திருவொற்றியூரில் முறையாக அமைக்கப்படாத மழைநீர் கால்வாய்கள்
தடுப்பணைகளாக மாறிய அவலம்
திருவொற்றியூர், செப்.16: திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய்களால் வியாழக்கிழமை பெய்த மழையில் எவ்வித பயனும் இல்லாமல் போயின. இதனால் மழைநீர் சாலைகளில் தேங்கி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
சுங்கச் சாவடி முதல் எர்ணாவூர் மேம்பாலம்வரை சுமார் 6 கி.மீ தூரத்திற்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலை 65 அடி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் விம்கோ நகர் முதல் எர்ணாவூர் மேம்பாலம்வரை சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கப்பணிகள் செய்து முடிக்கப்படவில்லை. இந்நிலையில் சாலையின் இரு புறமும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. ஆனால் இக்கால்வாய்கள் அனைத்தும் பெரும்பாலான இடங்களில் ஏற்ற இறக்கங்கள் பொருத்தமாக இல்லை. இது அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் போது நிரூபணமாகி வருகிறது.
தடுப்பணைகளாக மாறிய கால்வாய்கள்:
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலடிப்பேட்டை ராஜா கடை, தாங்கல், விம்கோநகர், அஜாக்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்
சீராக அமைக்கப்படவில்லை. சாலையை விட கால்வாய்க்குள் மழை நீர் செல்லும்
துளைகள் உயரத்தில் உள்ளன. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கனமழை பெய்யும்போதெல்லாம் இப்பகுதிகளில் வெள்ளம்போல் தேங்குவதால் இக்கால்வாய்கள் தடுப்பணைகள் போல காட்சியளிக்கின்றன. மேலும் சாலையின் நடுவே கழிவு நீர் குழாய்கள் செல்கின்றன. எனவே வெள்ளம்போல் தேங்கியுள்ள மழை நீரை கழிவு நீர் குழாய்கள் வழியே திறந்துவிடும் பணியில் பகுதிவாசிகள் ஈடுபடுகின்றனர். இதனால் கழிவு நீர் குழாயிலும் அடைப்பு ஏற்படுகிறது. இதில் கழிவு நீர் குழாயை மெட்ரோ வாட்டர் நிறுவனமும், மழைநீர் கால்வாயை மாநில நெடுஞ்சாலைத் துறையும் பராமரித்து வருகின்றன. இதனால் இரு துறை அதிகாரிகளும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
மழைநீரால் பயன்பெறாத திருக்குளம்:
இது குறித்து சென்னை பசுமை இயக்க அமைப்பாளர் என்.துரைராஜ் கூறுகையில், திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்கள் முறையாக இல்லை. திட்டம் அறிவிக்கப்பட்டபோது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சேகரிக்கப்படும் மழைநீரில் சுமார் 50 சதவீதம் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளத்தில் விடப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கூட இக்குளம் முழுவதுமாக நிரம்பவில்லை. தற்போதும் இக்குளம் வரண்டு கிடக்கிறது. மாநகராட்சி, அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்தவண்ணமே உள்ளனர். ஆனாலும் பிரச்னை முடிந்தபாடில்லை. வெள்ளம்போல் தேங்கும் மழைநீரைக் கூட சில மீட்டர் தூரம் உள்ள குளத்திற்கு கொண்டுவர தொழில்நுட்பங்கள் இல்லையா என்பதே இப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது. இதேபோல் காலடிப்பேட்டை வரதராஜபெருமாள் கோயிலும் இதே நிலைதான்.
கொசுக்களை உற்பத்தி செய்யும் கால்வாய்கள்:
கனமழையின் போது சேகரிக்கப்படும் மழைநீர் முழுவதுமாக வெளியேறுவதில்லை. காரணம் ஏற்ற இறக்கம்தான். இதனால் மழை நின்றுவிட்டாலும் கால்வாயின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனுடன் அடித்து வரப்பட்ட குப்பைகூழங்களால் மழை நின்றவிட்ட ஒரிரு நாள்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. முன்பெல்லாம் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் மட்டுமே கொசுக்கள் அதிக அளவில் இருக்கும். இக்கால்வாய்கள் அமைக்கப்பட்ட பிறகு
திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் கொசுக்கள் பல மடங்கு பெருகிவிட்டன. மாலை நேரங்களில் வெளியே வரமுடியாத அளவிற்கு கொசுக்கள் அதிகரித்துள்ளன என்கிறார் கைலாஷ் செக்டரைச் சேர்ந்த தொண்டு
நிறுவன அமைப்பாளர் பாலம் இருளப்பன்.
போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்:
இது குறித்து சாத்தாங்காடு ஐய்யப்பா சேவா சங்கத்தைச் சேர்ந்த கி.மணிவாசகம் கூறியது,
இச்சாலை விரிவாக்கமே முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் பணி ஒப்பந்தங்களும் ஒரே நேரத்தில் ஒரே நபருக்கு வழங்கப்படவில்லை. இதனால் மழைநீர் கால்வாய்போல் ஒரே சீராக இல்லாமல், பழங்கால ஆறு போல கண்ட இடங்களிலும் வளைந்து வளைந்து செல்கின்றனர். இக்கால்வாயால் ஒப்பந்ததாரர்கள் பயன்பெற்றதுதான் மிச்சம். இப்பிரச்னையில் அரசுத் துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. இக்கால்வாயை உடனடியாக ஆய்வு செய்து முறையாகச் சீர் செய்தால் மட்டுமே இனி வரும் மழைக்காலங்களில் இப்பகுதி பாதிக்கப்படாமல் இருக்கும். இதற்கான நடவடிக்கைகளை
நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார் மணிவாசகம்.
திட்டமிடுவதும், நிதி ஒதுக்கீடு செய்வதும்தான் அரசின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் செய்ய முடியும். ஆனால் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது கவனமுடன் செயல்பட வேண்டியது கீழ்நிலை அதிகாரிகளின் கடமை. கடமையைச் சரிவரச் செய்யவில்லையெனில் எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள்தான் ஏற்படும் என்பதே நிதர்சன உண்மை.
No comments:
Post a Comment