முகவை.க.சிவகுமார்
-துறைமுக நிர்வாக மெத்தனத்தால் தொடரும் கண்டெய்னர் நெரிசல்
-மாதவரத்திலிருந்து சென்னைத் துறைமுகம் செல்ல மூன்று நாள்கள் பயணம்
-இணைப்புச் சாலைகள் வந்தும் நெரிசல் நீடிக்கக் காரணம் என்ன?
திருவொற்றியூர்:சென்னைத் துறைமுகத்திலிருந்து மாதவரம், புழல் மற்றும் நாப்பாளையம் வரை சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. மாதவரத்திலிருந்து துறைமுகம் செல்ல மூன்று நாள்கள்வரை ஆவதாக கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம்பித்து பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் சென்னையிலிருந்து மணலி புதுநகர், நாப்பாளையம், மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
அமைச்சர் கூறிய உறுதிமொழி என்னாயிற்று?
பல ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு துறைமுக இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டவுடன் தீர்வு ஏற்படும் என கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் துறைமுக அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால் தற்போது இத்திட்டத்தின் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்து, வரும் டிசம்பர் மாதம் திறப்புவிழா காண உள்ளது. ஆனாலும் தொடரும் கண்டெய்னர் நெரிசல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கண்டெய்னர் லாரிகளை ஓட்டி வந்த
டிரைவர்கள் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஓடுகின்றனர். படிப்படியாக இத்தொழிலே நலிவடைந்து அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறார் இண்டர் ஸ்டேட் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன்.
துறைமுகம் செல்ல 3 நாள்கள் பயணம்:
சென்னையைச் சுற்றியுள்ள 30 சரக்குப் பெட்டக நிலையங்களிலிருந்து துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை, எண்ணூர் விரைவு சாலை வழியாக துறைமுகத்தை அடைய வேண்டும். இதுவல்லாது வெளியூர்களில் சரக்கு ஏற்றிய கண்டெய்னர் லாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கிடங்குகளில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் சரக்குகள் ஏற்றப்பட்ட கண்டெய்னர் லாரிகள் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்குக்குக்குச் சென்று முத்திரை, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மேலே குறிப்பிட்ட வழியாகவே சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைய வேண்டும்.
இவ்வாறு தினமும் சுமார் ஆயிரம் முதல் 3 கண்டெய்னர் லாரிகள்வரை இதேபோல் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு நிலைகளைக் கடந்து துறைமுகத்திற்குள் செல்ல வேண்டியதுள்ளதால் எங்காவது ஓரிடத்தில் தடங்கல் ஏற்பட்டாலே 20 முதல் 25 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் வரிசை கட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை மாதவரத்தில் வரிசையில் இணைந்த கண்டெய்னர் லாரி திங்கள்கிழமை இரவுதான் துறைமுக நுழைவு வாயிலுக்கே வந்து சேர்ந்தது என்கிறார் சுங்க இல்ல முகவர் சந்திரபோஸ்
சுங்கத்துறை அதிகாரிகள் மெத்தனம்:
மாதவரத்தில் சுங்கத்துறை ஆவண சரிபார்க்கும் மையம் தொடங்கப்பட்டபோது இங்கு 24 மணி நேரமும் ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும் என சுங்கத்துறை உயர் அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் நடைமுறையில்
இம்மையம் இவ்வாறு செயல்படவில்லை. காலை 6 மணிக்கு வரவேண்டிய சோதனை அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்குத் தான் வருகின்றனர். இரவு நேரமாகிவிட்டால் லாரிகள் காத்திருந்தாலும் ஓய்வெடுக்கச் சென்று விடுகின்றனர். இவர்களை சுங்கத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்கிறார்களா? எனத் தெரியவில்லை என்கிறார் கண்டெய்னர் லாரி உரிமையாளர் முருகேசன் தெரிவித்தார்.
வசூல் மழையில் போக்குவரத்துப் போலீஸார்:
லாரிகள் வரிசையில் சென்றாலும் மாதவரத்திலிருந்து துறைமுகம் வரை சுமார் 11 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதாக போக்குவரத்துப் போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் இச்சோதனைச் சாவடிகளில் லாரிகள் வரிசையிலிருந்து விலகி முந்திச் செல்ல 'வசூல்' செய்யும் பணிதான் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதோடு, விபத்துகளும் அதிகரிக்கின்றன. இச்சோதனைச் சாவடிகளின் மூலம் சுமார் ரூ.10 லட்சம்வரை சட்டவிரோதமாக போக்குவரத்துப் போலீஸார் 'வசூல்' செய்கின்றனர். பல கண்டெய்னர் லாரி நிறுவனங்கள் மாத வாடிக்கை செலுத்துகின்றனர் என்கிறார் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த கஜேந்திரன்.
நுழைவு வாயில்களில் தாமதம்:
வரிசையில் நிற்கும் லாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்களை நியமித்து சோதனை நடத்தினால்தானே வாகனங்கள் விரைவாகச் செல்ல முடியும். வெளியில் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்பதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்பது போல் தான் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்படும் பணிகள் உள்ளன. வரிசையில் 200 லாரிகள் நின்றாலும், 2 ஆயிரம் லாரிகள் நின்றாலும் அதற்கேற்ப பணி செய்யும் பாங்கு இங்கு பணியாற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் அறவே இல்லை. நுழைவு வாயில்களில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்கும் துறைமுக நிர்வாகம் தயாராக இல்லை என்கிறார் சுங்க இல்ல முகமை நிறுவன மேலாளர் ஜெகநாதன்.
துறைமுகத்திற்குள் நெரிசல்:
துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இங்கு வந்து செல்லும் லாரிகளுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. இருக்கின்ற குறைந்த வசதிகளையுடைய சாலைகளையும் துறைமுக நிர்வாகம் முறையாகப் பராமரிப்பதில்லை. இதனால் குறுகலான சாலைகளில் ஒரிரு லாரிகள் ஓரங்கட்டி நின்றாலே அதன் பின்னால் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கும். இதனால் சில இடங்களில் அகலமாக இருக்கும் சாலைகளிலும் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பிக்கும். இதற்கு சில லாரி டிரைவர்களின் அவசரமே காரணம் என்றாலும் இவற்றை ஒழுங்குபடுத்த பொறுப்பு யாருக்கு உள்ளது? முனையங்களின் நிர்வாகிகளைக் கேட்டால் தாங்கள் முனையங்களுக்கு வெளியே எவ்வித செயல்களையும் செய்ய துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிப்பதில்லை எனக் கூறுகின்றனர்.
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை மேலோட்டமாகப் பார்த்தால் இது சென்னைத் துறைமுகத்தின் பிரச்னைகளில் ஒன்று என்பதாகவே கருதப்படுகிறது. ஆனால் இப்பிரச்னையின் பின் விளைவுகளால், லாரி தொழில், ஏற்றுமதி-இறக்குமதி, சரக்குப் பெட்டக நிலையங்கள், திருப்பூர் உள்ளிட்ட ஏற்றுமதி நகரங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஒட்டுமொத்த தொழில்துறையே பாதிக்கப்படும் என்பதால் இப்பிரச்னையைத் தீர்க்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment