Thursday, 13 October 2016


தேக்கநிலையில் சிக்கித் தவிக்கும் சென்னைத் துறைமுகம் 

புதிய துறைமுகத் தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள் 

திருவொற்றியூர், அக்.6:பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து சில ஆண்டுகளாக தேக்கநிலையில் இருந்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க புதிய துறைமுகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பி.ரவீந்திரன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
     சென்னைத் துறைமுகத்தலைவராக ஐந்தாண்டுகள் முழுமையாக பணியாற்றிய  அதுல்ய மிஸ்ரா கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக அரசு பணிக்குத் திரும்பினார். சென்னைத் துறைமுகத் தலைவராகத் தேர்வு பெற குடிமைப் பணி அதிகாரிகள்தான் (Civil Sevice cadre) தகுதி படைத்தவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவரின் பணிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இந்நிலையில் கடந்த ஓராண்டாக புதிய துறைமுகத் தலைவரை கப்பல்த் துறை அமைச்சகம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் துறைமுகத் தலைவராக பொறுப்பு அதிகாரிகளே இருந்து வந்தனர். இவர்களும் அடிக்கடி மாறி வந்ததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எவ்வித பிரச்னைகளுக்கும் முழுமையாகத் தீர்வு காணப்படவில்லை. இதனால் துறைமுகத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒருவித நிரந்தர தேக்க நிலையை சென்னைத் துறைமுகம் எட்டியுள்ளது. இந்நிலையில் புதிய தலைவராக காஞ்சிபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ரயில்வே போக்குவரத்து பிரிவு குடிமைப் பணி அதிகாரியான பி.ரவீந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஐந்தாண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார். இந்நிலையில் 
துறைமுகத்தைச் சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறைத் தலைவர் பதவிகள் காலி:
    துறைமுகத் தலைவருக்கு உதவிகரமாகச் செயல்பட வேண்டிய முக்கியத் துறைகளின் தலைவர் பதவிகள் நீண்ட நாள்களாகக் காலியாகவே உள்ளன. நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, 
போக்குவரத்து மேலாளர், கடல்சார் துணை பாதுகாவலர், தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பதவிகளில் தற்போது பொறுப்பு அதிகாரிகளே உள்ளனர். இவர்களால் 
எவ்வித உறுதியான முடிவுகளையும் எடுக்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. 
நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புடைய இந்த அதிகாரிகளை நியமனம் செய்வதில் புதிய தலைவர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். 
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்:  
   துறைமுகத்தின் வளர்ச்சியைப் பெருமளவு பாதிப்பது கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்தான். ஆனால் இப்பிரச்னையின் தீவிரத்தன்மையைக் குறைக்க நீ்ண்ட காலமாகவே எந்த அதிகாரியும் முழுமையாக  ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு 
இருந்து வருகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலியாக இருக்கும் துறைமுகம் அடுத்தடுத்த நாள்களில் நிரம்பிவழிவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்தால் புதிய தலைவருக்கு இதில் தீர்வு கிட்டுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. காலியாக வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதியை ஏற்படுத்தி, உள்ளே, வெளியே செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி,  இங்குள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையங்களின் செயல்பாடுகளை துறைமுகத்தலைவர் கண்காணிக்க வேண்டும். தற்போது எங்கு பார்த்தாலும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்னை ஒன்றுக்கு தீர்வு கண்டாலே துறைமுகத்தின் வளர்ச்சிப் பாதைக்கான கதவு மீண்டும் திறக்கப்படுவதில் சந்தேகம் இல்லை.
தனியார் துறைமுகங்களின் போட்டி:
   சென்னைக்கு அருகே அதானி காட்டுப்பள்ளி, கிருஷ்ணபட்டனம்,  காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட தனியார் துறைமுகங்கள்  சமீபகாலமாக பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் சுமார் ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவைகளின் வளர்ச்சி என்பது சென்னைத் துறைமுகத்தின் வீழ்ச்சியில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துறைமுகங்கள் கவர்ச்சிகரமான கட்டண விகிதங்கள், மிக விரைவான சேவை, எளிமையான நடைமுறைகள் போன்ற வாக்குறுதிகளை அளித்து ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை தன்னகத்தை இழுக்கின்றனர். ஆனால் இதற்கு போட்டியாகச் செயல்பட வேண்டிய துறைமுக சந்தைப் பிரிவு அதிகாரிகள் திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர விடுதிகளில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர உருப்படியான எதையும் செய்துவிடவில்லை என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள்:
  துறைமுகத்தில் நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பு வசதிகளை 
மேம்படுத்த வேண்டும். மூடிக்கிடக்கும் பாதிக்கும் மேற்பட்ட நுழைவு வாயில்களை வாகனப் போக்குவரத்துக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கார் ஏற்றுமதிக்காக வரும் லாரிகள் திரும்பிச் செல்ல இரு நாள்களாகின்றன. இதே நிலைதான் இரும்புத் தகடு, கிராணைட் கற்கள் ஏற்றிவரும் லாரிகளுக்கும் இருந்து வருகிறது. சென்னைக்கு அருகே மணலியில் ஒரு சரக்குப் பெட்டக முனையத்தை ஏற்படுத்தி அதிகமான கண்டெய்னர்களை சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலம் லாரிகள் மூலம் ஏற்படும் நெரிசல் குறையும்.  மேலும் துறைமுகத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று இடங்களில் மேம்பாலம் அமைப்பதால் போக்குவரத்து தடையின்றி நடைபெற ஏதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 
வழக்குகளில் சிக்கித் தவிக்கிறது துறைமுகம்:
   நிலக்கரி கையாள்வதற்கான தடை, மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்டவை குறித்த சில வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், நூற்றுக்கணக்கான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளுக்காக சுமார் 350 வழக்குரைஞர்கள் ஆஜராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கென வழக்குப் செலவுகளுக்காக கணிசமான தொகை துறைமுக நிர்வாகத்தால் தொடர்ந்து செலவிடப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க மாற்றுத் திட்டம் எதனையும் துறைமுக நிர்வாகம் இன்றுவரை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதிய தலைவர் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து  முக்கிய வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் பிரச்னைகள்:
   சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிய சென்னைத் துறைமுகத்தில் தற்போது சுமார 5 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் தனியார் நிறுவனங்கள், நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதில் தடை போன்றவைகளால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித பணிகளும் இல்லை. இவர்களின் வருகையை உறுதி செய்ய சமீபத்தில்தான் டிஜிட்டல் வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமே போதுமானதல்ல. வேலைக்கு வரும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறித்து எவ்வித அளவீடுகளும் இல்லை. மேலும் கூடுதலாக இருக்கும் தொழிலாளர்களை மாற்றுப்பணியில் ஈடுபடுத்துவதில் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு முனைப்பு காட்ட வேண்டும். 
    இது தவிர ஸ்ரீபெரும்புதூர் உலர் துறைமுகத் திட்டம், திருவொற்றியூரில் வாகன நிறுத்த முனையம், காற்றாலை மின் திட்டங்கள், உள்நாட்டு கடலோர சரக்குப் போக்குவரத்து, மின்னொளி கூட்டுதல், பல்லடுக்கு கார் நிறுத்த முனையம், பயணிகள் முனையம் உள்ளிட்டஏராளமான திட்டங்கள் நிலுவையிலும், மந்த கதியிலும் உள்ளன.
இவையெல்லாம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரனுக்கு 
சவாலாக உள்ளன. சென்னைத் துறைமுகத்தின் நிலை அறிந்துதான் கண்டிப்புடனும், துடிப்புடனும் செயல்படக்கூடியவர் என்ற பெயர் பெற்ற பி.ரவீந்திரன் இப்பொறுப்புக்கு கப்பல்த்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது என கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் வீழ்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு
புதிய துறைமுகத் தலைவர் கொண்டு செல்வாரா? என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது. 

கல்வியறிவுக்கான மதிப்பீடு கணிணி அறிவோடு இணைந்ததாகிவிட்டது

அரிமா ஏ.மரியநாதன் 

திருவொற்றியூர், அக்.6:தற்போதைய நிலையில் கல்வியறிவு பெற்றவர்களுக்கான மதிப்பீடு கணிணி அறிவோடு இணைந்ததாகிவிட்டது என அரிமா சங்க நிர்வாகி ஏ.மரியநாதன் திருவொற்றியூரில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
  பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் பெண்களுக்கான கணிணி பயிற்சி மையம் திருவொற்றியூர் ஜோதிநகரில் சமீபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரிமா சங்க (நூற்றாண்டு விழா) மண்டல தலைவர் ஏ.மரியநாதன் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் புதியதாக 
இணையும் பெண்களுக்கான பயிற்சி திட்டத்தை திருவொற்றியூர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மரியநாதன் பேசியது,
    தற்போதைய நிலையில் கல்வியறிவு பெற்றவர்களுக்கான மதிப்பீடுகள் என்பது கணிணி அறிவுடன் இணைந்ததாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்துப் 
பட்டம் பெற்றவர்கள் திருமணத்திற்கு பிறகு குடும்பம், பிள்ளைகளுடன் கூடிய வீட்டை பராமரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். தற்போது வளர்ந்து வரும் கணிணிமயமாக்கத்தால் ஏராாளமான வலைதளங்கள், நவீன செல்போன்கள், உள்ளிட்டவற்றைக் கையாள்வதற்கு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரமமாக உள்ளது.
மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய பெண்களுக்கு 
கணிணி அறிவு அவசியமாகிறது. மேலும் கணிணி பயிற்சி இருந்தால் 
வீட்டிலிருந்தபடியே கூட வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் இப்பகுதியில் நிரந்தர 
பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படையான கணிணி குறித்த பயிற்சிகள், வலைதளங்களைக் கையாள்வது, முகநூல், சுட்டுரை, மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றார் மரியநாதன்.
குழந்தைகளுக்கு உதவ முடியும்:
நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த பெண்கள் கூறியது,
    நாங்கள் ஏற்கனவே ஓரளவு படித்திருப்பதால் இப்பயிற்சி பெரும் உதவியாக இருந்தது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சித் திட்டம் என்ற பெயரில் ஏராளமான பணிகளை பிள்ளைகள் மூலம் செய்துவரச் சொல்கின்றனர். கணிணி அறிவு இல்லாம் இப்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவ முடியாது. இப்பயிற்சியின் மூலம் குழந்தைகளின் பயிற்சித் திட்டங்களுக்கு நாமே நேரடியாக உதவ முடியும். மேலும் வீட்டைப் பார்த்துக் கொண்டே கணிணி மூலம் வேலை செய்து சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனர். 
    இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், சென்னை பசுமை இயக்க நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, செயின்ட் ஆண்டனி பள்ளி முதல்வர் கேப்ரியேல் ரவி, நகைச்சுவை நடிகர் வெங்கையா பாலன் மற்றும் கிராம நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் நவராத்திரி திருவிழா

திருவொற்றியூர், அக்.3:திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
     முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை தபசு அலங்காரம், திங்கள்-பராசக்தி, செவ்வாய்-நந்தினி, புதன்-கௌரி, வியாழன்-பத்மாவதி, வெள்ளி-உமாமகேஸ்வரி, சனி-ராஜராஜேஸ்வரி, ஞாயிற்றுகிழமை-மகிஷாசுரமர்த்தினி, திங்கள்-சரஸ்வதி, இறுதி நாளான அக்.11 செவ்வாய்க்கிழமை மீனாட்சி அலங்காரம் நடைபெற உள்ளது. இவ்விழாவினையோட்டி பல்வேறு நடனம், நாட்டியம், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் தினமும் தொடர்ந்து நடைபெற உள்ளது. விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ்.சிவகுமார், செயல் அலுவலர் (பொறுப்பு) ஆர்.வான்மதி மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல் 

திருவொற்றியூர், அக்.3:மணலியில் பத்திரிகை போட்டோகிராபரைத் தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தீக்கதிர் பத்திரிகையின் வடசென்னை பகுதி போட்டோகிராபராக இருப்பவர் ஜாபர் (40).
திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் மக்கள் நல கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திரளாக மனுத்தாக்கல் செய்தனர். இதனை படம் பிடிப்பதற்காக ஜாபர் மணலி மண்டல அலுவலம் உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பத்திரிகை அடையாள அட்டையை எடுத்து ஜாபர் காட்டியுள்ளார். இருப்பினும் ஜாபரை போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது 
அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்பெக்டர்கள்  சரவணன், ஜீவக்குமார், காவலர் சசிக்குமார் ஆகியோர் ஜாபரை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்த்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் 
அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். மேலும் ஜாபர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் 
என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்


திருவொற்றியூர், செப்.28:ஆன்லைன் வர்த்தகத்தால் சிறுவணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார். 
    திருவொற்றியூர் பொதுவர்த்தகர் சங்க 43-வது பொதுக்குழு மற்றும் ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சி்க்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். இதில் வியாபாரம் செய்வதில் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்த இருபதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாராட்டப்பட்டனர். மேலும் இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் மூன்று இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பூடான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற, திருவொற்றியூரைச் சேர்ந்த என்.ஷெசன் ராமசாமியைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
அப்போது த.வெள்ளையன் பேசியது,
    43 ஆண்டுகள் சங்கத்தை ஒற்றுமையாக நடத்திய அனைத்து நிர்வாகிகளும் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போது சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் வர்த்தகத்தால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் தற்போதைக்கு தங்களை ஒன்று அவ்வளவாகப் பாதிக்காது என நாம் இருக்கக் கூடாது. வெளிநாட்டுப் பொருள்களை இந்தியாவில் விற்பதை எதிர்த்து அமைதி வழியில் போராடிய காந்தியடிகள் பின்னர் அவற்றை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தினார். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பொருள்களை மொத்தமாக வழங்கும் உற்பத்தியாளர்களின் பொருள்களை சில்லரை வியாபாரிகள் புறக்கணிக்க வேண்டும். சுதந்திர நாட்டில் வணிகர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வாதரத்துடன் வாழ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் வெள்ளையன்.
   இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் வி.ராமசாமி, பொதுச் செயலாளர் ஏ.முருகேசன், சங்க நிர்வாகிகள் கனி, நளராஜன், எம்.காமாட்சி, எ்ஸ்.ராமசாமி, மணலி வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மணலியில் கறிக்கடை ஊழியர் கொலை

பால் வியாபாரி கைது

திருவொற்றியூர், செப்.26:மணலியில் கறிக்கடை ஊழியர் சேகர் (27) கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பால் வியாபாரி அருண் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
   சென்னை மணலி லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் நாகூர்மீரான். இவர் காமராஜர் சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். இங்கு அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த சேகர் என்பவர் வேலை செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடைக்கு வந்த அருண், சேகரிடன் கறி வாங்கிக் கொண்டு பணம் தரவில்லையாம். மேலும் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென உருட்டுக் கட்டையால் சேகரைத் தாக்கியுள்ளார் அருண். இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சேகர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
   இது குறித்து வழக்குப் பதிவு செய்த மணலி காவல் நிலைய போலீஸார் சேகரைத் தாக்கிய அருணை திங்கள்கிழமை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி வசந்தக்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து அருண் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை 

தமிழகம்,புதுவையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

திருவொற்றியூர், செப்.26:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.  
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
   இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் சார்பில் 'சாகர் கவச் (Sagar Kavach)' எனப் பெயரிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 
இதில் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, ஊடுருவும் குழுவாகவும், மற்றொரு குழு இதனைத் தடுக்கும் பணியில் ஈடுபடவும் செய்வார்கள். இதில் ரோந்துக் கப்பல்கள், விமானங்கள், அதிவேகப் படகுகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்த்துறை, கடலோரக் காவல்படை, கடற்படை, மீன்வளத்துறை, கடல்சார் அமலாக்கத்துறை, சுங்கத்துறை, சென்னைத் துறைமுகம், கலங்கரை விளக்கங்கள், கப்பல்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். 
   இந்த ஒத்திகை சென்னை மற்றும் விசாகபட்டனத்தில் உள்ள கடலோரக் காவல்படை 
அலுவலகங்களிலிருந்து கண்காணிக்கப்படும். ஒத்திகையின் முடிவில் கடலோரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், பாதுகாப்பினைப் பலப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்  உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து 
முதன்மை உள்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
சாலைத் தடுப்புச் சுவரில் மோதி வியாபாரி சாவு

திருவொற்றியூர், செப்.25:எண்ணூர் விரைவு சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கோழி வியாபாரி நந்தகோபால் (23) ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
   சென்னை வண்ணாரப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் நந்தகோபால். திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கோழிக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு கோழிக்கடை வியாபாரத்தை முடித்த நந்தகோபால் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எண்ணூர் விரைவு சாலையில் ஒண்டிக்குப்பம் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலைத் தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். இதில் தலையில்  பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
   இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து 
திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படுமா?

பொதுமக்கள், வழக்குரைஞர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறுமா?

திருவொற்றியூர், செப்.25:திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் (Sub Court) அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். 
     திருவள்ளூர் மாவட்டத்தில் 37 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில்  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இயங்கி வருகிறது. கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர், குடும்ப நல நீதிமன்றம், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றம், வாகன விபத்து தீர்ப்பாயம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 
        பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சார்பு நீதிமன்றங்களுடன் கூடிய உரிமையியல், குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் அதிக மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களிடையே நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. 
சார்பு நீதிமன்றம் அமைவதன் பயன் என்ன?
    தற்போது திருவொற்றியூரில் அமைந்துள்ள உரிமையியல் நீதிமன்றத்தில்  ரூ.1 லட்சம் மதிப்புள்ள தாவாக்களுக்கு மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் ரூ.20 லட்சம் வரையிலான தாவாக்களுக்கு சார்பு நீதிமன்றத்தில்தான் வழக்காட முடியும். இதேபோல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகள்வரை தண்டனை வழங்கக் கூடிய வழக்குகள் மட்டுமே விசாரணை நடத்த முடியும். சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய கொலை முயற்சி (இந்தியச் தண்டனைச் சட்டம் பிரிவு 307) உள்ளிட்ட வழக்குகளைக்கூட  விசாரிக்க முடியும்.
      மேலும் வாகன விபத்து, மணமுறிவு, நில மோசடி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை தற்போது திருவொற்றியூர் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. மேலும் தற்போதுள்ள பொருளாதார  சூழ்நிலையில் ரூ. ஒரு லட்சம் என்பது அதிகமான தொகை அல்ல. வாகன விபத்துக்களும், மணமுறிவு வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. எனவே திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 
10 லட்சம் மக்கள் தொகை:
இது குறித்து திருவொற்றியூர் பொதுவர்த்தக சங்க கௌரவத் தலைவர் ஜி.வரதராஜன் கூறியது,
   சென்னையை ஒட்டிய முக்கிய பகுதிகளில் திருவொற்றியூர் முக்கியமானதாகும்.  திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம், புழல், செங்குன்றத்தின் ஒரு பகுதி திருவொற்றியூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களின் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன.  இதில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே திருவொற்றியூரில் உள்ள நீதிமன்றங்களால் விசாரிக்க முடிகிறது. பொன்னேரியில் ஏற்கனவே கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட ஐந்து நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருவொற்றியூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பொன்னேரி நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைத்து இவ்வழக்குகளை இங்கு மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வரதராஜன். 
ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேவை:
   இது குறித்து திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் என்.நாகசுந்தரம் கூறியது,
   திருவொற்றியூரில் 1969-ம் ஆண்டு திருவொற்றியூரில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றமும் (J.M. Court), 1996-ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் (Munsif Court) அமைக்கப்பட்டன. திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான 
அனைத்து தகுதிகளும் உள்ளன. மேலும் மாநகர எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் பகுதிக்கென ஒருங்கிணைந்த நீதிமன்றம் அவசியமானது. இதற்கென கட்டடங்களை அணைக்க எர்ணாவூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கனிம வளத்துறையின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றம் அமைக்கவும், எர்ணாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களை அமைக்கவும்  திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளோம். வரும் செப்.29-ம் தேதி இம்மனு விசாரணைக்கு வருகிறது.
      மேலும் திருவொற்றியூர் முன்சீப் நீதிமன்றத்துக்கென இதுவரை அரசு 
வழக்குரைஞர் (Govt Pleader) இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திலேயே அரசு வழக்குரைஞர் இல்லாத நீதிமன்றம் திருவொற்றியூர்தான். 
திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தில் மட்டும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். எனவே சார்பு நீதிமன்றத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் இங்கு அமைக்கப்பட்டால் வழக்குரைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் பயன் பெறுவார்கள். எனவே இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாகசுந்தரம். -
திருவொற்றியூர், செப்.24:சென்னைத் துறைமுகம் சமையல் எண்ணெயைக் கையாள்வதில் புதிய சாதனையைப் புரிந்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 
   கடந்த செப்.19-ம் தேதி சென்னைத் துறைமுகம் வந்த எம்.டி.அஜவ் சீ என்ற கப்பலில் இருந்த 10,780 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய் (சமையல் எண்ணெய்) இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2014-ல் 8,700 மெட்ரிக் டன் கையாளப்பட்டதை அதிகபட்சமாக இருந்து வந்தது. மேலும் இக்கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் ஏற்றிய எடையுடன் துறைமுகத்திற்கு வந்தது. இதற்கு முன்பு 32 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெயை ஏற்றிய கப்பலைக் கையாண்டதே சாதனை அளவாக இருந்தது. இச்சாதனை அளவினை எட்டியதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், இறக்குமதியாளர், கப்பலின் முகவர் உள்ளிட்டவர்களை துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ் நேரில் அழைத்துப் பாராட்டினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணூரிலிருந்து கொச்சி, கண்டலாவிற்கு கப்பலில் சென்ற 2 ஆயிரம் கார்கள் 

உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து அறிமுகம் 

திருவொற்றியூர், செப்.24: எண்ணூர் காமராாஜர் துறைமுகத்தில் உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் கப்பலான எம்.வி. டிரெஸ்டனில் சுமார் 2 ஆயிரம் கார்கள் ஏற்றும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இக்கப்பல் கொச்சி வழியாக ஒரு வாரத்தில் குஜராத் மாநிலத்தின் காண்டலா துறைமுகம் சென்றடைகிறது. 
    உள்நாட்டு நீர்வழி, கடலோரப் போக்குவரத்து மூலம் உள்நாட்டுச் சரக்குகளை கப்பல்கள் மூலம் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் 
'சாகர்மாலா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கப்பல் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதில் நாட்டின் பெரிய துறைமுகங்கள் மூலம்  இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக துறைமுகத்திற்கு உள்ளே, வெளியே உள்நாட்டுச் சரக்குகளைக் கொண்டு செல்ல சிறப்புப் பாதைகள், கட்டமைப்பு வசதிகள், சுங்கத்துறை சிறப்பு அனுமதி உள்ளிட்டவைகள் அனைத்து துறைமுகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும், இதன்மூலம் விபத்துகள் குறையும் மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதே   இத்திட்டத்தின் சிறப்பு நோக்கமாகும். இத்திட்டம் பல்வேறு துறைமுகங்களில் ஏற்கனவே தொடங்கிவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
   இந்நிலையில் உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த  சிகால் லாஜிஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எவி. டிரெஸ்டன் (M.V.Dresden) என்ற கப்பல் காமராஜர் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது.  இக்கப்பலின் முதல் பயணத்தில் (First Voyage) ஹூண்டாய், ரினால்ட், ஃபோர்டு உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் சுமார் 2 ஆயிரம் கார்கள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன. 
கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை:
    கப்பலில் கார்கள் ஏற்றும் பணியை துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் 
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தார். ஆனால் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சனிக்கிழமை கார்களை ஏற்றும் பணி நிறைவடைந்து கப்பல் புறப்பட்டுச் சென்றது. 
இப்புதிய திட்டம் குறித்து  பாஸ்கராச்சார் கூறியது,
   இக்கப்பல் இரண்டரை நாளில் கொச்சித் துறைமுகம் செல்லும். அங்கு 500 கார்களை இறக்கிவிட்டு அங்கிருந்து 1500 கார்களுடன் குஜராத்தின் காண்டலா துறைமுகத்திற்கு 4 நாள்களில் சென்றடையும். பின்னர் அங்கிருந்து ஹோண்டா, ஃபோர்டு நிறுவன வாகனங்கள் இதே கப்பலில் ஏற்றி எண்ணூர் காமராஜர் துறைமுகம் கொண்டு வரப்படும்.  முதல் கட்டமாக மாதம் இருமுறை இக்கப்பல் இதே வழித்தடங்களில் இயக்குவதற்கு சிகால் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உள்நாட்டுச் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக கப்பல்த்துறை அமைச்சகம் பல்வேறு சலுகைகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கையாளப்படும் கார் ஒன்றுக்கு ரூ.2,500 கட்டணம் எனில் உள்நாட்டிற்குள்ளே செல்லும் காருக்கு ரூ.500 மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகிறது. இதேபோல் கப்பல்கள் நிறுத்துவதற்கான கட்டணம் (Warfage Charges), கப்பல் சார்ந்த கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களில் சுமார் 80 சதவீதம்வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்வதை விட கப்பல்களில் எடுத்துச் செல்வது செலவு குறைவாக இருக்கும்.
இதேபோல் படிப்படியாக மற்ற சரக்குகளையும் கடல்வழி மார்க்கமாக எடுத்துச் செல்ல 
திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாஸ்கராச்சார்.
    இந்நிகழ்ச்சியில் துறைமுக பொதுமேலாளர்கள் வி.கிருஷ்ணசாமி, ஏ.கே.குப்தா, உயர் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், கருப்பையா, சிகால் லாஜிஸ்டிக் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரமேஷ், முதுநிலை மேலாளர் (மக்கள் தொடர்பு) அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கதவடைப்புகளும், கலவரங்களும்... 

     காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தவிட்டதை எதிர்த்து நடைபெற்ற கர்நாடக மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தின்போது மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனைக் கண்டித்து கடந்த செப்.16-ல் தமிழகத்திலும் முழுகதவடைப்புகள் நடைபெற்றன. இப்பிரச்னையின்போது நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் வீடியோ பதிவுகளாக சமூக ஊடகங்களில் பரவின. பெங்களூருவில் ஒரு தமிழக லாரியை அடித்து நொறுக்கிய கலவரக்காரர்கள் லாரியின் ஓட்டுனரைக் கீழே இறக்கி காவிரி கர்நாடகத்துக்கே சொந்தமானது எனக் கூறும்படி கன்னடத்தில் கூச்சலிட்டு சரமாரியாகத் தாக்குகின்றனர். அவருக்கு கன்னடம் தெரியவில்லை. மரண பயத்தில் இருந்த அந்த டிரைவரைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. மற்றொரு சம்பவம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது.  இதில் 
சுற்றுலா வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி இதில் இருந்த சிலரை நடைபாதையில் குத்துக்காலிட்டு உட்கார வைத்து காவிரி தமிழகத்திற்குச் சொந்தம் எனக் கூறும்படி 
மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தாக்குகின்றனர். தமிழ் தெரியாத அவர்கள் அழுது புலம்புகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களையும் கூர்ந்து கவனித்தால் காவிரி நீர் திறந்து விடப்படுவதாலோ அல்லது விடப்படாததாலோ பாதிக்கப்பட்டவர்கள் கோபமடைந்து நடத்திய போராட்டங்களாகத் தெரியவில்லை. மாறாக இனம், மொழிசார்ந்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிறு கூட்டத்தினர்தான் இதில் ஈடுபட்டனர்.  இரண்டு செயல்களையும்  இரு மாநில மக்களில் பெரும்பான்மையோர் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார்கள்.
           உலகளாவிய வணிகத்தால் உலகமே ஒரே குடையாக மாறி வரும் நிலையில் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தொழில், பணி நிமித்தமாக இடம் பெயர்வது என்பது தவிர்க்க இயலாதது. மேலும் வளர்ச்சிடைந்து வரும் பகுதிகளை நோக்கி  மாவட்டம் விட்டு, மாநிலம் விட்டு, நாடு விட்டு நாடு என பயணப்படுவர்களின் எண்ணிக்கை படித்தவர்கள் முதல் தினக்கூலி தொழிலாளிகள் வரை அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன.  நாடு முழுவதும் ஒரே சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாதபோது இது போன்ற இடம் பெயர்வுகளும் தவிர்க்க இயலாது. 
போட்டிக்குப் போட்டி என போராட ஆரம்பித்தால் இனி ஒரு மாநிலத்திலும் மொழிச் சிறுபான்மை மக்கள் நிம்மதியோடு இருக்க முடியாது. மேலும் பிரச்னைகளில் நியாயமாகப் படும் ஒரு கருத்தைக் கூட அந்த மாநிலங்களுக்கு எதிராக யாரும் கூறிவிடக் கூடாது என்பதால்தான் நடிகர்கள் முதல் அரசியல்வாதிகள், ஊடகவியலார் வரை ஓர் குரலில் எதிரொலிக்கின்றனர்.  ஆனால் அறிவு சார்ந்து சிந்தித்தால் இது போன்ற கூச்சல்கள், கதவடைப்புகளால் ஒரு பயனும் கிடைக்கப் போவது இல்லை. விவசாயிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின்  உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது வேறு. இன,மொழி வெறி அடிப்படையில் போராட்டங்களை நடத்துவது வேறு.
         பெங்களூரு கன்னடர்களுக்கு மட்டுமேயும், சென்னை தமிழர்களுக்கு மட்டுமேயும்,  மும்பை மராட்டியர்களுக்கு மட்டுமேயும் சொந்தமானது அல்ல. அனைத்து இடங்களிலும் அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலத்தவர்களாலும் பெருமளவில் நடத்தப்படுகின்றன. இவற்றின் முதலாளிகள் யார்? தொழிலாளிகள் யார்? எந்த மாநிலத்தவர் என இனம் பிரிக்க முடியுமா?. இந்திய குடிமைப் பணி, மத்திய அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருமே அந்தந்த மாநிலத்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்பதையெல்லாம் போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் 
நினைத்துப் பார்ப்பதில்லை. தமிழகத்தில்கூட  நிர்வாகத் தலைமையில் இருப்பவர்கள் வேறு மொழியைக் தாய்மொழியாகக் கொண்டவர்களாக உள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையர்-மலையாளி, தலைமைச் செயலாளர்- தெலுங்கர், உயர்நீதிமன்ற நீதிபதி-இந்தி, இது தவிர என்னற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இவர்களெல்லாம் தமிழகத்தின் மீது அக்கரையற்றவர்கள் எனக் கூறிவிட முடியுமா?
ஒரு ஸ்வரன் சிங் ஐ.ஏ.எஸ். ஆணையராக இருந்தபோது திருச்சி மாநகரமே ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது என்பதை அப்பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லையே. இதுபோன்ற எண்ணற்ற அதிகாரிகள் நாடு முழுவதும் பணியில் உள்ளனர்.  
           தமிழகத்தில் கதவடைப்பினை முதலில் அறிவித்த வியாபாரி சங்கங்கள் என்றைக்காவது ஒரு கிலோ தக்காளி ரூ 2, கத்தரிக்காய் ரூ. 5-க்கும் விற்றபோது இவற்றை விளைவித்த விவசாயிகள் என்னாவாகியிருப்பார்கள் என ஒரு முறையாவது கவலைப்பட்டிருப்பார்களா? அல்லது விவசாய விளை பொருள்களுக்கு நியாயவிலை கிடைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டாம், ஒரு அறிக்கையாவது  வெளியிட்டதுண்டா?. அதேபோல் உள்ளூர் மாநில விவசாயிகளின் பொருள்களை மட்டுமே விற்போம். காவிரித் தண்ணீரில் கர்நாடகாவில் விளைவித்த பொருள்களை விற்க மாட்டோம் என உறுதி எடுக்க முடியுமா? இதேபோல் கதவடைப்பின்போது விடுமுறையை உண்டு களித்த நகரவாசிகள், படித்த இளைஞர்கள் எல்லாம் நமது விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என அக்கரை கொண்டு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பழங்கள் உள்ளிட்ட வேளான்விளைபொருள்களையெல்லாம்  புறந்தள்ளிவிடுவார்களா?. குறைந்தபட்சம் விவசாயிகளின் நலன் கருதி செயற்கை பானங்களைத் தவிர்த்து இயற்கை பழச்சாறுகளை மட்டுமே என பருகுவோம் என உறுதி எடுக்க முடியுமா?  இதே கருத்து அனைத்து மாநிலத்தவர்களுக்கும் பொருந்தும். இதனை குறையாகக் கூறவில்லை மாறாக  இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஒவ்வொரு சமுதாயமும் மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும்,  இதில் இனம்,மதம்,சாதி,மொழி பேதங்கள் பார்த்தாலும் இங்கு ஒருவரும் வாழ முடியாது என்பது வாழ்வியல் நடைமுறை. 
       ஒரு போக விவசாயம் பொய்த்துவிட்டால் அடுத்த போகம் விளையும் வரை ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் எதிர் நோக்கும் பிரச்னைகள் கணக்கிலடங்காது.  தற்போதைய நிலையில் விவசாயம் செய்யாத விவசாயி பணக்காரனாக இல்லாவிட்டாலும் கடன்காரனாக இல்லாமலிருப்பான். தமிழக விவசாயிகளின் உழைப்பால் விளையும் காய்கறிகள் கேரளா செல்கிறது,  கர்நாடக வெங்காயம், தக்காளி சென்னையில் குவிகிறது, ஆந்திர பருப்பு, மிளகாய் தமிழகம் வருகிறது. எனவே சோறு போடும் விவசாயிகள் எங்கிருந்தாலும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. இதில் இன, மொழி பிரிவினை கூடாது. இதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும். சரி போராட்டங்களைத் தவிர்க்க என்னதான் செய்ய வேண்டும்?.  தீர்வு மக்களிடம் கிடையாது, ஆட்சியாளர்களிடம்தான் உள்ளது. . 
       நான்கு மாநிலங்களுக்கிடையே 75 ஆண்டு காலமாக இருந்து வரும் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு. இதில் காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி என்பதெல்லாம் வேறுபாடு கிடையாது. வெறும் 146 இடங்களை வைத்து அன்றைக்கு ஆட்சி செய்த பிரதமர் வி.பி.சிங்கால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க முடிந்தது எனில்  16 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்ட
காவிரி ஒழுங்குமறை ஆணையத்தை அமைக்க பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த, தற்போது இருக்கிற மத்திய அரசால் ஏன் முடியவில்லை?. முடியும்தான், ஆனால் பாழாய்ப் போன வாக்கு வங்கி அரசியல்தான் குறுக்கே நிற்கிறதே? 
     நாட்டில் நடைபெற்று வரும் அண்மைச் சம்பவங்களைப் பார்க்கும்போது தேச நலன் குறித்து யாருக்கும் அக்கரையிருப்பதாகத் தெரியவில்லை. காவிரி பிரச்னை மட்டுமல்ல, தெலங்கானா-ஆந்திரம் இடையேயான பிரச்னைகள், பாலாறு பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என இருமாநிலங்கள் சம்மந்தப்பட்ட எந்த பிரச்னையிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் சமீப காலமாக திருப்திகரமாக இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கவலையாக உள்ளது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றம் சென்றுதான் போராட வேண்டும் எனில் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவக் கொள்கைகள் எல்லாம் எதற்கு? 
      காவிரி கலவரத்தில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டது.  அடுத்து என்னாகுமோ என மக்கள் பீதியில் உறைகின்றனர். காட்சி ஊடகங்கள் தங்களின் ரேட்டிங்கை உயர்த்துவதற்காக கலவரச் செய்திகளை பாரபட்சமின்றி(?) நேரலையாகவே ஒளிபரப்பின. ஆனாலும் நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் மவுனம் கலைகின்றனர். பிறகு இருமாநில மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக ஒரு வேண்டுகோள் விடுத்து தங்கள் கடமையை நிறைவு செய்தனர். தேசத்தை தனது அறிவுக் கூர்மையால் ஒருங்கிணைத்த இரும்பு மனிதர்  சர்தார் பட்டேல் இங்கே? தேச ஒற்றுமையைக் கூறுபோடும் தற்போதைய தலைவர்கள் எங்கே?
        இரு மாநிலங்கள் வழியே ஓடும் நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கி தன்னாட்சி அதிகாரம் நிறைந்த ஆணையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்களுக்கு  நீர் மேலாண்மை குறித்து போதிய பயிற்சி, விழிப்புணர்வு அளிக்க வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பே கால்வாய்கள், கண்மாய்களைச் சீரமைத்து மழைநீரைச் சேமிக்க வேண்டும். நதிகளை இணைப்பது என்பது பெருங்கனவே, இருப்பினும் அதற்கான செயல்திட்டங்களை வகுத்து காலவரையறை செய்திட வேண்டும்.  விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையில் விளைபொருள்களுக்கு சந்தையில் நியாயமான விலை கிடைக்காதபோது அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நடைமுறையில் உள்ள சட்டங்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை யார் மீறினாலும், அது மாநில அரசாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கு வேண்டும். பலமானவன் சட்டத்தைக் கையெலெடுக்க ஆரம்பித்தால், ஏளியவனை அரசனே காப்பாற்ற வேண்டும்.
        இது போன்ற கருத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விட்டுவிட்டு ஒற்றுமை, இன உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்ற போர்வையில் கதவடைப்பு செய்து கலவரத்தில் ஈடுபடுவதால் எவ்வித பயனும் விழையப்போவது இல்லை. மாறாக ஒரு நாள் கூத்துப்பட்டறையாகவே முடியும். மனித நேயம் மட்டுமே மக்களை வாழ வைக்கும். இதற்கு எந்த இனமும் விதிவிலக்கல்ல. இது உலகளாவிய பொதுமறை...
சுங்கத்துறை சோதனையை விரைவுபடுத்த ரூ.35 கோடியில் புதிய ஸ்கேனர் வசதி

சென்னைத் துறைமுகத்தில் அறிமுகம் 

திருவொற்றியூர், செப்.16:சுங்கத்துறை சோதனையை விரைவுபடுத்தும் வகையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டிலான புதிய அதிநவீன ஸ்கேனர் வசதியை சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
    சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டு சர்வதேச சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. முனையங்களில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் கண்டெய்னர்களில் உள்ள சரக்குகளை சோதனயிட்டு அனுமதி வழங்குது சுங்கத்துறையின் பணியாகும். ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் சுங்கத்துறை சோதனையை எளிமைப்படுத்தவும், விரைவு படுத்தவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 
ரூ.30 கோடியில் புதிய ஸ்கேனர் வசதி மற்றும் ரூ.5 கோடியில் ரேடியோ அதிர்வெண் அடையாளச் சாதன கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.  இப்புதிய வசதிகளை மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் (நிர்வாகம்) வனஜா என். சர்னா திறந்து வைத்தார். 
இப்புதிய வசதிகள் குறித்து சென்னை சுங்க இல்ல துணை ஆணையர் ரமேஷ் மூர்த்தி 
கூறியது,
    இப்புதிய வசதிகளை ஏற்படுத்தியன் மூலம் சுங்கத்துறை சோதனை மற்றும் ஆய்வுப் பணிகள் விரைவுபடுத்தப்படும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதிக்கான நேர அளவு குறையும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு செலவினமும் குறையும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி எக்ஸ் ரே தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் கண்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் 400 மி.மி. அளவுள்ள சரக்குக்களைக் கூட அடையாளம் காண முடியும். மணிக்கு 12 கண்டெய்னர்களை ஆய்வு செய்து சோதனையிட முடியும். தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இக்கருவி இன்னும் ஒரு மாதத்திற்குள் முழு வீச்சில் செயல்படும். 
   தேசிய சரக்குப் பெட்டக நிலையங்களின் கூட்டமைப்பு உதவியுடன் செயல்படுத்தப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாளச் சாதனக் கட்டமைப்பு வசதிகள்  சென்னைத் துறைமுகத்தையும், இதன் அருகாமையில் அமைந்துள்ள முப்பதுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்களையும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். இதனால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சோதனையிடும் பணிகள் இனி ஒரு சில நிமிடங்களில் நிறைவு பெறும். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் விரைவாக நடைபெறும் என்றார் ரமேஷ்.
   இந்நிகழ்ச்சியில் சென்னைத் சுங்கத்துறை தலைமை ஆணையர் பி.கே.தாஸ், ஆணையர் பி.கே.பெஹ்ரா, இணை ஆணையர் கே.கே.சுஜா, சரக்குப் பெட்டக நிலையங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அருண், பத்மநாபன், ரகுசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூரில் முறையாக அமைக்கப்படாத மழைநீர் கால்வாய்கள்

தடுப்பணைகளாக மாறிய அவலம் 

திருவொற்றியூர், செப்.16: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களால் வியாழக்கிழமை பெய்த மழையில் எவ்வித பயனும் இல்லாமல் போயின. இதனால் மழைநீர் சாலைகளில் தேங்கி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
      சுங்கச் சாவடி முதல் எர்ணாவூர் மேம்பாலம்வரை சுமார் 6 கி.மீ தூரத்திற்கு  திருவொற்றியூர் நெடுஞ்சாலை 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் விம்கோ நகர் முதல் எர்ணாவூர் மேம்பாலம்வரை சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கப்பணிகள் செய்து முடிக்கப்படவில்லை. இந்நிலையில் சாலையின் இரு புறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. ஆனால் இக்கால்வாய்கள் அனைத்தும் பெரும்பாலான இடங்களில் ஏற்ற இறக்கங்கள் பொருத்தமாக இல்லை. இது அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் போது நிரூபணமாகி வருகிறது. 
தடுப்பணைகளாக மாறிய கால்வாய்கள்:
   திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலடிப்பேட்டை ராஜா கடை, தாங்கல், விம்கோநகர், அஜாக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் 
சீராக அமைக்கப்படவில்லை. சாலையை விட கால்வாய்க்குள் மழை நீர் செல்லும் 
துளைகள் உயரத்தில் உள்ளன. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கனமழை பெய்யும்போதெல்லாம் இப்பகுதிகளில் வெள்ளம்போல் தேங்குவதால் இக்கால்வாய்கள் தடுப்பணைகள் போல காட்சியளிக்கின்றன.  மேலும் சாலையின் நடுவே கழிவு நீர் குழாய்கள் செல்கின்றன. எனவே வெள்ளம்போல் தேங்கியுள்ள மழை நீரை கழிவு நீர் குழாய்கள் வழியே திறந்துவிடும் பணியில் பகுதிவாசிகள் ஈடுபடுகின்றனர். இதனால் கழிவு நீர் குழாயிலும் அடைப்பு ஏற்படுகிறது. இதில் கழிவு நீர் குழாயை மெட்ரோ வாட்டர் நிறுவனமும்,  மழைநீர் கால்வாயை மாநில நெடுஞ்சாலைத் துறையும் பராமரித்து வருகின்றன. இதனால் இரு துறை அதிகாரிகளும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
மழைநீரால் பயன்பெறாத திருக்குளம்:
    இது குறித்து சென்னை பசுமை இயக்க அமைப்பாளர் என்.துரைராஜ் கூறுகையில்,  திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்கள் முறையாக இல்லை. திட்டம் அறிவிக்கப்பட்டபோது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சேகரிக்கப்படும் மழைநீரில் சுமார் 50 சதவீதம் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளத்தில் விடப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கூட இக்குளம் முழுவதுமாக நிரம்பவில்லை. தற்போதும் இக்குளம் வரண்டு கிடக்கிறது. மாநகராட்சி, அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்தவண்ணமே உள்ளனர். ஆனாலும் பிரச்னை முடிந்தபாடில்லை. வெள்ளம்போல் தேங்கும் மழைநீரைக் கூட சில மீட்டர் தூரம் உள்ள குளத்திற்கு கொண்டுவர தொழில்நுட்பங்கள் இல்லையா என்பதே இப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. இதேபோல் காலடிப்பேட்டை வரதராஜபெருமாள் கோயிலும் இதே நிலைதான்.
கொசுக்களை உற்பத்தி செய்யும் கால்வாய்கள்:
    கனமழையின் போது சேகரிக்கப்படும் மழைநீர் முழுவதுமாக வெளியேறுவதில்லை. காரணம் ஏற்ற இறக்கம்தான். இதனால் மழை நின்றுவிட்டாலும் கால்வாயின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனுடன் அடித்து வரப்பட்ட குப்பைகூழங்களால் மழை நின்றவிட்ட ஒரிரு நாள்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. முன்பெல்லாம் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் மட்டுமே கொசுக்கள் அதிக அளவில் இருக்கும். இக்கால்வாய்கள் அமைக்கப்பட்ட பிறகு
திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் கொசுக்கள் பல மடங்கு பெருகிவிட்டன. மாலை நேரங்களில் வெளியே வரமுடியாத அளவிற்கு கொசுக்கள் அதிகரித்துள்ளன என்கிறார் கைலாஷ் செக்டரைச் சேர்ந்த தொண்டு 
நிறுவன அமைப்பாளர் பாலம் இருளப்பன். 
போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்:
   இது குறித்து சாத்தாங்காடு ஐய்யப்பா சேவா சங்கத்தைச் சேர்ந்த கி.மணிவாசகம் கூறியது,
    இச்சாலை விரிவாக்கமே முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பணி ஒப்பந்தங்களும் ஒரே நேரத்தில் ஒரே நபருக்கு வழங்கப்படவில்லை. இதனால் மழைநீர் கால்வாய்போல் ஒரே சீராக இல்லாமல், பழங்கால ஆறு போல கண்ட இடங்களிலும் வளைந்து வளைந்து செல்கின்றனர். இக்கால்வாயால் ஒப்பந்ததாரர்கள் பயன்பெற்றதுதான் மிச்சம். இப்பிரச்னையில் அரசுத் துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இக்கால்வாயை உடனடியாக ஆய்வு செய்து முறையாகச் சீர் செய்தால் மட்டுமே இனி வரும் மழைக்காலங்களில் இப்பகுதி பாதிக்கப்படாமல் இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை
நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார் மணிவாசகம்.
   திட்டமிடுவதும், நிதி ஒதுக்கீடு செய்வதும்தான் அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் செய்ய முடியும். ஆனால் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது கவனமுடன் செயல்பட வேண்டியது கீழ்நிலை அதிகாரிகளின் கடமை. கடமையைச் சரிவரச் செய்யவில்லையெனில் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள்தான் ஏற்படும் என்பதே நிதர்சன உண்மை.

காவிரி பிரச்னைக்கு வேலை நிறுத்தங்கள் தீர்வாகுமா?

காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தவிட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனைப் பார்த்து நாடே காரி உமிழ்ந்தது. இரண்டு நாள்கள் நடைபெற்ற நாடகங்களுக்குப் பிறகு கர்நாடகா அரசு விழித்துக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தியது. கலவரக்காரர்களை அடக்குமாறு போலீஸாருக்கு கடும் உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. இனி எதிர்காலத்தில் பெங்களூருக்கு வெளியூர், வெளிநாட்டவர்கள் வருவார்களா? அப்படியே வந்தாலும் தொழிலில் முதலீடு செய்வார்களா? சந்தேகம் கர்நாடகாவிற்கே வந்து விட்டது....உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் 20-ம் தேதிவரை சப்தமின்றி தண்ணீர் திறந்துவிட்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது. 
     இந்நிலையில் கர்நாடகத்தில் வேலை நிறுத்தம் நடத்திவிட்டார்கள். இதற்கு போட்டியாக தமிழகத்திலும் ஒரு நாள் வேலை நிறுத்தம். இது தேவைதானா என்பதே என்னுள் எழுந்த கேள்வி...இவ்வாறு கேட்பர்கள் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கப்படலாம்...ஆனால் அறிவு சார்ந்து சிந்தித்தால் இந்த வேலை நிறுத்தத்தால் ஒரு பயனும் கிடைக்கப் போவது இல்லை. விவசாயிகளின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது வேறு. கன்னடர்களுக்கு இணையாக இன,மொழி வெறி போராட்டங்களை நடத்துவது வேறு.
மொழி, இனவெறியே காரணம்:
    காவிரி பிரச்னையை நீண்ட காலமாகத் தொடர்ந்து பார்த்தும்.. படித்தும் வருபவர்களுக்கு தற்போதைய கலவரங்கள், போராட்டங்கள் காவிரி நீருக்காக மட்டுமல்ல, அதையும் தாண்டி உலகளவில் வளர்ந்து வரும் இன,மொழி, மத,சாதி அடிப்படையிலான என வேறுபாட்டு சித்தாந்தமே என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
பெங்களூரு கன்னடர்களுக்கு மட்டுமேயும், சென்னை தமிழர்களுக்கு மட்டுமேயும்,  மும்பை மராட்டியர்களுக்கு மட்டுமேயும் சொந்தமானதும் அல்ல...எத்தனை தொழிற்சாலைகள், நிறுவனங்கள்  இங்கேயும் அங்கேயும் உள்ளன. இவற்றின் முதலாளிகள் யார்? தொழிலாளிகள் யார்? எந்த மாநிலத்தவர் என இனம் பிரிக்க முடியுமா? தமிழகத்தில் முதலமைச்சருக்கு அருகில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் மலையாளம், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான்.... சென்னை மாநகர காவல் ஆணையர்-மலையாளி, தலைமைச் செயலாளர்- தெலுங்கர். உயர்நீதிமன்ற நீதிபதி-இந்தி...என்னற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. எனவே 
இன,மொழி பேதங்களை ஆதரிக்க முடியாது....
     வேலை நிறுத்தத்தை முதலில் அறிவித்த வியாபாரி சங்கங்கள் என்றைக்காவது தக்காளி கிலோ 2 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 5 ரூபாய்க்கும் விற்றபோது விவசாயிகளைப் பற்றி கவலைப்பட்டார்களா?  நியாயமாக கிலோ ரூ. 20 க்குத்தான் வாங்கி விற்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றார்களா?. நம்நாட்டு விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என கவலையடைந்த  படித்து வேலையில் உள்ள இளைஞர்கள் விவசாயிகளின் நலன் கருதி இனி பழச்சாறுகள் மட்டுமே குடிப்போம் என உறுதி எடுத்தார்களா?. காரணம் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே விவசாயி எப்போதும் நாதியற்றவனே..
    ஒரு போக விவசாயம் பொய்த்துவிட்டால் அடுத்த போகம் விளையும் வரை அந்தக் குடும்பமே சோற்றுக்குக் கூட கஷ்டப்படும். விவசாயத்தை விட்டு நகரத்தை நோக்கி நகரத் தொடங்கியதால் நிலைமை மாறி வருகிறது. விவசாயம் செய்யாத விவசாயி பணக்காரனாக இல்லாவிட்டாலும் கடன்காரனாக இல்லாமலிருக்கிறான். தமிழகத்தில் விளையும் காய்கறிகள் கேரளா செல்கிறது. கர்நாடக வெங்காயம், தக்காளி சென்னையில் குவிகிறது. ஆந்திர பருப்பு, அரிசி தமிழகம் வருகிறது. எனவே விவசாயி எங்கிருந்தாலும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. இதில் பிரிவினை கூடாது.
தீர்வு மத்திய அரசின் கையில்:
       நான்கு மாநிலங்களுக்கிடையே 75 ஆண்டு காலமாக இருந்து வரும் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு. மாநில அரசுகளுக்கு இன உணர்வு இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.  ஆனால் இதற்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய மத்திய அரசு என்ன செய்கிறது? இதில் காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி என்பதெல்லாம் வேறுபாடு கிடையாது. வெறும் 146 இடங்களை வைத்து அன்றைக்கு ஆட்சி செய்த பிரதமர் வி.பி.சிங்கால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க முடிந்தது என்றால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பினை  பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த, இருக்கும் கட்சிகளால் அமலுக்குக் கொண்டுவர முடியாதா?  முடியும்...அவர்களுக்குத் தேவையில்லை...தீர்ப்புகளை அமல்படுத்துவதன் மூலம் அரசியல் லாபக் கணக்குகள் சரிவதை எந்தக் கட்சிதான் ஏற்கும்? நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை அரசிதழில் வெளியிடவே
கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருந்த நிலையில் தீர்ப்பாவது... ஆணையமாவது... 
மாநிலங்களிடையேயான பிரச்னையில் மெத்தனம்:
    தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது  நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி குறித்து யாருக்கும் அக்கரையில்லை.. காவிரி பிரச்னையில் மட்டுமல்ல...தெலுங்கானா-ஆந்திரம் இடையேயான பிரச்னைகள், பாலாறு பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என இருமாநிலங்கள் சம்மந்தப்பட்ட  எந்த பிரச்னையிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் சமீப காலமாக  திருப்திகரமாக இல்லை. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் சென்றுதான் போராட வேண்டும் எனில் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மத்திய அரசு எல்லாம் எதற்கு? 
    இங்கு வாக்கு வங்கி அரசியல்தான் அனைத்து முடிவுகளையும் நிர்ணயம் செய்கிறது. கர்நாடகத்தில் கலவர அமளியில் ஈடுபட்டோர் பெரும்பாலனவர்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த பா.ஜ.கவினர் எனக் கூறப்படுகிறது. கர்நாடகத்தில் திடீரென வெடித்த கலவரத்தில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது,  மக்கள் பீதியில்
உறைகின்றனர், ஊடகங்களில் தொடர்ந்து ஊழைச் சப்தம்தான் கேட்கிறது. ஆனாலும்  நாட்டின் பிரதமருக்கும், உள்துறை மந்திரிக்குமே இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தகவல் தெரியவருகிறது. பிறகு நாமும் ஏதாவது கூற வேண்டும் என நினைத்த பிரதமர் இருமாநில மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக வேண்டுகோள் விடுத்தார். ராமதாஸ் பாணியில் சொல்வதென்றால் கட்டப் பஞ்சாயத்து.. சுதந்திரத்திற்கு பிறகு நாட்டினை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர்  சர்தார் பட்டேல் இங்கே? தேச ஒற்றுமையைக் கூறுபோடும் தற்போதைய தலைவர்கள் எங்கே?
    சட்டத்தை பலம் பொருந்தியவன் கையிலெடுக்கும்போது எளியவனைக் காப்பாற்றாத அரசுகள் இருந்தென்ன பயன்? மலர்வளையம் வைப்பற்கு தலைவர்கள் தேவையில்லை. மலர் தொடுக்கும் பூக்காரர் போதுமே. கூலி வேலைக்கு போனவர்களை காட்டுக்குள் அழைத்துப் போய் சுட்டு பிணமாக்கினார்கள். இதுவரை மத்திய அரசு ஏதாவது தலையிட்டது உண்டா? அதாவது மாநில ஆட்சியை விட மத்திய அரசு பலமானது அல்ல (356 பிரிவை நீக்கிய பிறகு) என்பதே நிதர்சன உண்மை.
அழுத்தம் கொடுப்பதே அனைவரின் கடமை:
    இந்திய நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க வேண்டும். ஒட்டுமொத்த தண்ணீரின் அளவை கணக்கிட வேண்டும். மழை நீரைச் சேமிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்னைகளில் 
வலுவான அதிகாரங்கள் நிறைந்த ஒழுங்காற்று ஆணையங்களை அமைக்க வேண்டும். ஒட்டுமொத்த விவசாயத்தையும் கணக்கிட்டு புள்ளி விபரப்படுத்த வேண்டும். 
விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
விளைபொருள்களுக்கு சந்தையில் நியாயமான விலை கிடைக்காதபோது அரசு தலையிட்டு கொள்முதல் செய்து விளைபொருள்களைப் பாதுகாக்க வேண்டும்.
மழைக்காலத்திற்கு முன்பே கால்வாய்கள், கண்மாய்களைச் சீரமைக்க வேண்டும். நதிகளை இணைப்பது என்பது பெருங்கனவு... இருப்பினும் அதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்...நடைமுறையில் உள்ள சட்டங்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை யார் மீறினாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பிரதமர், குடியரசுத் தலைவருக்கு இருக்க வேண்டும்.
    இது போன்ற கருத்துக்களுக்குக் ஊக்கம் கொடுத்து ஆளும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய சங்கங்கள், பொதுமக்கள் ஒற்றுமையை, இன உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்ற ஒரு பயனைத் தவிர இந்த வேலை நிறுத்தத்தால் எவ்வித பயனும் விழையப்போவது இல்லை. மனித நேயம் மட்டுமே மக்களை வாழ வைக்கும்...இது உலகளாவிய பொதுமறை... 
வடசென்னை பகுதியில்  272 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது

திருவொற்றியூர், செப்.11: வடசென்னை பகுதியில் எர்ணாவூர், திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட மூன்று இடங்களில் 272 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
எர்ணாவூரில் 96 சிலைகள்:
    திருவொற்றியூர் பகுதி எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே உள்ள கடற்கரையில் சுமாா் 98 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இங்குள்ள சான்கோ தனியார் நிறுவனம் வழங்கியிருந்த ராட்சத கிரேன்கள் மூலம் இறக்கி வைக்கப்பட்ட சிலைகள் கட்டுமரம்,  பைபர் படகுகள் உள்ளிட்டவை மூலம் ஆழ்கடல் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோழவரம், மீஞ்சூர், மாதவரம், மணலி, எர்ணாவூர், எண்ணூர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. இங்கு மட்டும் 96 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இது தவிர இந்து முன்னணி சார்பில்  எண்ணூர், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த  சுமார் 11 சிலைகள் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  மாதவரம் போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
வெறிச்சோடிய திருவொற்றியூர்:
    திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை அருகே சிலைகள் கரைக்க  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கிரேன், படகு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன. ஆனால் இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஒரே ஒரு சிலை மட்டுமே எடுத்துவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. திருவொற்றியூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 14 சிலைகள் கடந்த புதன்கிழமையே கடலில் கரைக்கப்பட்டுவிட்டன. இன்னும் சில சிலைகள் காசிமேடு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு
விட்டன. இதனால் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியே வெறிச்சோடியது. 
காசிமேட்டில் 175 சிலைகள்: 
    காசிமேடு என் 4 காவல் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை 175 சிலைகள் கரைக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, பூக்கடை காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. ஐந்து படகுகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் போலீஸாருடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 
வடசென்னை போலீஸ் துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் சுமார் 
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
எவ்வித அசம்பாவிதமும் இன்றி சுமூகமான முறையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது போலீஸாரை நிம்மதியடையச் செய்தது.    

சிறுவர்களை ஈர்க்கும் சீனாவின் தெளிப்பான் மிட்டாய்கள் 

சில்லரை விலைச் சந்தையைக் கைப்பற்றும் சீனா 

திருவொற்றியூர், செப்.9:சிறுவர்களை தன்வயப்படுத்தும் சீன நாட்டின் புதிய வகை மிட்டாய்கள் இந்தியச் சந்தையை ஆக்கிமிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் பாரம்பரிய மிட்டாய் வகைகளுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது.
    சீனாவிலிருந்து பொம்மைகள், பிளாஸ்டிக் பொருள்கள், அழகு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ரசாயன பொருள்கள், டயர்கள், இரும்புத் தகடுகள் என ஏராளமான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 65 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.4.25 லட்சம் கோடி) சீனப் பொருள்கள் இந்தியாவிற்கு 
இறக்குமதியாகின்றன. ஆனால் இந்தியாவிலிருந்து சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு மட்டுமே சீனாவிற்கு இந்திய தயாரிப்பு பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும் வகையில் சீன பொருள்களின் இறக்குமதி  ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிறுவர்களை ஈர்க்கும் வகைவகையான மிட்டாய் வகைகள் வரத் தொடங்கியுள்ளன. இவைகளால் 
ஆபத்துகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கூறுவது என்ன?
ஆசையைத் தூண்டும் தெளிப்பான் மிட்டாய்கள்:
இது குறித்து திருவொற்றியூர் சக்திபுரத்தைச் சேர்ந்த ஜி.சரவணன் கூறியது,
   எனது இரண்டு குழந்தைகளும் திருவொற்றியூர் காலடிபேட்டையில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். காலையில் பள்ளிக்குக் செல்வதற்கு முன் அருகே உள்ள பெட்டிக் கடையில் இருக்கும் மிட்டாய் வகை ஒன்றை வாங்கி தந்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தனர். அதனை வாங்கிப் பார்த்தபோது அது வாயு வடிவிலான சாக்கலேட் மிட்டாய் அடங்கிய தெளிப்பான்கள் (Spray Candy) எனத் தெரிய வந்தது. சிறிய அளவிலான இம்மிட்டாய்கள் ரூ.10 க்கு விற்கப்படுகிறது.  பல்வேறு சுவைகளில் விற்கப்படும் இவ்வகை மிட்டாய்கள் சிறுவர்களை வெகுவாக ஈர்க்கிறது. மேலும் படிப்படியாக அடிமையாகின்றனர். பெற்றோர்களுக்கும் அடம்பிடிக்கும் குழந்தைகளை திருப்திப்படுத்த வேறு வழி இல்லை. எனவே எவ்வித ஊட்டச் சத்துக்களும் இல்லாத இது போன்ற கவர்ச்சிகரமான மிட்டாய்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார் சரவணன்.
ஊட்டச் சத்துமிக்க பாரம்பரிய மிட்டாய் தொழில் நலிவடையும்:
சென்னை மிட்டாய் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.தங்கப்பெருமாள் கூறியது,
   சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தப் பொருளும் தரத்துடன் இருப்பதில்லை.  ஒரு முறை பயன்படுத்திவிட்டு பழுதானால் தூக்கி எறிய வேண்டிய 
நிலையில் உள்ளன. இந்நிலையில் எவ்வித தரக்கட்டுப்பாடும் இன்றி தயாரிக்கப்படும் 
சீன மிட்டாய்கள் உள்ளூர் சந்தையை வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. இதனால்
ஊட்டச் சத்து நிறைந்த ரொட்டி வகைகள், கடலைமிட்டாய், கமர்கட், எள்ளுருண்டை உள்ளிட்ட மிட்டாய் வகைகள் விற்பனை வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் பாரம்பரி மிட்டாய் தொழில்கள் நலிவடையும். மேலும் கவர்ச்சிகரமான பேக்கிங்கை மட்டுமே மூலதனமாகக் கொண்டு ஒரு ரூபாய் கூட மதிப்பில்லாத சீன பொருள்களை ரூ.10-க்கு விற்கின்றனர். மேலும் 2 ஆண்டுகளுக்கு கெட்டுப் போகாது உத்தரவாதம் அளிக்கின்றனர். அப்படியெனில் அதில் அதிக அளவு பதப்படுத்தும் ரசாயனங்கள் கலந்துள்ளது என்பதே உண்மை.  குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப பல்வேறு வடிவமைப்புகளில் சீன மிட்டாய்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுமக்களும், வியாபாரிகளும் இப்பொருள்களை புறக்கணிக்க வேண்டும். அதே நேரம் இதற்கு தடைவிதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தடைவிதிப்பது சாத்தியமா?:
இது குறித்து சென்னை சுங்கத் துறை முகவர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி.வி.கிரி
கூறியது,
    வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவு பொருள்கள் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், சோதனையிட்டு  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாடு 
ஆணையத்தின் (fssai- Food Safety and Standards Authority of India) தடையில்லாச் சான்றுக்குப் பிறகே இந்தியாவில் விற்க அனுமதிக்கப்படுகிறது. இது போன்ற மிட்டாய்களுக்கு தொடக்கத்தில் அனுமதி அளிப்பதில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வியாபாரிகளின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு உடலுக்குத் தீங்கு அளிக்காது என உறுதி செய்யப்பட்டதால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
பொருளாதார தாராளமயமாக்கல், சர்வதேச வணிக அமைப்பின் (WTO) விதிமுறைகள் போன்றவற்றால் இப்பொருள்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு தற்போது வழியில்லை. சுமார் 30 சதவீதம் வரை இறக்குமதி வரி செலுத்தியும் லாபமாகவே இத்தொழில் இயங்கிவருவதாகத் தெரிகிறது.  வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும்தான் முக்கியமாக உள்ளது. எனவே கவர்ச்சிகரமான பொருள்களை நாம்தான் புறக்கணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் போதிய அறிவுரைகளைக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பின்னர் படிப்படியாக இதன் தாக்கம் குறையும் என்றார் கிரி.
   பன்னாட்டு வணிகத்தில்  சர்வதேச வர்த்தக கொள்கைகளை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில் இது போன்ற தாக்கங்கள் இருக்கத்தான் செய்யும் கையெழுத்திட்ட ஆட்சியாளர்களுக்குப் புரியாதது அல்ல. எனவே மக்கள்தான் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. 

பலமடங்கு கட்டணம், முன்பதிவுகளை ஏற்க மறுக்கும் அவலம்

பெருநிறுவன கால்டாக்சிகள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

திருவொற்றியூர், செப்.8:போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் வாடிக்கையாளர்களின் அவசரத் தேவையைப் பயன்படுத்தி நூதன முறையில் பன்மடங்கு கட்டணம் வசூலிப்பது, முன்பதிவுகளை தாங்களாகவே ரத்து செய்வது உள்ளிட்ட புகார்களால் கால்டாக்சி நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். 
கால்டாக்சி நிறுவனங்களின் பின்னணி:
   சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்புவரை குறைந்த எண்ணிக்கையிலான கார்களைக் கொண்ட உள்ளூர் கால்டாக்சி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்தன. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பரிணாம வளர்ச்சியான செயலி (Apps) செயல்பாட்டுக்கு வந்த பிறகு கார்போரேட் நிறுவனங்கள் இத்துறையில் கால்பதிக்க ஆரம்பித்தன. இதில் மும்பையில் தொடங்கப்பட்ட ஓலா நிறுவனமும், அமெரிக்காவின் உபேர் நிறுவனமும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் சுமார் 5 லட்சம் கார்களை இயக்கி வருகின்றன.  
     குறைந்த அடிப்படை கட்டணம், பயண நேரம், தூரம், நெரிசல் நேரக் கட்டணம், துள்ளியமான கணக்கீடு போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை இந்நிறுவனங்கள் அளித்து வருகின்றன. உள்ளூர் கால்டாக்சிகளுடன் ஒப்பிடும்போது  கார்போரேட் நிறுவனங்களின் கட்டணங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. மேலும் எந்த இடத்திலும் இருந்து கொண்டு கார்களை வரவழைக்கும் செயலி அழைப்பு போன்ற தொழில்நுட்பங்களை கார்போரேட் நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் உள்ளூர் கால்டாக்சி நிறுவனங்கள படிப்படியாக நலிவடைந்துவிட்டன. தற்போது விரல்விட்டு என்னக் கூடிய அளவில்தான் உள்ளூர் கால்டாக்சிகளின் நிலை உள்ளது. 
அவசரத்தைப் பயன்படுத்தி பன்மடங்கு கட்டணம்:
   முதலில் குறைந்த கட்டணத்தால் வாடிக்கையாளர்களை வளர்த்துக் கொண்ட கார்போரேட் நிறுவனங்கள் படிப்படியாக தங்களது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டன. வார இறுதி நாள்கள், விடுமுறை தினங்கள், காலை, மாலை மற்றும் இரவு நேரங்கள், கனமழை பெய்யும் தினங்கள் என வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கட்டணங்கள் ஒன்றரை, இரண்டு, மூன்று மடங்கு என அழைப்புக்குத் தகுந்தவாறு கட்டணங்கள் வசூலிக்கின்றன. செயலியில் கார்கள் அருகாமையில் இருக்கக் கூடிய சூழலில் குறுந்தகவல் மூலம் அதிகக் கட்டணம் குறி்த்த தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாகச் செல்ல வேண்டிய தேவையில் இருப்பதால் இவர்களுக்கு அதிகக் கட்டணத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. 
அழைப்பினை மறுக்கும் கார் ஓட்டுனர்கள்:
    இன்னும் சில நேரங்களில் செயலி மூலம் பதிவு செய்த பின் ஓட்டுனர், வாகன பதிவு எண் உள்ளிட்ட தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு வந்த பிறகும் கார்கள் வருவதில்லை. வாடிக்கையாளர் செல்ல வேண்டிய இடம் கால்டாக்சி ஓட்டுனர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் வருவார். இல்லையெனில் தாமாகவே வாடிக்கையாளரின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுவிடும். அடுத்தடுத்த ஓட்டுனர்களும் இவ்வாறே செய்கின்றனர். இதனால் திருவொற்றியூர், மணலி அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இது குறித்த வாடிக்கையாளர்களின் புகார்கள் அனைத்தும் 'பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
விதிமுறைகள் பொருந்தாதா?
   இவ்வளவு அத்துமீறல்களை தொடர்ந்து இக்கால்டாக்சி நிறுவனங்கள் செய்து வந்தாலும் பாதிக்கப்படும் வாடிக்கையாளர் போக்குவரத்து காவல்த் துறையிடமோ அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகத்திலோ புகார் அளிக்க முடிவதில்லை. காரணம் ஓலா, உபேர் என்பதெல்லாம் வெறும் பல்வேறு தொடர்புகளை இணைய வழி, செயலி உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பங்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர் (Aggregator)
என்ற அடிப்படையில்தான் இச்சேவையை அளிக்கின்றன. இதற்கு கமிஷனாக 20 முதல் 40 சதம்வரை கார் உரிமையாளர்களிடமிருந்து இந்நிறுவனங்கள் வசூலிக்கின்றன.  இந்நிறுவனங்களுக்குச் சொந்தமாக ஒரு காரைக் கூட இச்சேவையில் ஈடுபடுத்துவதில்லை. எனவே நடைபெறும் தவறுகள் மீது மோட்டார் வாகனச் சட்டங்களின்படி வாகன உரிமையாளர், ஓட்டுனர் என்ற எவ்வித பொறுப்பும், பிடிமானமும் இந்நிறுவனங்களுக்கு இருப்பதில்லை.  
புதிய விதிமுறைகளை வகுக்க ஆயத்தம்:
    இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் (விதிமுறைகள்) பி.முருகானந்தம், சென்னை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் ஏ.வீரபாண்டியன் ஆகியோர் கூறியது,  
     கார்போரேட் கால்டாக்சி நிறுவனங்களின் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. மேலும் ஒருங்கிணைப்பாளர் (Aggregator) என்ற 
அடிப்படையில்தான் இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் நேரடியாக நடவடிக்கை எடுக்க தற்போது பொருத்தமான விதிமுறைகள் இல்லை. ஆனால் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் சேவையில் நேரடியாக ஈடுபட்டுள்ள கால்டாக்சி நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இது குறித்து நாடு முழுவதும் ஒரே சீரான விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதெற்கென விதிமுறைகளை பரிந்துரைக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  விரைவில் இப்பிரச்னைக்குப் பொருத்தமான தீர்வு காணப்படும் என்றனர்.
    ஆட்டோக்காரர் 10 ரூபாய் அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி தவறு என்ற நிலையில் கார்போரேட் நிறுவனங்கள் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பது தார்மீக அடிப்படையில் எந்த வகையிலும் தவறுதானே? இது குறித்து பெங்களூருவிலுள்ள ஓலா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசியபோது விரைவில் தங்கள் அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என்ற பதிலே கிடைத்தது. எல்லோரும், எல்லோரையும், எப்போதும் ஏமாற்றிவிட முடியுமா என்ன?
திருவொற்றியூரில் தொடரும் விபத்துகள் : சுரங்கப் பாதை அமைக்க கோரிக்கை

மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானம்


திருவொற்றியூர், செப்.6:அடிக்கடி நிகழும் விபத்துக்களைத் தடுக்க எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் மயானம் அருகே சுரங்கப்பாதை (Underpass) அமைக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவொற்றியூர் மண்டலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் கூறியது,
    சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் எண்ணூர் விரைவு சாலை 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 
திருவொற்றியூர் மயானம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்க 
திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டத்தில் உறுதியளித்தப்படி பாலம் அமைக்காமலேயே சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இது குறித்து அப்போதே 
எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
      தற்போதைய சாலையின் கிழக்குப் புறத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசிக்கின்றனர். மேலும் திருவொற்றியூரின் பிரதான மயானம், பட்டினத்தார் கோயிலும் கிழக்குப் பகுதியில்தான் உள்ளன. மேற்கு பகுதியில் வடிவுடையம்மன் கோயில், முக்கிய வியாபாரத் தலங்கள், நீதிமன்றம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. மேலும்  பெருவாரியாக மக்கள் வசிக்கும் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட சடலங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன.  நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் விரைந்து செல்லும் நிலையில் இரு திசைகளிலும் தொடர்ந்து பாதசாரிகள் ஆபத்தான நிலையில் சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. 
       இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இச்சாலையில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. எனவே இங்கு ஏற்கனவே திட்ட அறிக்கையில் உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் தனரமேஷ்.

திருவொற்றியூரில் பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி

120 மாணவர்கள் பங்கேற்பு

திருவொற்றியூர், செப்.4:திருவொற்றியூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவிலான இப்போட்டியில் சுமார் 120 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
   திருவொற்றியூர் தெற்கு மாடவீதியில் ராயல் நைட் செஸ் அகாடமியின் தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொழிலதிபர் ஜி.வரதராஜன் அகாடமியைத் திறந்துவைத்து பின்னர் போட்டிகளையும் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள்  நடைபெற்றன. ஜூனியர், சீனியர் என பிரிக்கப்பட்ட பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 15 வயதினருக்கான பிரிவில்  சாய்ஸ்ரேயா, கே.ஆர்.தினேஷ் ஆகியோர் முதலிடத்தையும், 10 வயதினருக்கான பிரிவில் லக்சனா, அர்ஜூன் வாசுதேவன் ஆகியோர் முதலிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
     இந்நிகழ்ச்சியில் அகாடமியின் இயக்குனர் சுசிந்திரகுமார், சமூக சேவகர் கே.சுப்பிரமணி, வழக்கறிஞர் ரமேஷ், ஏ.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி ரயில்வே குடியிருப்புவாசிகள் ஆர்ப்பாட்டம்


திருவொற்றியூர், செப்.3:அடிக்கடி நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி  திருவொற்றியூரில் ரயில்வே குடியிருப்புவாசிகள் சனிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்களை நடைபெறுவதாகக் கூறி ரயில்வே அலுவலகம் முன்பு குடியிருப்புவாசிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அவர்கள் கூறியது,
   இங்குள்ள ரயில்வே குடியிருப்பில் 67 வீடுகள் உள்ளன. சுமார் 250 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஒதுங்குப்புறமாக உள்ள இப்பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த ஆக.15-ம் தேதி பிரதாப் சிங் என்பவரது வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளிச்சாமான்கள், 
மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில் ஆக.28-ம் தேதி குணசேகரன் என்பவரது வீட்டில் இரண்டரை கிலோ வெள்ளிப்  பொருள்கள், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன. இது தவிர 
சிறு ,சிறு கொள்ளைச்சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன. இச்சம்பவங்களில் 
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே நாங்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். எனவே உடனடியாக கூடுதல் பாதுகாப்பு அளித்து கொள்ளைச் சம்வபங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
   இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டத்தை ரயில்வே குடியிருப்புவாசிகள் கைவிட்டனர்.