Thursday, 13 October 2016


பலமடங்கு கட்டணம், முன்பதிவுகளை ஏற்க மறுக்கும் அவலம்

பெருநிறுவன கால்டாக்சிகள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

திருவொற்றியூர், செப்.8:போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் வாடிக்கையாளர்களின் அவசரத் தேவையைப் பயன்படுத்தி நூதன முறையில் பன்மடங்கு கட்டணம் வசூலிப்பது, முன்பதிவுகளை தாங்களாகவே ரத்து செய்வது உள்ளிட்ட புகார்களால் கால்டாக்சி நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர். 
கால்டாக்சி நிறுவனங்களின் பின்னணி:
   சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்புவரை குறைந்த எண்ணிக்கையிலான கார்களைக் கொண்ட உள்ளூர் கால்டாக்சி நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்தன. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பரிணாம வளர்ச்சியான செயலி (Apps) செயல்பாட்டுக்கு வந்த பிறகு கார்போரேட் நிறுவனங்கள் இத்துறையில் கால்பதிக்க ஆரம்பித்தன. இதில் மும்பையில் தொடங்கப்பட்ட ஓலா நிறுவனமும், அமெரிக்காவின் உபேர் நிறுவனமும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் சுமார் 5 லட்சம் கார்களை இயக்கி வருகின்றன.  
     குறைந்த அடிப்படை கட்டணம், பயண நேரம், தூரம், நெரிசல் நேரக் கட்டணம், துள்ளியமான கணக்கீடு போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை இந்நிறுவனங்கள் அளித்து வருகின்றன. உள்ளூர் கால்டாக்சிகளுடன் ஒப்பிடும்போது  கார்போரேட் நிறுவனங்களின் கட்டணங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. மேலும் எந்த இடத்திலும் இருந்து கொண்டு கார்களை வரவழைக்கும் செயலி அழைப்பு போன்ற தொழில்நுட்பங்களை கார்போரேட் நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் உள்ளூர் கால்டாக்சி நிறுவனங்கள படிப்படியாக நலிவடைந்துவிட்டன. தற்போது விரல்விட்டு என்னக் கூடிய அளவில்தான் உள்ளூர் கால்டாக்சிகளின் நிலை உள்ளது. 
அவசரத்தைப் பயன்படுத்தி பன்மடங்கு கட்டணம்:
   முதலில் குறைந்த கட்டணத்தால் வாடிக்கையாளர்களை வளர்த்துக் கொண்ட கார்போரேட் நிறுவனங்கள் படிப்படியாக தங்களது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டன. வார இறுதி நாள்கள், விடுமுறை தினங்கள், காலை, மாலை மற்றும் இரவு நேரங்கள், கனமழை பெய்யும் தினங்கள் என வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கட்டணங்கள் ஒன்றரை, இரண்டு, மூன்று மடங்கு என அழைப்புக்குத் தகுந்தவாறு கட்டணங்கள் வசூலிக்கின்றன. செயலியில் கார்கள் அருகாமையில் இருக்கக் கூடிய சூழலில் குறுந்தகவல் மூலம் அதிகக் கட்டணம் குறி்த்த தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாகச் செல்ல வேண்டிய தேவையில் இருப்பதால் இவர்களுக்கு அதிகக் கட்டணத்தை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. 
அழைப்பினை மறுக்கும் கார் ஓட்டுனர்கள்:
    இன்னும் சில நேரங்களில் செயலி மூலம் பதிவு செய்த பின் ஓட்டுனர், வாகன பதிவு எண் உள்ளிட்ட தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு வந்த பிறகும் கார்கள் வருவதில்லை. வாடிக்கையாளர் செல்ல வேண்டிய இடம் கால்டாக்சி ஓட்டுனர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் வருவார். இல்லையெனில் தாமாகவே வாடிக்கையாளரின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுவிடும். அடுத்தடுத்த ஓட்டுனர்களும் இவ்வாறே செய்கின்றனர். இதனால் திருவொற்றியூர், மணலி அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இது குறித்த வாடிக்கையாளர்களின் புகார்கள் அனைத்தும் 'பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவலன்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
விதிமுறைகள் பொருந்தாதா?
   இவ்வளவு அத்துமீறல்களை தொடர்ந்து இக்கால்டாக்சி நிறுவனங்கள் செய்து வந்தாலும் பாதிக்கப்படும் வாடிக்கையாளர் போக்குவரத்து காவல்த் துறையிடமோ அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகத்திலோ புகார் அளிக்க முடிவதில்லை. காரணம் ஓலா, உபேர் என்பதெல்லாம் வெறும் பல்வேறு தொடர்புகளை இணைய வழி, செயலி உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பங்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர் (Aggregator)
என்ற அடிப்படையில்தான் இச்சேவையை அளிக்கின்றன. இதற்கு கமிஷனாக 20 முதல் 40 சதம்வரை கார் உரிமையாளர்களிடமிருந்து இந்நிறுவனங்கள் வசூலிக்கின்றன.  இந்நிறுவனங்களுக்குச் சொந்தமாக ஒரு காரைக் கூட இச்சேவையில் ஈடுபடுத்துவதில்லை. எனவே நடைபெறும் தவறுகள் மீது மோட்டார் வாகனச் சட்டங்களின்படி வாகன உரிமையாளர், ஓட்டுனர் என்ற எவ்வித பொறுப்பும், பிடிமானமும் இந்நிறுவனங்களுக்கு இருப்பதில்லை.  
புதிய விதிமுறைகளை வகுக்க ஆயத்தம்:
    இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் (விதிமுறைகள்) பி.முருகானந்தம், சென்னை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் ஏ.வீரபாண்டியன் ஆகியோர் கூறியது,  
     கார்போரேட் கால்டாக்சி நிறுவனங்களின் மீதான வாடிக்கையாளர்களின் புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. மேலும் ஒருங்கிணைப்பாளர் (Aggregator) என்ற 
அடிப்படையில்தான் இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் நேரடியாக நடவடிக்கை எடுக்க தற்போது பொருத்தமான விதிமுறைகள் இல்லை. ஆனால் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் சேவையில் நேரடியாக ஈடுபட்டுள்ள கால்டாக்சி நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இது குறித்து நாடு முழுவதும் ஒரே சீரான விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதெற்கென விதிமுறைகளை பரிந்துரைக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  விரைவில் இப்பிரச்னைக்குப் பொருத்தமான தீர்வு காணப்படும் என்றனர்.
    ஆட்டோக்காரர் 10 ரூபாய் அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி தவறு என்ற நிலையில் கார்போரேட் நிறுவனங்கள் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பது தார்மீக அடிப்படையில் எந்த வகையிலும் தவறுதானே? இது குறித்து பெங்களூருவிலுள்ள ஓலா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசியபோது விரைவில் தங்கள் அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என்ற பதிலே கிடைத்தது. எல்லோரும், எல்லோரையும், எப்போதும் ஏமாற்றிவிட முடியுமா என்ன?

No comments:

Post a Comment