொற்றியூர், மார்ச் 4:அய்யா வைகுண்டர் 184-வது அவதாரத் திருநாளையொட்டி அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. 
    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு என்ற ஊரில் அவதரித்தவர் அய்யா வைகுண்டர். இங்கு இவரது பெயரால் வைகுண்டர் தலைமைத் தர்மபதி இயங்கி வருகிறது. அய்யா வைகுண்டரின் போதனைகளைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர்  
வடசென்னை பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அய்யா வைகுண்டருக்கு மணலி புது நகரில் ராஜகோபுரத்துடன் கூடிய வைகுண்ட தர்மபதி அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அய்யா வைகுண்டரின் 184-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. பழைய வண்ணாரப்பேட்டையில் காலை 5.30 மணிக்குத் தொடங்கிய இவ்வூர்வலம் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் வழியாக மணலி புதுநகரில் அமைந்துள்ள வைகுண்ட தர்மபதியை காலை 9 மணிக்கு சென்றடைந்தது.  
     இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் வைகுண்ட தர்மபதியில் உச்சி படிப்பு, அன்னதானம், தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல், இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நாங்குனேரி எம்.எல்.ஏ நாராயணன்,  தர்மபதி நிர்வாகி தங்கப் பெருமாள், வேலுச்சாமி, ஜெயக்கொடி, தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

திருவொற்றியூர்,மார்ச்.1:சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரிகள் திங்கள்கிழமை இரவு முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னைத் துறைமுக நிர்வாகம் லாரி உரிமையாளர் சங்கங்கள், முனைய நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து 
இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. 
வேலை நிறுத்தம் குறித்து கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியது,
     சென்னைத் துறைமுகத்தை நம்பி சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் உள்ளன. இந்நிலையில் துறைமுகத்தில் போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்யப்படவில்லை. இங்குள்ள இரண்டு தனியார் சரக்குப் பெட்டகமுனையங்களிலும் போதுமான கிரேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை. எனவே கண்டெய்னர்களைக் கையாள்வதில் தேவையற்ற கால தாமதம் நிலவுகிறது. மேலும் இந்நிறுவனங்கள் கப்பல்களைக் கையாள்வதில் காட்டும் முன்னுரிமை கண்டெய்னர்களை லாரிகளிலிருந்து இறக்கும் பணியில் காட்டுவதில்லை. மேலும் துறைமுகத்திற்கு வெளியே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் சரக்குப் பெட்டக நிலையங்கள் 
உள்ளன. இவை அனைத்தும் தங்களுக்கென 20 கண்டெய்னர் லாரிகளை வைத்துக் கொள்வது என எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் தற்போது நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகளைச் சொந்தமாக இயக்கி வருகின்றன.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 
வாழ்வாதாரம் பாதிப்பு:
    மேலும் கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளையடுத்து கண்டெய்னர் லாரிகள் வரிசையாகச் சென்று வந்தன. எனவே இந்த காலகட்டத்தில் 
எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக இதனைச் சீர்குழைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்து நெரிசல் குறித்து 15 நாள்களுக்கு ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என துறைமுக நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் 45 நாள்கள் ஆகியும் இதுவரை ஒரு கூட்டம் கூட கூட்டப்படவில்லை. இதனால் ஆரம்பத்தில் கட்டுக்கோப்பாக இருந்த கண்டெய்னர் லாரிகள் வரிசை படிப்படியாக தளர்ந்துவிட்டது. 
இதனையடுத்து ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் போட்டி ஏற்பட்டு துறைமுகத்திற்கு வெளியே சுமார் 30 கி.மீ தூரத்திற்கு லாரிகள் இரண்டு மூன்று வரிசைகளாக நிற்கின்றன. இதனால் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். 
   துறைமுகத்தின் உள்ளே ஏராளமான காலி நிலங்கள் உள்ளன. ஆனால் இவற்றை லாரிகள் நிறுத்துமிடங்களாக மாற்றி தருவதில் தேவையற்ற சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் எழுந்துள்ள பிரச்னைகளால் ஒட்டு மொத்த கண்டெய்னர் லாரி உரிமையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் இப்பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

பெட்டி்ச செய்தி...
அழுகும் வெங்காயம்: ஏற்றுமதியாளர்கள் கண்ணீர்

போராட்டம் குறித்து வெங்காயம் ஏற்றுமதி நிறுவன மேலாளர் சந்திரபோஸ் கூறியது, 
கண்டெய்னர் வேலை நிறுத்தம் திடீரென அறிவிக்கப்பட்டதால் ஏற்றுமதிக்காக கண்டெய்னர்களை ஏற்றி வந்த லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 
தற்போது வெங்காயம் ஏற்றுமதி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர்களில் ஏற்றப்படும் வெங்காயம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தபிறகு குளிரூட்டப்படும். இவை வழியிலேயே நிற்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில்  நட்டம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இது போல் அடிக்கடி நடைபெறும் வேலை நிறுத்தங்களால்தான்  இரால் உள்ளிட்ட கடலுணவு ஏற்றுமதியாளர்கள் கிருஷ்ணபட்டனம் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு இடமாறிவிட்டனர். ஏற்றுமதியாளர்களிடையே சென்னைத் துறைமுகம் தொடர்ந்து நம்பகத் தன்மையை இழந்து வருகிறது. ஆனால் இது குறித்து துறைமுக நிர்வாக உயர் அதிகாரிகள் எவ்விதத்திலும் கவலையின்றி நடந்து கொள்வது  வருத்தம் அளிக்கிறது
எண்ணூரில் குளத்தில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை சாவு

திருவொற்றியூர், பிப்.29:எண்ணூரில் மாநகராட்சி குளத்தில் தவறி விழுந்த ஜோஸ்வா என்ற இரண்டரை வயது குழந்தை திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது.
    எண்ணூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சதீஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது இரண்டரை வயது பெண் குழந்தை ஜோஸ்வா. இதே பகுதியில் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் தாமரைக்குளம் உள்ளது. இக்குளத்தின் கரையில் திங்கள்கிழமை குழந்தை ஜோஸ்வா விளையாடியுள்ளது. அப்போது குளத்தில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தபோனது.
   இது குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதி இருவர் சாவு

திருவொற்றியூர், பிப்.29:திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் சதீஷ் ஆறுமுகம் (24), சந்திரலேகா (22) ஆகியோர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர்.
   பொன்னேரிச் சேர்ந்தவர் சதீஷ் ஆறுமுகம். இவருடன் பணியாற்றுபவர் சந்திரலேகா. மீஞ்சூரைச் சேர்ந்தவர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். திங்கள்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் எண்ணூர் விரைவு சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் அருகே வந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சதீஷ் ஆறுமுகம், சந்திரலேகா ஆகிய இருவரும் லாரியின் அடியில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக கண்டெய்னர் லாரியின் டிரைவர் 
லாரியிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் அருகில் வசிப்போர் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு 
அனுப்பி வைத்தனர். 
      இது குறி்த்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் 
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். 

பெட்டிச் செய்தி......
நிறைவடையாத சாலைப் பணியால் அடிக்கடி விபத்து: பொதுமக்கள் புகார்.
விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியது,
    துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் எண்ணூர் விரைவு சாலையில் 
பல ஆண்டுகளாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பெரும்பாலான இடங்களில் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனையடுத்து வேகமாக வரும் வாகனங்கள் திடீரென குறுக்கிடும் குறுகலான சாலைகளால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் இதுவரை விளக்குகள் அமைக்கப்படவும் இல்லை. மேலும் ஆபத்து நிறைந்த இப்பகுதியில் இருட்டில் ஒளிரும் எச்சரிக்கைப் பலகைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வைக்கப்படவில்லை. இருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடம் இந்தவகையில்தான் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து இடங்களிலும் ஆறு வழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டு, விளக்குகள் அமைக்கப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் விபத்தினைத் தவிர்க்க இயலும் எனத் தெரிவித்தனர். 
இணைக்கப்பட்ட பகுதிகளைப் புறக்கணிக்கும் மெட்ரோ வாட்டர்

7 கோட்டங்களில் கழிவு நீரை அகற்ற 2 தனியார் லாரிகளே உள்ளன

கட்டணம் செலுத்தியும் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம்

திருவொற்றியூர், பிப்.28:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் மண்டலத்தில் பாதாளச் சாக்கடை வசதி இல்லாத 7 கோட்டங்களில் கழிவுநீரை அகற்ற 2 தனியார் ஒப்பந்த லாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
    சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் (1-வது) மண்டலத்தில் உள்ள 14 கோட்டங்களில் கத்திவாக்கத்தில் 2 கோட்டங்கள், திருவொற்றியூரில் 5 கோட்டங்கள் என 7 கோட்டங்களில் பாதாளச் சாக்கடை வசதிகள் கிடையாது. இப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சிகளாக இருந்தபோது  கழிவு நீரை அகற்ற கத்திவாக்கத்தில் ஒரு லாரியும், திருவொற்றியூரில் 2 லாரிகள் மட்டுமே இருந்தன. பாதாளச் சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் இலவசமாகவே கழிவு நீர் அகற்றப்பட்டன.
கழிவுநீரை அகற்ற கட்டணம்: :
   இப்பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதையடுத்து கழிவுநீர் அகற்றும் பணி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல்  வாரியத்துக்கு (மெட்ரோ வாட்டர்) மாற்றம் செய்யப்பட்டன. இதனால் கூடுதலாக லாரிகள் வரும், தேக்கநிலை நீங்கும், வசதிகள் பெருகும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை ம் ஒரு லாரி கூட கூடுதலாக இப்பகுதிக்கு ஒதுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, டிச.10, 2013 முதல்  கட்டணம் செலுத்தினால் மட்டுமே கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்ற லாரி அனுப்ப வேண்டுமெனில் வீட்டின் உரிமையாளரோ அல்லது வாடகைதாரரோ பகுதி அலுவலகத்துக்கு நேரில் வந்து ரூ.200 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
50 ஆயிரம் வீடுகளுக்கு இரண்டே லாரிகள்: 
    இப்பகுதிகள் நகராட்சியாக இருந்தபோது பயன்பாட்டில் இருந்த 4 லாரிகளையே தொடர்ந்து வாரியம் பயன்படுத்தி வந்தது. இதில் 2 லாரிகள் முற்றிலும் பழுதடைந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீதம் உள்ள 2 லாரிகளும் தற்போது  
தகுதிச் சான்றிதழைப் பெற புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2 லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் கழிவு நீரை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் பாதாளச் சாக்கடை வசதி இல்லாத நிலையில் 2 லாரிகள் போதுமானதாக இல்லை. இதனால் கழிவு நீரை அகற்றுவதில் பல மாதங்களாக தேக்கநிலை இருந்து வருகிறது.  இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். 
பாராமுகத்தில் இணைக்கப்பட்ட பகுதிகள்:
இது குறித்து நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகியான கே.சுப்பிரமணி கூறியது, 
          திருவொற்றியூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் சாலைகள், தெருவிளக்குகள், குப்பைகள் அகற்றல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஓரளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மெட்ரோ வாட்டர் நிறுவனம் இப்பகுதியின் வளர்ச்சியில் தொடர்ந்து பாராமுகமாகவே இருந்து வருகிறது. 
நகராட்சியில் ஊழியர்களாக இருந்தவர்களை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் 
முறைப்படி சேர்க்கவே ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்தது. கழிவுநீரை அகற்ற ரூ.200 கட்டணம் செலுத்தியும் மாதக்கணக்கில் காத்திரும் அவலம் நீடிக்கிறது. பல இடங்களில் வீடுகளில் உள்ள தொட்டிகளிலிருந்து கழிவு நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. சமீபத்திய மழையில் திருவொற்றியூர் மேற்கு பகுதியே கழிவுநீரில் மிதந்தது. மேலும் குடிநீர் கட்டணமும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாரபட்சமாக வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் வாரியத்தின் பல்வேறு நடைமுறைகளைக் கூறுகின்றனர். 
       முன்பு மெட்ரோ வாட்டர் நிறுவனம் சென்னை மாநகரில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் இதெற்கென புதிய விதிமுறைகளை ஏற்படுத்துவதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்படவில்லை. எனவே இதுகுறித்தி விரிவான ஆலோசனைக்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும். திருவொற்றியூர் மண்டலத்திற்கு கூடுதல் லாரிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையெனில் கழிவு நீரை அகற்றுவதில் தனியார் லாரிகளின் கட்டண வசூலை பொதுமக்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார் சுப்பிரமணி. 
வாரிய ஊழியர்கள் ஒப்புதல்:
இப்பிரச்னை குறித்து பகுதி வாரிய கீழ்நிலை ஊழியர்கள் கூறியது,
    2 லாரிகள் பழுதடைந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மைதான். வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப லாரிகள் போதுமானதாக இல்லை. இது குறித்து பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உயர் அதிகாரிகளிடம் போதிய பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் பழைய விதிமுறைகளையே  வாரிய உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து 9 ஆண்டுகளாக திருவொற்றியூர் பாதாளச்சாக்கடைத் திட்டம் நடைபெற்று வருகிறது. இதனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதிலும் மெத்தனம் இருந்து வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் மெட்ரோ வாட்டர் நிறுவனப் பணிகள் பொதுமக்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. கழிவுநீரை அகற்ற தனியார் லாரிகள் நம்பியிருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தனியார் லாரிகள் அகற்றும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பக்கிங்காம் கால்வாய், கடற்கரை பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இது குறித்து உயர்அதிகாரிகள் எவ்வித 
நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றனர் ஊழியர்கள்.  
      கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், தெருவிளக்குகள்  உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பது மட்டுமல்ல, கட்டாயமும், அவசியமும்கூட என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 
திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் மாசி பிரமோற்சவத் திருவிழா 

கல்யாணசுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருக்கல்யாணம் 

திருவொற்றியூர்,பிப்.21:மாசி பிரமோற்சவத் திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் கல்யாணசுந்தரர்-சங்கிலிநாச்சியார் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
     திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் மாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த பிப்.13 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவினையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கல்யாணசுந்தரர்-சங்கிலிநாச்சியார் திருக்கல்யாணம் 
நடைபெற்றது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. பிற்பகல் மகிழடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 63 நாயன்மார்கள் நான்கு மாடவீதிகளிலும் திருஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
   மாசி பிரமோற்சவத்தையொட்டி தெற்கு மாடவீதியில் அமைந்துள்ள  நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சத்திரத்தில் தொடர் அன்னாதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருவிழாவினையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 
மாசி பிரமோற்சவத் திருவிழா 

திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 

75 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்டம்

திருவொற்றியூர்,பிப்.19:மாசி பிரமோற்சவத் திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
     திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் 1941-ஆம் ஆண்டு கடைசியாகத் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய தேர் அமைக்க கடந்த 2013 ஆண்டு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் இதற்கென ரூ.46 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தேர் அமைக்கும் பணி முழுமையடைந்ததையடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 
     இந்நிலையில் மாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த பிப்.13 அன்று கொடியேற்றதுடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவினையொட்டி 
தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய தேரோட்டம் தேரடி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு,மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் பிற்பகல் சுமார் 1 மணியளவில் நிலையினை அடைந்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இத்தேரோட்டத்தை திருவொற்றியூர் பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.  நூற்றுக்கணக்கான போலீஸார் ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
     இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாராயணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரிஅனந்தன், மண்டலக் குழு தலைவர் தனரமேஷ், கோயில் செயல் அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   விழாவின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேசுவரர்-சங்கிலிநாச்சியார் திருக்கல்யாண உற்சவம், மகிழடி சேவை, அறுபத்து மூவர் உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 
வரும் பிப்.21, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 


 
பெட்டிச் செய்தி:

இளைய தலைமுறையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் தேரோட்டம்

தேரோட்டம் குறித்து பாரதி பாசறை செயலாளர் முனைவர் மா.கி.ரமணன் கூறியது, 
    1941-ம் ஆண்டுவரை தேரோட்டம் முறையாக நடைபெற்றுள்ளது. பின்னர் அப்போதிருந்த தேர் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டதாகவும்,  இதனையடுத்து சுதந்திரப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதால் புதிய தேர் அமைப்பதில் யாரும் கவனம் செலுத்தவில்லை. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சேதமான தேர் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய தேரின் பாகங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 
அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தேரை அமைக்க தமிழக அரசு அமைத்துத் தந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்ட நிலையில் தற்போது முழுமையான தேரோட்டம் நடைபெற்றுள்ளது.  பழங்காலம் முதலே ஆன்மீக நகரங்களில் ஒன்றாக திருவொற்றியூர் இருந்து வந்துள்ளது. ஏங்கு ஏராளமான கோயில்களும், மடங்களும் இருக்கின்றன. தேரடி இருந்தும் தேர் இல்லாத குறை இளைய தலைமுறையினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்றார் ரமணன் 
சென்னை வந்த பாய்மரக் கப்பல்: கடற்படை வீராங்கணைகள் சாகச பயணம் 

திருவொற்றியூர், பிப்.12: ஐ.என்.எஸ்.வி. மாதேய்(Mhadei) என்ற பாய்மரக் கப்பல்  கடற்படையைச் சேர்ந்த வீராங்கணைகள் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இப்படகு சனிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.
   சில தினங்களுக்கு முன்பு விசாகபட்டனத்தில் சர்வதேச கடற்படை மதிப்பாய்வு -16 (International Fleet Review - 2016) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்கள் பங்கேற்றன. இந்திய கடற்படையின் சார்பில் சிறப்பம்சங்கள் கொண்ட ஐ.என்.எஸ்.வி. மாதேய் (Mhadei) என்ற பாய்மரக் கப்பல் பங்கேற்றது. இக்கப்பலில் முதல்முறையாக கேப்டன் முதல் ஊழியர்கள்வரை அனைவரும் கடற்படையைச் சேர்ந்த பெண் வீராங்கணைகளே பங்கேற்றனர். லெப்டினன்ட் கமாண்டார் வார்டிகா ஜோஷி தலைமையில் 6 வீராங்கணைகள் மாதேய் பாய்மரப்படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு கோவா திரும்பும் வழியில் இப்படகு சென்னைத் துறைமுகத்திற்கு சனிக்கிழமை வந்தடைந்தது. 
அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிக்கான கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் கப்பலில் வந்த வீராங்கணைகளை வரவேற்றார். இக்கப்பலம் வரும் பிப்.16, புதன்கிழமை வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் பயணத்தைத் தொடங்கும் இக்கப்பல் பிப்.2 அன்று கொச்சி துறைமுகம் சென்றடைகிறது. மார்ச் 2 அன்று இக்கப்பலின் இருப்பிடம் அமைந்துள்ள கோவா சென்றடையும். 
     பாய்மரக் கப்பலில் படகினை இயக்கிட எவ்வித மின் மோட்டார்களும் இணைக்கப்பட்டிருக்காது. காற்று வீசு திசைக்கேற்றவாறி கப்பலை இயக்க முடியும்.  எனவே இதில் நடுக்கடலில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் சவாலானது. இதே மாதேய் பாய்மரக்கப்பலிதான் அபிலாஷ் டோமி என்ற கடற்படை வீரர் தனி ஒருவராக 151 நாள்கள் பயணம் செய்து உலகத்தைச் சுற்றி கடந்த மார்ச் 31,2013-ம் ஆண்டு மும்பையில் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
   இந்நிலையி்ல் அடுத்த ஆண்டு மாதேய் மூலம் பெண் வீராங்கணைகள் மட்டும் உலகத்தை சுற்றிவர இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இதற்கு இப்பயணம் உறுதுணையாக இருக்கும் என இக்கப்பலில் பயணிக்கும் வீராங்கணைகள் தெரிவித்தனர். 
விமானம் தாங்கி போர்க் கப்பல் ஐ.என்.எஸ் விராட்டுக்கு சென்னையில் பிரியா விடை 

திருவொற்றியூர், பிப்.15: விரைவில் பணியிலிருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விராட் (INS VIRAAT)-க்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 
    இந்திய கடற்படையின் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விராட். இக்கப்பல் 1957-ம் ஆண்டு கட்டப்பட்டு பிரிட்டனின் ராயல் நேவியில் இணைக்கப்பட்டது. இக்கப்பலை 1987-ல் இந்தியா வாங்கி இந்திய கடற்படையில் இணைத்தது. அதிகபட்சம் 60 ஆண்டுகள்வரை மட்டுமே போர்க்கப்பல்கள் பணியில் வைத்திருக்க முடியும் என்பதால் ஒட்டுமொத்தமாக சுமார் 59 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் ஐ.என்.எஸ்.விராட்டுக்கு  கடற்படையிலிருந்து ஓய்வளிப்பது என பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 
     இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சர்வதேச கடற்படைக் கப்பல்கள் மதிப்பாய்வு-2016 என்ற நிகழ்ச்சி விசாகபட்டனத்தில் நடைபெற்றது. இதில் ஐ.என்.எஸ். விராட் கலந்து கொண்டது. இதுவே இக்கப்பலின் வழக்கமான இறுதிப் பணியாக இருந்தது. விரைவில் ஓய்வு அளிக்கப்பட்ட பிறகு ஆந்திர மாநிலத்திடம் ஒப்படைக்க 
பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இக்கப்பல் தனது பிரியாவிடை பயணத்தை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை சென்னை வந்த இக்கப்பலை ஏராளமானோர் கூடி நின்று வரவேற்றனர்.
நட்சத்திர விடுதியாக மாற்றத் திட்டம்:
   சுமார் 1,500 அறைகள் உள்ள இக்கப்பலை அருங்காட்சியகத்துடன் கூடிய ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென கப்பலை கரைக்குக் கொண்டு வந்து நிலைநிறுத்திட ரூ.400 கோடியும், ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையாக மாற்றியமைக்க ரூ.300 கோடியும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் சென்னத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட விராட் பயணத்தை மும்பைத் துறைமுகத்தில் நிறைவு செய்ய உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அடுத்த தலைமுறைக்கான உலக இளம் தலைவர்கள்: 240 பன்னாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி

ஜப்பானியக் கப்பல் சென்னை வந்தது

திருவொற்றியூர், பிப்.10:அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தயார்படுத்தும் சிறப்பு பயிற்சிக்காக 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240 இளைஞர்கள் ஜப்பான் நாட்டின் எம்.வி.நிப்பான் மேரு என்ற கப்பலில் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தடைந்தனர். 
   கப்பலில் வந்த இளைஞர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கப்பலிலிருந்து கீழே வந்த இளைஞர்களை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் இந்தியப் பாரம்பரிய முறைப்படி சந்தனம், மலர் மாலை, பூக்கள், இனிப்பு வகைகள் அளித்து வரவேற்றனர்.
  இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் பிரதிப் சோமசுந்தரம் கூறியது,
   தற்போது ஒவ்வொரு நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகமயமாக்கள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கேற்ற வகையில் அடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களைத் தேர்வு செய்து பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் அழைத்துச் சென்று அந்நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், வல்லமை, பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஜப்பான் அரசு அறிவித்து முழுமையான நிதி உதவியும் அளிக்கிறது. இதற்கென தேர்வுக் குழு அமைக்கப்பட்டு 120 ஜப்பான் நாட்டு இளைஞர்கள் மற்றும் இந்தியா, சோவியத் யூனியன், பஹ்ரைன், மெக்சிகோ, எமிரேட், உக்ரைன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, சிலி, தான்சானியா உள்ளிட்ட சேர்ந்தவர்கள் தலா 120 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
    இவர்கள் அனைவரும் ஜப்பான் நாட்டின் யோகொகோமா என்ற துறைமுகத்திலிருந்து எம்.வி.நிப்பான் மேரு என்ற கப்பலில் ஜன.26-ம் தேதி புறப்பட்டனர். செவ்வாய்க்கிழமை சென்னைத்துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள இவர்கள் புதன்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாச்சேத்ரா செல்கின்றனர். பின்னர் நான்கைந்து குழுக்களாகப் பிரிந்து பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சென்று இங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். பின்னர் இலங்கை சென்றுவிட்டு 34 நாள்கள் பயணத்திற்குப் பிறகு பிப்.29-ம் தேதி மீண்டும் ஜப்பான் சென்றடைகின்றனர் என்றார் பிரதிப் சோமசுந்தரம். 

சென்னையிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு கப்பலில் செல்லும் கார்கள்

துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர், பிப்.5:ஹூயூண்டாய் நிறுவனம் தயாரித்த சுமார் 800 இலகு ரக கார்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து குஜராத் மாநிலத்தின் பிபாவ் துறைமுகத்திற்கு கப்பலில் முதல்முறையாக எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வசதியை சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

    இதற்கான தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ. பாஸ்கராச்சார் கார்கள் ஏற்றுவதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இப்புதிய வசதி குறித்து பாஸ்கராச்சார் செய்தியாளர்களிடம் கூறியது, 
    உள்நாட்டுச் சரக்குகளை கடல் மார்க்கத்தில் கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்வதை கப்பல்த் துறை அமைச்சகம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதற்கென விரிவான கொள்கையை அமைச்சகம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியில் சென்னை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் கார்கள் வட மாநிலங்களுக்கு நீண்ட லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன. இக்கார்களை கப்பல் மூலம் குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து   
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேஷ் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து சைமெக்ஸ் மாரிடைம் என்ற நிறுவனத்தின் எம்.வி.ஐடிஎம் சைமெக்ஸ் என்ற கப்பல் மூலம் ஹூயூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் கார்களை குஜராத் மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி முதல்முறையாக இக்கப்பல் சுமார் 800 கார்களுடன் சென்னைத் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்கிறது. இக்கப்பலில் சுமார் 2 ஆயிரம் கார்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல முடியும். இக்கப்பல் 5 நாள்களில் குஜராத் மாநிலத்தின் பிபாவ் துறைமுகத்தை அடையும். இவ்வாறு கடல் மார்க்கத்தில் உள்நாட்டுச் சரக்குகளை எடுத்து செல்வதன் மூலம் சரக்குகளை இடமாற்றும் செலவு குறையும், சாலைப் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு குறையும்,  பயண நேரம் உள்ளிட்டவை வெகுவாகக் குறையும். எனவே இப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ஒரு காருக்கு ரூ.500 மட்டுமே சென்னைத் துறைமுகம் நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கிறது.  எனவே உள்நாட்டு சரக்குகளை கையாள சிறப்பு முனையம் சென்னைத் துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் பாஸ்கராச்சார்.
    இந்நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் சிரில்ஜார்ஜ், போக்குவரத்து மேலாளர் விமல், முதுநிலை துணை மேலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.