Tuesday, 26 November 2013

திருவொற்றியூர் கடற்கரையில் கடல் மணலை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லின் இயந்திரம்

முகவை.க.சிவகுமார்.
திருவொற்றியூர்.

-திருவொற்றியூர் கடற்கரையில் மணலை அள்ள உத்தரவிட்டது யார்?


-கடற்கரை மேலாண்மைக் குழுமம் விசாரணை நடத்தக் கோரிக்கை


திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையில் பொக்கலின் இயந்திரத்தைப் பயன்படுத்தி லாரிகளில் மணல் அள்ள உத்தரவிட்டது யார் என்பது குறித்து கடற்கரை மேலாண்மை பாதுகாப்புக் குழுமம் விசாரணை நடத்தை வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே கடற்கரையை ஒட்டி  மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் காலி நிலம் உள்ளது. இந்நிலத்தை தற்போது சென்னைத் துறைமுகத்திற்கு 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு மாநகராட்சி விட்டுள்ளது. இதற்கு மாதம் ரூ.15 லட்சம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடத்தை அமைக்க துறைமுக நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் ரூ. 6 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

கடல் மணல் கடத்தல்?:

    இம்மையத்தை ஒட்டிய பகுதியில் கடற்கரையில் உள்ள மணலை பொக்கலின் இயந்திரம் மூலம் குவித்து லாரிகளில் கடத்தும் முயற்சியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து மணலை அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மணலை அள்ள முயற்சித்தவர்கள் துறைமுக நிர்வாகம்தான் மணலை அள்ள அனுமதி அளித்தது. இங்கு அள்ளும் மணலை வாகன நிறுத்த மையத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்போவதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள, போலீஸார் என அனைத்து தரப்பினரும் குவிந்ததையடுத்து மணல் அள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.
இது குறி்த்து திருவொற்றியூர் சமூக நல ஆர்வலர் என்.துரைராஜ் கூறியது,
    திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் தொடர்ந்து இருந்து வரும் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் பயனாக கடற்கரையில் கடலரிப்பு தடுக்கப்பட்டு அங்கு மணல்மேடுகள்  உருவாகி வருகின்றன. இம்மணலை அவ்வப்போது சிலர் கடத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது துறைமுக நிர்வாகமே இயந்திரங்கள் மூலம் மணலைக் குவித்து லாரிகளில் எடுத்துச் செல்ல முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. உண்மையிலேயே துறைமுக நிர்வாகம் உத்தரவிட்டதா? ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக இச்செயலை மேற்கொண்டார்களா என
விசாரணை நடத்த வேண்டும்.
    காசிமேடு மீன்பிடித் துறைமுக பகுதியில் துறைமுக இணைப்புச் சாலை பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்குப் பதிலாக ஆழ்படுத்தி, சமன்படுத்தும் பணி தாமதம் ஆவதற்கு கடற்கரை மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுமத்தின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை துறைமுக அதிகாரிகள் காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் திருவொற்றியூரில் எவ்வித அனுமதியும் இன்றி கடல் மணலை அள்ளும் முயற்சிகள் குறித்து கடற்கரை மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுமம் தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும். 

துறைமுகத் தலைவர் மறுப்பு:

    இது குறித்து சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ராவிடம் இப்பிரச்னை குறித்துக் கேட்டபோது அவர் அளித்த பதில்:
    கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் திருவொற்றியூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்த மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு கடற்கரை மணலை அள்ள துறைமுக நிர்வாகம் எவ்வித உத்தரவையும் அளிக்கவில்லை. மணலை அள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றார் மிஸ்ரா. 
    கடலரிப்பைத் தடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் பயனாக வடசென்னை கடற்கரை முழுவதும் மணல் திட்டுகள் உருவாகி வருகின்றன. இதனைப் பாதுகாக்கவும், அழகுபடுத்தவும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்பதே வடசென்னைவாசிகளின் விருப்பமாக உள்ளது.

25 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் கண்டெய்னர் லாரிகள்: அவதியில் பொதுமக்கள்

முகவை.க.சிவகுமார்
 

-துறைமுக நிர்வாக மெத்தனத்தால் தொடரும் கண்டெய்னர் நெரிசல் 

-மாதவரத்திலிருந்து சென்னைத் துறைமுகம் செல்ல மூன்று நாள்கள் பயணம் 

-இணைப்புச் சாலைகள் வந்தும் நெரிசல் நீடிக்கக் காரணம் என்ன?


திருவொற்றியூர்:சென்னைத் துறைமுகத்திலிருந்து மாதவரம், புழல் மற்றும்  நாப்பாளையம் வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. மாதவரத்திலிருந்து துறைமுகம் செல்ல மூன்று நாள்கள்வரை ஆவதாக கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  
      மேலும் சென்னையிலிருந்து மணலி புதுநகர், நாப்பாளையம்,  மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.  

அமைச்சர் கூறிய உறுதிமொழி என்னாயிற்று?

     பல ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு துறைமுக இணைப்புச் சாலைகள்  அமைக்கப்பட்டவுடன் தீர்வு ஏற்படும் என கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் துறைமுக அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால் தற்போது இத்திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்து,  வரும் டிசம்பர் மாதம் திறப்புவிழா காண உள்ளது. ஆனாலும் தொடரும் கண்டெய்னர் நெரிசல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கண்டெய்னர் லாரிகளை ஓட்டி வந்த 
டிரைவர்கள் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஓடுகின்றனர். படிப்படியாக இத்தொழிலே நலிவடைந்து அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறார் இண்டர் ஸ்டேட் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன். 

துறைமுகம் செல்ல 3 நாள்கள் பயணம்: 

   சென்னையைச் சுற்றியுள்ள 30 சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள்  பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை, எண்ணூர் விரைவு சாலை வழியாக துறைமுகத்தை அடைய வேண்டும். இதுவல்லாது வெளியூர்களில் சரக்கு ஏற்றிய கண்டெய்னர் லாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கிடங்குகளில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சரக்குகள் ஏற்றப்பட்ட கண்டெய்னர் லாரிகள் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்குக்குக்குச் சென்று முத்திரை, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மேலே குறிப்பிட்ட வழியாகவே சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைய வேண்டும். 
        இவ்வாறு தினமும் சுமார் ஆயிரம் முதல் 3 கண்டெய்னர் லாரிகள்வரை இதேபோல் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.  பல்வேறு நிலைகளைக் கடந்து துறைமுகத்திற்குள் செல்ல வேண்டியதுள்ளதால் எங்காவது ஓரிடத்தில் தடங்கல் ஏற்பட்டாலே 20 முதல் 25 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை மாதவரத்தில் வரிசையில் இணைந்த கண்டெய்னர் லாரி திங்கள்கிழமை இரவுதான் துறைமுக நுழைவு வாயிலுக்கே வந்து சேர்ந்தது என்கிறார் சுங்க இல்ல முகவர் சந்திரபோஸ் 

சுங்கத்துறை அதிகாரிகள் மெத்தனம்:

        மாதவரத்தில் சுங்கத்துறை ஆவண சரிபார்க்கும் மையம் தொடங்கப்பட்டபோது இங்கு 24 மணி நேரமும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும்  என சுங்கத்துறை உயர் அதிகாரிகள்  உறுதி அளித்திருந்தனர். ஆனால் நடைமுறையில்
இம்மையம் இவ்வாறு செயல்படவில்லை.  காலை 6 மணிக்கு வரவேண்டிய சோதனை அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்குத் தான் வருகின்றனர். இரவு நேரமாகிவிட்டால் லாரிகள் காத்திருந்தாலும் ஓய்வெடுக்கச் சென்று விடுகின்றனர். இவர்களை சுங்கத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்கிறார்களா? எனத் தெரியவில்லை என்கிறார் கண்டெய்னர் லாரி உரிமையாளர் முருகேசன் தெரிவித்தார். 

வசூல் மழையில் போக்குவரத்துப் போலீஸார்:

     லாரிகள் வரிசையில் சென்றாலும் மாதவரத்திலிருந்து துறைமுகம் வரை சுமார் 11 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதாக போக்குவரத்துப் போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் இச்சோதனைச் சாவடிகளில் லாரிகள் வரிசையிலிருந்து விலகி முந்திச் செல்ல 'வசூல்' செய்யும் பணிதான் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதோடு, விபத்துகளும் அதிகரிக்கின்றன.  இச்சோதனைச் சாவடிகளின் மூலம் சுமார் ரூ.10 லட்சம்வரை சட்டவிரோதமாக போக்குவரத்துப் போலீஸார் 'வசூல்' செய்கின்றனர். பல கண்டெய்னர் லாரி நிறுவனங்கள் மாத வாடிக்கை செலுத்துகின்றனர் என்கிறார் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த கஜேந்திரன்.  

நுழைவு வாயில்களில் தாமதம்:

    வரிசையில் நிற்கும் லாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்களை நியமித்து சோதனை நடத்தினால்தானே வாகனங்கள் விரைவாகச் செல்ல முடியும். வெளியில் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது போல் தான் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளன. வரிசையில் 200 லாரிகள் நின்றாலும்,  2 ஆயிரம் லாரிகள் நின்றாலும் அதற்கேற்ப பணி செய்யும் பாங்கு இங்கு பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் அறவே இல்லை. நுழைவு வாயில்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்கும் துறைமுக நிர்வாகம் தயாராக இல்லை என்கிறார் சுங்க இல்ல முகமை நிறுவன மேலாளர் ஜெகநாதன். 

துறைமுகத்திற்குள் நெரிசல்:

     துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இங்கு வந்து செல்லும் லாரிகளுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. இருக்கின்ற குறைந்த வசதிகளையுடைய சாலைகளையும் துறைமுக நிர்வாகம் முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால் குறுகலான சாலைகளில் ஒரிரு லாரிகள் ஓரங்கட்டி நின்றாலே அதன் பின்னால் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கும். இதனால் சில இடங்களில் அகலமாக இருக்கும் சாலைகளிலும் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பிக்கும். இதற்கு சில லாரி டிரைவர்களின் அவசரமே காரணம் என்றாலும் இவற்றை ஒழுங்குபடுத்த பொறுப்பு யாருக்கு உள்ளது?  முனையங்களின் நிர்வாகிகளைக் கேட்டால் தாங்கள் முனையங்களுக்கு வெளியே  எவ்வித செயல்களையும் செய்ய துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிப்பதில்லை எனக் கூறுகின்றனர். 
    கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை மேலோட்டமாகப் பார்த்தால் இது சென்னைத் துறைமுகத்தின் பிரச்னைகளில் ஒன்று என்பதாகவே கருதப்படுகிறது.  ஆனால் இப்பிரச்னையின் பின் விளைவுகளால், லாரி தொழில், ஏற்றுமதி-இறக்குமதி,  சரக்குப் பெட்டக நிலையங்கள், திருப்பூர் உள்ளிட்ட ஏற்றுமதி நகரங்கள்,  தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஒட்டுமொத்த தொழில்துறையே பாதிக்கப்படும் என்பதால் இப்பிரச்னையைத் தீர்க்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது