Thursday, 19 May 2016

தேர்தல் களம்: தொகுதி நிலவரம்

ஒற்றியூரில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் இருந்த திருவொற்றியூர் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் மாதவரம் தொகுதி தனியே பிரிந்து சென்றது.  தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூர், மணலி மண்டலங்கள் மட்டுமே இத்தொகுதியில் அடங்கியுள்ளது. இத்தொகுதியில் ஏராளமான  கனரகத் தொழிற்சாலைகளும், தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடைம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மீகத் தளங்களும் ஏராளமாக அதிக எண்ணிக்கையில் அமைந்துள்ளது இத்தொகுதியின் சிறப்பு .
தேர்தல் வரலாறு:
   1697-ல் உருவான இத்தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்கள் 1967,1971, 1989, 1996, 2006 ல் தி.மு.க.வும், 1977, 1991, 2001, 2011-ல் அதிமுகவும், 1980 அதிமுக கூட்டணியில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸும், 1984-ல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தற்போதைய எம்.எல்.ஏ கே.குப்பனை தவிர யாரும் இரண்டாவது முறையாக பேரவை உறுப்பினராக வெற்றிபெறவில்லை.திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெறும் கூட்டணிதான் தமிழகத்தில் எப்போதும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்ற வரலாறும் இத்தொகுதிக்கு உண்டு.  
வாக்காளர்கள் விபரம்:   
    இத்தொகுதியில் 2.86 லட்சம் மொத்த வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இத்தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர், மீனவர்கள் பெருவாரியாகவும், அதற்கடுத்த நிலையில் முதலியார், கிராமணி, நாடார், தேவர், யாதவர் உள்ளிட்டோர்  கணிசமான அளவிலும் உள்ளனர். இங்கு மொத்தம் 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அதில் இருவர் பெண்கள். மொத்தம் 292 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 
மும்முனை போட்டியா?
   தி.மு.க.வேட்பாளர் கே.பி.பி.சாமி, அ.தி.மு.க.சார்பில் பி.பால்ராஜ், தே.மு.தி.க. சார்பில் ஏ.வி. ஆறுமுகம், பா.ம.க.சார்பில் வழக்குரைஞர் ஆர்.வசந்தகுமாரி, பா.ஜ.க.சார்பில் சிவக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் இரா.கோகுல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் திமுக, அதிமுக இடையே இருமுனைப் போட்டி நிலவினாலும் இதனை முறியடிக்க தே.மு.தி.க முயற்சிக்கிறது. இதனால் மும்முனைப் போட்டியே ஏற்படலாம். 
சாதகமும் பாதகமும்:
கே.பி.பி.சாமி (திமுக):
    2006-ல் முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சாமி. மேலும் மீன்வளத்துறை அமைச்சராகவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். திமுக சார்பில் சாமியின் தந்தை பரசுராமன், மனைவி உமா, தம்பி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் நகராட்சி கவுன்சிலர்களாக பதவி வகித்துள்ளனர்.  இன்னொரு தம்பி கே.பி.சங்கர் தற்போது மாமன்ற உறுப்பினராக உள்ளார். தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் நன்கு அறிமுகம் ஆனவர். அமைச்சராக இருந்தபோது இப்பகுதியில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள்.  மீனவர் சமுதாய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் கணிசமான ஆதரவு இவரது பலம்.
     இவர் மீதும் தம்பிகள் மீதும் நிலுவையில் உள்ள கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டு வழக்குகள். திமுக எதிர் கோஷ்டியினரின் முழுமையான ஆதரவின்மை உள்ளிட்டவை இவரது பலவீனம்.
பி.பால்ராஜ் (அ.தி.மு.க):
   எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் உள்ளவர் பால்ராஜ். அதிமுக பிளவு பட்டிருந்தபோது ஜெயலலிதா தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த பால்ராஜ் மிக எளிமையானவர். ஏற்கனவே ஒரு முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளதன் மூலம் ஏற்படும் அனுதாபம், எந்தப் பெரிய பதவி இல்லாத நிலையிலும் ஜெயலலிதா வழங்கியுள்ள விசுவாச வாய்ப்பு,  கட்சியின் சின்னம் இரட்டை இலை என்பவை இவரது பலம் ஆகும்.
    ஆனால் பலத்தைவிட பலவீனம் அதிகம் காணப்படுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்வரை வேட்பாளர் மாற்றம் இருக்கக் கூடும் என்ற வதந்தியால் 
பிரச்சாரத்தில் தொய்வு, தற்போதைய எம்.எல்.ஏ.வான கே.குப்பன் ஆதரவின்மை,
ஒருங்கிணைக்கப்படாத வாக்குச் சேகரிப்பு உத்திகள், செலவு செய்வதில் மிகுந்த சிக்கனம், கட்சியின் முக்கிய பிரமுகர்களைக்கூட அரவணைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு, தனக்கென ஆதரவாளர்கள் இல்லாதது உள்ளிட்டவை பலவீனமாகக் கூறப்படுகிறது. 
ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.):
    கடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே மாமன்ற உறுப்பினர் இத்தொகுதியில் மணலியைச் சேர்ந்த ஒருவருக்கு முக்கிய கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியிருப்பதால் மணலி, சின்னச் சேக்காடு பகுதியில் கூடுதல் வாக்குகள் விழலாம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தொடரும் நிலையில் மீனவர் அல்லாத ஒருவருக்கு இந்தமுறை வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை, செலவில் தாராளம், கூட்டணி கட்சிகளில் கணிசமான வாக்கு வங்கி, முழுமையான ஒத்துழைப்பு உள்ளிட்டவை இவரது பலம்.
    பழைய தே.மு.தி.கவினரின் ஆதரவைப் பெறாதது, மணலியைச் சேர்ந்தவர் என 
நினைக்கும் திருவொற்றியூர் பகுதி வாக்காளர்கள், கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் உள்ளிட்டவை இவரது பலவீனமாக உள்ளன.
ஒற்றியூரில் வெற்றி யாருக்கு?
     இத்தொகுதியில் மாநிலம் தழுவிய சூழ்நிலைக்கு ஏற்ப திமுகவும், அதிமுகவும் மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தற்போது பெரிய அளவில் எவ்வித தாக்கமும் மாநில அளவில் ஏற்படாத நிலையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குதான் திருவொற்றியூரில் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் நிலைதான் மேலோங்கியுள்ளது. அந்த வகையில்தான் மக்களிடம் நன்கு அறிமுகம் பெற்றுள்ள திமுக வேட்பாளர் கே.பி.பி.சாமி முன்னிலை வகிக்கிறார் என்பதை தற்போதைய நிலை. ஆனால் இதனை முறியடிக்க பால்ராஜ் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே தே.மு.தி.க.வேட்பாளர் சூராவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் எனில் வெற்றி யாருக்கு? வெற்றியை உறுதியாக்குவது வாக்காளர்கள்களின் கையில்தானே உள்ளது?
ரூ.350-க்கு சீன நாட்டின் அலைபேசிதான் தருவார் ஜெயலலிதா 

நடிகை குஷ்பு பிரச்சாரம்

திருவொற்றியூர், மே 6:அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அனைத்து குடும்பங்களுக்கும் அலைபேசி தருவதாகக் கூறியுள்ளார். இதன்படி ரூ. 350 மதிப்புள்ள சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட அலைபேசிதான் தருவார். இதன்மூலம் யாருக்கு லாபம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு வெள்ளிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
   ராயபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து நடிகை குஷ்பு ராயபுரம் தொகுதிக்குட்பட்ட படவேட்டம்மன் தெரு, கெனால் தெரு, மூலக்கொத்தளம், எம்.எஸ்.நகர், போஜராஜநகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை வீதிவீதியாக வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது குஷ்பு பேசியது,
   மக்களைக் குழப்ப வேண்டும், ஏமாற்ற வேண்டும் என திட்டமிட்டுத்தான் 
மிகுந்த காலதாமதத்திற்குப் பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்
ஜெயலலிதா. இதில் பல அம்சங்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையை பிரதி எடுத்தது போல்தான் உள்ளன. இலவசமாக மொபைல் போன் தருவோம் எனக் கூறியுள்ளார். ரூ.350-க்கு சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்தான் வாங்கித் தருவார்.
இதனை ஈடுகட்ட ஆயிரம் ரூபாய்க்கு மதுவிற்பனை வருவாயை அதிகரிப்பார். இவ்வளவு இலவசத் திட்டங்களை அறிவித்துள்ள ஜெயலலிதா மதுவிலக்கைக் கொண்டு வர மாட்டார்.  எனவே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ஓடி வந்து உதவிகளைச் செய்த மனோவிற்கு வாக்களியுங்கள் என்றார் குஷ்பு
   பிரச்சாரத்தின்போது திமுக நிர்வாகிகள் ந.மனோகரன், வ.பெ.சுரேஷ்,  கட்பீஸ் பழனி காங்கிரஸ் நிர்வாகிகள் கண்ணன்,ரூப்சந்தர், கிருஷ்ணதாஸ், வெங்கடேசன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Thursday, 5 May 2016

திருவொற்றியூர் தெப்பக்குளம் தண்ணீர் வற்றியது

மீன்கள் சிறிய குளத்திற்கு மாற்றம்

திருவொற்றியூர், ஏப்.4:திருவொற்றியூர் தெப்பக்குளம் வரண்டு போனதையடுத்து இக்குளத்தில் இருந்த மீன்கள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்திற்கு மாற்றும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
   திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்று. இக்கோயிலின் வடகிழக்கில் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு மழைநீர் வரும் பெரும்பாலான வழிகள் அடைத்துப் போய்விட்டன. இதனைச் சீரமைக்கும் பணிகள் பலமுறை நடைபெற்று வந்தாலும் 
போதிய தண்ணீர் வரத்து இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த 
கனமழையிலும் குளம் முற்றிலுமாக நிரம்பவில்லை. இருப்பினும் சில சுமார் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் நிரம்பியிருந்தது. இதில் சிலர் மீன் குஞ்சுகளை விட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது தண்ணீர் வற்றிவிட்டதால் கடும் வெயிலைச் சமாளிக்க முடியாத நிலை மீன்கள் செத்துமடியும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் வலைமூலம் பிடிக்கப்பட்டு அவற்றை கோயிலின் உள் வளாகத்தில் உள்ள சிறிய குளத்தில் விட்டனர். இதனால் மீன்கள் செத்துப் போய்
துர்நாற்றம் வீசுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளே உள்ள குளத்திலும் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் விரைவில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்ப உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
ராயபுரம் மனோவை ஆதரித்து குமரி அனந்தன் பிரச்சாரம்

திருவொற்றியூர்,மே4:ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி்அனந்தன் புதன்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டதையடுத்து 
இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்டத் தலைவர் ஆர்.மனோ போட்டியிடுகிறார். மனோவை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், செய்தி தொடர்பாளர் குஷ்பு, முன்னாள் எம்.பி. ராணி உள்ளிட்டோர் ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் புதன்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது குமரிஅனந்தன் பேசியது,
   நீண்ட வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சி இந்நாட்டிற்கு தொடர்து தொண்டாற்றி வருகிறது. இதேபோல் வடசென்னையில் பல்வேறு சமூக நலப் பணிகளில் மனோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரின் தன்னலமில்லாத மக்கள் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இத்தேர்தலில் வெற்றியடையச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடர்ந்து மக்கள் நலத் திட்டப் பணிகளில் மனோ ஈடுபடுவார். மேலும் கருணாநிதி ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பது உறுதி என்றார் அனந்தன்.
  பிரச்சாரத்தின்போது முன்னாள் எம்.எல்.ஏ மதிவானன், திமுக பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி, இளைய அருணா, ஜெயபால், காங்கிரஸ் நிர்வாகிகள் எர்னாஸ்ட்பால், சபரிநாதன், தொகுதி செயலாளர் ரூப்சந்தர், கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் உடன் சென்றனர். 
ராயபுரத்தில் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைப்பேன்

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.மனோ வாக்குறுதி

திருவொற்றியூர், மே 2:நான் வெற்றி பெற்றால் ராயபுரம் தொகுயில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் அமைப்பேன் என ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.மனோ திங்கள்கிழமை கூறினார். 
திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ராயபுரம் மனோ ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது, 
     முந்தைய தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தபோதும் தொண்டு நிறுவனம் தொடங்கி தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை 600 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளேன். சுமார் ஆயிரம் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து இலவச தையல்மெஷின்கள் வழங்கியுள்ளேன். இது தவிர மாணவர்களுக்கான இலவச கணிணி பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 4 ஆயிரம் பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இதுவரை 389 பேருக்கு கண்புரை 
அறுவைச் சிகிச்சையும், 1,100 பேருக்கு மூக்குக் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. 
   ராயபுரம் பயணிகள் ரயில் முனையம் அமைக்கப்படும், பாலிடெக்னிக் கொண்டு வரப்படும், இத்தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நவீனப்படுத்தப்படும், பழுதடைந்த பூங்காக்கள் சீரமைக்கப்படும், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை, மூலக்கொத்தளம் மயான பூமி நவீனமயமாக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மாணவ,மாணவியருக்கான விடுதிகள் தரம் உயர்த்தப்படும். எம்.சி.சாலையில் உள்ள முதியோர் இல்லம் சீரமைக்கப்படும்.
   மீனவ சமுதாய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசு வேலை, வங்கிகள் உள்ளிட்டவைகளில் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக தொடர்பயிற்சிகள் அளிக்கப்படும். குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் (ஐ.ஏ.எஸ். அகாடெமி) ராயபுரத்தில் அமைக்கப்படும் என்றார் மனோ.
    வாக்குச் சேகரிப்பின்போது திமுக பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், கட்பீஸ் பழனி உள்ளிட்டோர் உடன் சென்றனர். 
ராயபுரம் தொகுதியில் 12 ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளேன்

டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,

திருவொற்றியூர்,மே.2:முன்பு பொட்டல் காடாகக் காட்சியளித்த ராயபுரம் தொகுதியில் இதுவரை 12 ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளேன் என தெரிவிக்கிறார் இத்தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் டி.ஜெயக்குமார்.
இனி அவரது வார்த்தைகளில்....
   ஒரு காலத்தில் ராயபுரம், காசிமேடு என்றாலே வெட்டு, குத்துதான் அதிகமிருக்கும் என்ற நிலையை மாற்றி இன்றைக்கு இத்தொகுதி அமைதிப் பூங்காவாக வீற்றிருக்கிறது. துறைமுகத்தில் கையாளப்பட்டு வந்த நிலக்கரி, இரும்புத்தாது மாசுவால் வடசென்னையே பாழ்பட்டுப் போனது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவற்றைக் கையாள தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் மாசுவிலிருந்து இப்பகுதி மீண்டுள்ளது. கண்டெய்னர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த இப்பகுதியில் மாநில அரசுடன் இணைந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் விடியல் ஏற்பட்டுள்ளது. தற்பொது பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் கண்டெய்னர் லாரிகள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
    நான் வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். அப்போது ராயபுரம் பொட்டல்காடாக இருந்து வந்தது. மேலும் சிறிய சிறிய தெருக்கள் அடங்கிய பகுதி இது. இருப்பினும் ஆங்காங்கு மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். தற்போது 12 ஆயிரம் மரங்கள் செழித்தோங்கியுள்ளன. 
    இருநூறு ஆண்டுகள் பழமை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். தாய் சேய் மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு சுமார் ரூ.10 கோடி செலவில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம்  கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தங்கச்சாலை தொழிற் பயிற்சி மையம், மாநகராட்சி உருது பள்ளி உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 
     குடிசைகள் நிறைந்த ராயபுரம் தொகுதியில் சிங்கவேலர் நகர், எம்ஜிஆர் நகர், ஜி.எம்.பேட்டை, இந்திராநகர், பார்த்தசாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் தீ விபத்துகள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் சுமார் 1,600 காவலர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டு்ள்ளன.
     ராயபுரத்தில் அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. சூரியநாராயணா தெரு, மன்னார்சாமி கோயில் தெருவில் சாலைக்கு அடியில் மிகப்பெரிய நீண்ட மழைநீர் வடிகால் கால்வாய் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது. இக்கால்வாய் முற்றிலும் தூர்ந்து போயிருந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் படிப்படியாக முழுமையாகத் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால்தான் சமீபத்திய கனமழையால் ராயபுரம் பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பியது.  இதேபோல் மழைநீர் வடிகால், கழிவு குழாய், நீரேற்று நிலையங்கள், சாலைகள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.  ராயபுரம் மேம்பாலம், தங்கச்சாலை மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.
    மீனவர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிங்காரவேலர், ஜீவரத்தினம் ஆகியோருக்கு ரூ.3 கோடி செலவில் நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் சுமார் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டுள்ளன. 2,500 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், 15 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள், 6 ஆயிரம் மாணவர்களுக்கு மடி கணிணி வழங்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் 100 சதவீதம் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளேன் என்று பட்டியலிட்ட ஜெயகுமாரிடம்
கிடப்பில் உள்ள திட்டங்கள் குறித்துக் கேட்டபோது,
    50 வருடக் கனவு திட்டமான போஜராஜ நகர் ரயில்வே சுரங்கப்பாதை ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மற்றொன்று ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முணையமாக்கும் திட்டம்.
இத்திட்டத்திற்கான நிலம், நிதி உள்ளிட்ட அனைத்தையும் தர அ.தி.மு.க. அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஏன் இத்திட்டத்தை விரைந்து முடிக்கவில்லை என கேள்வி எழுப்பினார் ஜெயக்குமார்.  

சிங்காரச் சென்னை தற்போது சீரழிந்த சென்னையாக மாறிவிட்டது

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவொற்றியூர், ஏப்.28:சிங்காரச் சென்னை தற்போது சீரழிந்த சென்னையாக மாறிப்போய்விட்டது. இதற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிதான் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.
   வடசென்னையில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.மனோ, திமுக வேட்பாளர்கள் ஆர்.கே.நகர் - சிம்லா முத்துச் சோழன், திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி, மாதவரம்-எஸ்.சுதர்சனம் உள்ளிட்டோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வேனில் இருந்தபடியே வியாழக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது திருவொற்றியூரில் ஸ்டாலின் பேசியது,
    ஜெயலலிதா முதல்வராகப் பதவியில் இருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதாவது மாவட்டத் தலைநகரங்களுக்கோ அல்லது முக்கிய நகரங்களுக்கோ சென்று மக்களை நேரடியாகச் சந்தித்தது உண்டா? தேர்தலின் போது மட்டுமே மக்களைச் சந்திப்பவர்தான் ஜெயலலிதா. ஆனால் கடந்த முறை சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கியபோது பதவியில் இல்லாத போதும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர் கருணாநிதி. நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ஜெயலலிதா செல்வது அவரது பண்ணை வீடு, தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிடுவதற்குதானே ஒழிய மக்களைச் சந்திக்க அல்ல. 
   திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மிகச் சிறந்த அண்ணா நூலகத்தை மூடினார், எழில் நிறைந்த செம்மொழிப் பூங்காவை சீர்குழைத்தார், மாநகரப் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கும் மதுரவாய

கிழக்கு கடலோரக் காவல் படை தளபதிக்கு பிரிவு உபசார விழா

கப்பல்கள் அணிவகுக்க நடுக்கடலில் நடைபெற்றது

திருவொற்றியூர், ஏப்.27:இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா வரும் ஏப்.30 தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி பிரிவு உபசார விழா சென்னைக்கு அருகே நடுக்கடலில் புதன்கிழமை நடைபெற்றது.
   இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. முன்பு தமிழ்நாடு முதல் மேற்கு வங்க மாநிலம் வரை விரிந்திருந்த இப்பிரிவு தற்போது ஆந்திரமாநிலம்வரை நீடிக்கிறது. இப்பிரிவின் தளபதிதாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த சத்ய பிரகாஷ் வரும் சனிக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி பிரிவு உபசார விழா சென்னைக்கு அருகே நடுக்கடலில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடலோரக் காவல்படையின் 9 ரோந்துக் கப்பல்கள், இரண்டு ரோந்து விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் பங்கேற்றன. அப்போது கடலோரக் காவல்படையின் வழக்கமான 
பணிகள் குறித்த செயல் விளக்க காட்சிகள் நடைபெற்றன. பின்னர் கப்பல்கள் அணி வகுக்க தளபதி சர்மாவுக்கு வீரர்கள் வணக்கம் தெரிவித்து பிரியாவிடை அளித்தனர்.
36 ஆண்டுகளாக பணியாற்றியது பெருமை:
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.சர்மா செய்தியாளர்களிடம் கூறியது,
   இந்திய கடலோரக்காவல்படையில் 36 ஆண்டுகள் இடைவிடாது பணியாற்றி உள்ளேன். இதில் கிழக்கு பிராந்தியத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது பெருமையாக உள்ளது. என்னுடைய பணிகாலத்தில் அனைத்து மாநில அரசு நிர்வாகங்கள் இணக்கமாகவே செயல்பட்டுள்ளன. தற்போது இப்பிராந்தியத்தில் 33 ரோந்துக் கப்பல்கள், 4 ரோந்து விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் உள்ளன. மாநில அரசுகளின் உதவியுடன் தளங்கள் அமைக்க தூத்துக்குடியின் 50 ஏக்கர், புதுச்சேரியில் 5 ஏக்கர், கிருஷ்ணபட்டனத்தில் 20 ஏக்கர், விசாகபட்டனத்தில் 5 ஏக்கர் நிலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் சென்னைத் துறைமுகத்தையொட்டி எட்டு அடுக்குகள் கொண்ட கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளது. 
     கடலோரக்காவல்படை என்பது வெறும் ரோந்துப் பணி மட்டுமல்ல. நாட்டின் பொருளாதார உறுதித் தன்மையைப் பாதுக்காப்பது உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாயந்த பல்வேறு முக்கிய பணிகளில் இப்படையினர் ஈடுபட்டு வருகினர். இதில் 
சேறுவதற்கு இளைஞர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சர்மா.
தொகுதி அறிமுகம்: ராயபுரம் 

சட்டப் பேரவை தொகுதி வரிசை எண்: 17
    
வரலாறு:
      சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் தொகுதி 1957 முதல் இருந்து வருகிறது. சேப்பாக்கம் பகுதியில் இருந்து வந்த மீனவர் குடியிருப்புகளை ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக அங்கிருந்து அகற்றி ராயபுரத்தில் குடியமர்த்தியுள்ளனர். இதேபோல் சலவைத் தொழில் நடைபெற்று வந்த வண்ணையம்பதி என்றழைக்கப்பட்ட தற்போதைய வண்ணாரப்பேட்டை இத்தொகுதியில்தான் அடங்கியுள்ளது. மறுசீரமைப்பின்போது காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீனவர் குடியிருப்புகள் நீக்கப்பட்டு மூல கொத்தளம் உள்ளிட்ட பகுதிகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான பருப்பு ஆலைகள், நூற்றுக்கணக்கான ஜவுளிக் கடைகள், மிட்டாய், பிஸ்கட், தின்பண்டங்கள் தயாரிக்கும் சிறு தொழில்கள் உள்ளிட்டவை இங்கு முக்கிய தொழில்களாக உள்ளன
சிறப்புகள்:
    1929-ல் ஆங்கிலேயர்களின் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் சர்ச், 1826 ம் ஆண்டு ராஜா சர் ராமசாமி முதலியாரால் தொடங்கப்பட்டு இன்று வரை வடசென்னை மக்களின் தாய் சேய் மருத்துவ ஆதாரமாக விளங்கும் ஆர்எஸ்ஆர்எம் நினைவு மருத்துவமனை, 1856-ல் அமைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் இப்பகுதியின் பழமையை வெளிப்படுத்துகிறது.
     ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்த முஸ்லிம் துறவி குனங்குடி மஸ்தான் சாஹி்ப் வடசென்னையில் வாழ்ந்து மறைந்தார். இவரது நினைவாகத்தான் தண்டையார்பேட்டை(தொண்டியார்பேட்டை)உருவானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் பகுதியிலிருந்து வந்த பார்சி இன மக்கள் முதன் முதலில் குடியேறியது ராயபுரத்தில்தான். தற்போதும் சென்னையில் பார்சி இனமக்கள் வணங்கும் நெருப்பு கோயில் (Fire Temple) இங்கு மட்டுமே உள்ளது. மேலும் தமிழகத்தின் முக்கிய அரசியல் நிகழ்வான தி.மு.கவின் தொடங்கப்பட்டது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான். இவைகளெல்லாம் ராயபுரத்தின் பழம்பெருமையை உணர்த்துகின்றன. 
தொகுதியில் எல்லைகள், அடங்கியுள்ள பகுதிகள்:
    சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்திற்குட்பட்ட  48 முதல் 53 வரையிலான மொத்தம் 6 வார்டுகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. ராயபுரம் தொகுதிக்கு கிழக்கே துறைமுகமும், வடக்கே காசிமேடுவும் தெற்கே துறைமுகம் தொகுதியும் மேற்கே மூலக்கொத்தளம் பகுதியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 
தற்போதைய வாக்காளர்கள்
          ஆண்         :  89,744
          பெண்         :  92,533
          திருநங்கை    :      39
      
மொத்த வாக்காளர்கள்   : 1,82,453

மொத்த வாக்குச் சாவடிகள்  :181

தொகுதியில் வென்றவர்கள்:

 1957  எம்.மாயாண்டி நாடார்    - இந்திய தேசிய காங்கிரஸ்
 1962  எம்.மாயாண்டி நாடார்    - இந்திய தேசிய காங்கிரஸ்
 1967  எம்.வேதாச்சலம்         - திமுக
 1971  எம்.வேதாச்சலம்         - திமுக
 1977  பி.பொன்னுரங்கம்        - திமுக
 1980  பி.பொன்னுரங்கம்        - திமுக
 1984  பி.பொன்னுரங்கம்        - திமுக 
 1989  ஆர்.மதிவாணன்         - திமுக
 1991   டி.ஜெயக்குமார்         - அதிமுக
 1996   ஆர்.மதிவாணன்        - திமுக
 2001   டி.ஜெயக்குமார்         - அதிமுக
 2006   டி.ஜெயக்குமார்         - அதிமுக
 2011   டி.ஜெயக்குமார்         - அதிமுக


தேர்தல் நடத்தும் அலுவலர்/தொடர்பு எண்:
                           கே.பாலசுப்பிரமணியன் 
    சென்னை மாநகராட்சி 5-வது மண்டல அலுவலர், செல்லிடபேசி எண்: 94450-06554


இந்தியா - நெதர்லாந்து இடையேயுள்ள தொழில் வாய்ப்புகள் 

சென்னையில் இன்று கருத்தரங்கம் 

திருவொற்றியூர், ஏப்.25:நெதர்லாந்து நாட்டுடனான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (இன்று)  சென்னையில் நடைபெறுகிறது.
   சென்னை தொழில் வர்த்தக சங்கம் (MCCI-Madras Chamber of Commerce and Industries) மற்றும் சென்னையிலுள்ள நெதர்லாந்து வணிக ஆதரவு அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் தகவல் தொழில் நுட்பம், விவசாயம், தளவாடம், தண்ணீர், எரிசக்தி, நகர்ப்புர வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட 
உள்ளது. நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரபாகரன், நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் மைக்கேல் பிர்க்கன்ஸ், மைக்கேல் வான் எர்கல், ஸ்டேன்ஸ் கிளிஜ்னன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கருத்தரங்க விபரங்களுக்கு 24349452/24349871 தொடர்பு கொள்ளலாம்.
மதுவிலக்கை அமல்படுத்துவதில் மக்கள் காதில் பூ சுற்றுகிறார் ஜெயலலிதா 

நடிகை குஷ்பு 

திருவொற்றியூர், ஏப்.25:அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறுவது மக்கள் காதில் பூ சுற்றும் வேலைதான் என காங்கிரஸ் கட்சி அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு திங்கள்கிழமை கூறினார்.
    தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து நடிகை குஷ்பு திங்கள்கிழமை தொடர்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
அப்போது குஷ்பு பேசியது,
    கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் பதவியில் உள்ள ஜெயலலிதா மக்களைச் சந்தித்துள்ளாரா? அல்லது அவரைத்தான் மக்கள் நேரில் சென்று சந்திக்க முடியுமா? சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதிக்கு வந்த ஜெயலலிதா காரை விட்டு கீழே இறங்கினாரா? எனவே மக்களைச் சந்திக்காத ஜெயலலிதா பணத்தைச் செலவழித்து வாக்குகளை வாங்கிவிடலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். அரசு
பணத்தில் ரூ.500 கோடி நிவாரணம் வழங்கிய ஜெயலலிதா, தனது சொந்தப் பணத்தில் ரூ.1,000 கோடிக்கு தியேட்டர்களை வாங்குகிறார். 
    மக்களுக்காகவே நான் எனக் கூறும் ஜெயலலிதா சொந்தப் பணத்தில் மக்களுக்காக என்ன செலவு செய்தார் வாக்காளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தொடக்கத்தில் ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுவிலக்கைக் கொண்டு வராத ஜெயலலிதா
தற்போது படிப்படியாக அமல்படுத்துவேன் என உறுதி அளிப்பது வாக்காளர்களின் காதுகளில் பூச்சுற்றும் வேலைதான். பீகார் மாநிலத்தில்  காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிதீஷ்குமார் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார். இதேபோல் தமிழகத்திலும் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது.
    ராயபுரம் மனோ முன்பு போட்டியிட்ட போதெல்லாம் தோல்வியைச் சந்தித்துள்ளார். 
ஆனால் தொடர்ந்து இப்பகுதியில் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றி வருகிறார். எனவே மனோவை ஒருமுறை வெற்றிபெற வையுங்கள். ஜெயலலிதாவின் அராஜக ஆட்சிக்கு 
முடிவு கட்ட தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள். ஜெயலலிதாவிற்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள் என்றார் குஷ்பு.