மதுவிலக்கை அமல்படுத்துவதில் மக்கள் காதில் பூ சுற்றுகிறார் ஜெயலலிதா
நடிகை குஷ்பு
திருவொற்றியூர், ஏப்.25:அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறுவது மக்கள் காதில் பூ சுற்றும் வேலைதான் என காங்கிரஸ் கட்சி அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு திங்கள்கிழமை கூறினார்.
தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து நடிகை குஷ்பு திங்கள்கிழமை தொடர்பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது குஷ்பு பேசியது,
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் பதவியில் உள்ள ஜெயலலிதா மக்களைச் சந்தித்துள்ளாரா? அல்லது அவரைத்தான் மக்கள் நேரில் சென்று சந்திக்க முடியுமா? சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதிக்கு வந்த ஜெயலலிதா காரை விட்டு கீழே இறங்கினாரா? எனவே மக்களைச் சந்திக்காத ஜெயலலிதா பணத்தைச் செலவழித்து வாக்குகளை வாங்கிவிடலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். அரசு
பணத்தில் ரூ.500 கோடி நிவாரணம் வழங்கிய ஜெயலலிதா, தனது சொந்தப் பணத்தில் ரூ.1,000 கோடிக்கு தியேட்டர்களை வாங்குகிறார்.
மக்களுக்காகவே நான் எனக் கூறும் ஜெயலலிதா சொந்தப் பணத்தில் மக்களுக்காக என்ன செலவு செய்தார் வாக்காளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தொடக்கத்தில் ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுவிலக்கைக் கொண்டு வராத ஜெயலலிதா
தற்போது படிப்படியாக அமல்படுத்துவேன் என உறுதி அளிப்பது வாக்காளர்களின் காதுகளில் பூச்சுற்றும் வேலைதான். பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிதீஷ்குமார் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார். இதேபோல் தமிழகத்திலும் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது.
ராயபுரம் மனோ முன்பு போட்டியிட்ட போதெல்லாம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து இப்பகுதியில் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றி வருகிறார். எனவே மனோவை ஒருமுறை வெற்றிபெற வையுங்கள். ஜெயலலிதாவின் அராஜக ஆட்சிக்கு
முடிவு கட்ட தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள். ஜெயலலிதாவிற்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள் என்றார் குஷ்பு.
No comments:
Post a Comment