Thursday, 5 May 2016

ராயபுரத்தில் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைப்பேன்

காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.மனோ வாக்குறுதி

திருவொற்றியூர், மே 2:நான் வெற்றி பெற்றால் ராயபுரம் தொகுயில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் அமைப்பேன் என ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.மனோ திங்கள்கிழமை கூறினார். 
திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ராயபுரம் மனோ ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது, 
     முந்தைய தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தபோதும் தொண்டு நிறுவனம் தொடங்கி தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை 600 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளேன். சுமார் ஆயிரம் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து இலவச தையல்மெஷின்கள் வழங்கியுள்ளேன். இது தவிர மாணவர்களுக்கான இலவச கணிணி பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 4 ஆயிரம் பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இதுவரை 389 பேருக்கு கண்புரை 
அறுவைச் சிகிச்சையும், 1,100 பேருக்கு மூக்குக் கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. 
   ராயபுரம் பயணிகள் ரயில் முனையம் அமைக்கப்படும், பாலிடெக்னிக் கொண்டு வரப்படும், இத்தொகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நவீனப்படுத்தப்படும், பழுதடைந்த பூங்காக்கள் சீரமைக்கப்படும், குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை, மூலக்கொத்தளம் மயான பூமி நவீனமயமாக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மாணவ,மாணவியருக்கான விடுதிகள் தரம் உயர்த்தப்படும். எம்.சி.சாலையில் உள்ள முதியோர் இல்லம் சீரமைக்கப்படும்.
   மீனவ சமுதாய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அரசு வேலை, வங்கிகள் உள்ளிட்டவைகளில் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக தொடர்பயிற்சிகள் அளிக்கப்படும். குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் (ஐ.ஏ.எஸ். அகாடெமி) ராயபுரத்தில் அமைக்கப்படும் என்றார் மனோ.
    வாக்குச் சேகரிப்பின்போது திமுக பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், கட்பீஸ் பழனி உள்ளிட்டோர் உடன் சென்றனர். 

No comments:

Post a Comment