முகவை.க.சிவகுமார்.
திருவொற்றியூர்.
-திருவொற்றியூர் கடற்கரையில் மணலை அள்ள உத்தரவிட்டது யார்?
-கடற்கரை மேலாண்மைக் குழுமம் விசாரணை நடத்தக் கோரிக்கை
திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையில் பொக்கலின் இயந்திரத்தைப் பயன்படுத்தி லாரிகளில் மணல் அள்ள உத்தரவிட்டது யார் என்பது குறித்து கடற்கரை மேலாண்மை பாதுகாப்புக் குழுமம் விசாரணை நடத்தை வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் அருகே கடற்கரையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம் காலி நிலம் உள்ளது. இந்நிலத்தை தற்போது சென்னைத் துறைமுகத்திற்கு 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் வாடகைக்கு மாநகராட்சி விட்டுள்ளது. இதற்கு மாதம் ரூ.15 லட்சம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இடத்தில் கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடத்தை அமைக்க துறைமுக நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் ரூ. 6 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
கடல் மணல் கடத்தல்?:
இம்மையத்தை ஒட்டிய பகுதியில் கடற்கரையில் உள்ள மணலை பொக்கலின் இயந்திரம் மூலம் குவித்து லாரிகளில் கடத்தும் முயற்சியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து மணலை அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மணலை அள்ள முயற்சித்தவர்கள் துறைமுக நிர்வாகம்தான் மணலை அள்ள அனுமதி அளித்தது. இங்கு அள்ளும் மணலை வாகன நிறுத்த மையத்தில் நடைபெற்று வரும் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்போவதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த உள்ளூர் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள, போலீஸார் என அனைத்து தரப்பினரும் குவிந்ததையடுத்து மணல் அள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.
இது குறி்த்து திருவொற்றியூர் சமூக நல ஆர்வலர் என்.துரைராஜ் கூறியது,
திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் தொடர்ந்து இருந்து வரும் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுகள், தடுப்புச் சுவர்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் பயனாக கடற்கரையில் கடலரிப்பு தடுக்கப்பட்டு அங்கு மணல்மேடுகள் உருவாகி வருகின்றன. இம்மணலை அவ்வப்போது சிலர் கடத்துவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் தற்போது துறைமுக நிர்வாகமே இயந்திரங்கள் மூலம் மணலைக் குவித்து லாரிகளில் எடுத்துச் செல்ல முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. உண்மையிலேயே துறைமுக நிர்வாகம் உத்தரவிட்டதா? ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக இச்செயலை மேற்கொண்டார்களா என
விசாரணை நடத்த வேண்டும்.
காசிமேடு மீன்பிடித் துறைமுக பகுதியில் துறைமுக இணைப்புச் சாலை பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்குப் பதிலாக ஆழ்படுத்தி, சமன்படுத்தும் பணி தாமதம் ஆவதற்கு கடற்கரை மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுமத்தின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை துறைமுக அதிகாரிகள் காரணமாகக் கூறுகின்றனர். ஆனால் திருவொற்றியூரில் எவ்வித அனுமதியும் இன்றி கடல் மணலை அள்ளும் முயற்சிகள் குறித்து கடற்கரை மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுமம் தன்னிச்சையாக விசாரணை நடத்த வேண்டும்.
துறைமுகத் தலைவர் மறுப்பு:
இது குறித்து சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ராவிடம் இப்பிரச்னை குறித்துக் கேட்டபோது அவர் அளித்த பதில்:
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் திருவொற்றியூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்த மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு கடற்கரை மணலை அள்ள துறைமுக நிர்வாகம் எவ்வித உத்தரவையும் அளிக்கவில்லை. மணலை அள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றார் மிஸ்ரா.
கடலரிப்பைத் தடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதன் பயனாக வடசென்னை கடற்கரை முழுவதும் மணல் திட்டுகள் உருவாகி வருகின்றன. இதனைப் பாதுகாக்கவும், அழகுபடுத்தவும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்பதே வடசென்னைவாசிகளின் விருப்பமாக உள்ளது.
No comments:
Post a Comment