ராயபுரம் தொகுதியில் 12 ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளேன்
டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,
திருவொற்றியூர்,மே.2:முன்பு பொட்டல் காடாகக் காட்சியளித்த ராயபுரம் தொகுதியில் இதுவரை 12 ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளேன் என தெரிவிக்கிறார் இத்தொகுதியில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் டி.ஜெயக்குமார்.
இனி அவரது வார்த்தைகளில்....
ஒரு காலத்தில் ராயபுரம், காசிமேடு என்றாலே வெட்டு, குத்துதான் அதிகமிருக்கும் என்ற நிலையை மாற்றி இன்றைக்கு இத்தொகுதி அமைதிப் பூங்காவாக வீற்றிருக்கிறது. துறைமுகத்தில் கையாளப்பட்டு வந்த நிலக்கரி, இரும்புத்தாது மாசுவால் வடசென்னையே பாழ்பட்டுப் போனது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவற்றைக் கையாள தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச் சூழல் மாசுவிலிருந்து இப்பகுதி மீண்டுள்ளது. கண்டெய்னர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த இப்பகுதியில் மாநில அரசுடன் இணைந்த சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் விடியல் ஏற்பட்டுள்ளது. தற்பொது பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் கண்டெய்னர் லாரிகள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நான் வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். அப்போது ராயபுரம் பொட்டல்காடாக இருந்து வந்தது. மேலும் சிறிய சிறிய தெருக்கள் அடங்கிய பகுதி இது. இருப்பினும் ஆங்காங்கு மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். தற்போது 12 ஆயிரம் மரங்கள் செழித்தோங்கியுள்ளன.
இருநூறு ஆண்டுகள் பழமை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். தாய் சேய் மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு சுமார் ரூ.10 கோடி செலவில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தங்கச்சாலை தொழிற் பயிற்சி மையம், மாநகராட்சி உருது பள்ளி உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
குடிசைகள் நிறைந்த ராயபுரம் தொகுதியில் சிங்கவேலர் நகர், எம்ஜிஆர் நகர், ஜி.எம்.பேட்டை, இந்திராநகர், பார்த்தசாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் தீ விபத்துகள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் சுமார் 1,600 காவலர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டு்ள்ளன.
ராயபுரத்தில் அடிப்படை வசதிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. சூரியநாராயணா தெரு, மன்னார்சாமி கோயில் தெருவில் சாலைக்கு அடியில் மிகப்பெரிய நீண்ட மழைநீர் வடிகால் கால்வாய் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது. இக்கால்வாய் முற்றிலும் தூர்ந்து போயிருந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் படிப்படியாக முழுமையாகத் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால்தான் சமீபத்திய கனமழையால் ராயபுரம் பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பியது. இதேபோல் மழைநீர் வடிகால், கழிவு குழாய், நீரேற்று நிலையங்கள், சாலைகள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. ராயபுரம் மேம்பாலம், தங்கச்சாலை மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிங்காரவேலர், ஜீவரத்தினம் ஆகியோருக்கு ரூ.3 கோடி செலவில் நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் சுமார் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டுள்ளன. 2,500 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், 15 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள், 6 ஆயிரம் மாணவர்களுக்கு மடி கணிணி வழங்கப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் 100 சதவீதம் வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளேன் என்று பட்டியலிட்ட ஜெயகுமாரிடம்
கிடப்பில் உள்ள திட்டங்கள் குறித்துக் கேட்டபோது,
50 வருடக் கனவு திட்டமான போஜராஜ நகர் ரயில்வே சுரங்கப்பாதை ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மற்றொன்று ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முணையமாக்கும் திட்டம்.
இத்திட்டத்திற்கான நிலம், நிதி உள்ளிட்ட அனைத்தையும் தர அ.தி.மு.க. அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஏன் இத்திட்டத்தை விரைந்து முடிக்கவில்லை என கேள்வி எழுப்பினார் ஜெயக்குமார்.
No comments:
Post a Comment