கதவடைப்புகளும், கலவரங்களும்...
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தவிட்டதை எதிர்த்து நடைபெற்ற கர்நாடக மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தின்போது மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனைக் கண்டித்து கடந்த செப்.16-ல் தமிழகத்திலும் முழுகதவடைப்புகள் நடைபெற்றன. இப்பிரச்னையின்போது நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் வீடியோ பதிவுகளாக சமூக ஊடகங்களில் பரவின. பெங்களூருவில் ஒரு தமிழக லாரியை அடித்து நொறுக்கிய கலவரக்காரர்கள் லாரியின் ஓட்டுனரைக் கீழே இறக்கி காவிரி கர்நாடகத்துக்கே சொந்தமானது எனக் கூறும்படி கன்னடத்தில் கூச்சலிட்டு சரமாரியாகத் தாக்குகின்றனர். அவருக்கு கன்னடம் தெரியவில்லை. மரண பயத்தில் இருந்த அந்த டிரைவரைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. மற்றொரு சம்பவம் ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில்
சுற்றுலா வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி இதில் இருந்த சிலரை நடைபாதையில் குத்துக்காலிட்டு உட்கார வைத்து காவிரி தமிழகத்திற்குச் சொந்தம் எனக் கூறும்படி
மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தாக்குகின்றனர். தமிழ் தெரியாத அவர்கள் அழுது புலம்புகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களையும் கூர்ந்து கவனித்தால் காவிரி நீர் திறந்து விடப்படுவதாலோ அல்லது விடப்படாததாலோ பாதிக்கப்பட்டவர்கள் கோபமடைந்து நடத்திய போராட்டங்களாகத் தெரியவில்லை. மாறாக இனம், மொழிசார்ந்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிறு கூட்டத்தினர்தான் இதில் ஈடுபட்டனர். இரண்டு செயல்களையும் இரு மாநில மக்களில் பெரும்பான்மையோர் நிச்சயமாக விரும்பியிருக்க மாட்டார்கள்.
உலகளாவிய வணிகத்தால் உலகமே ஒரே குடையாக மாறி வரும் நிலையில் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தொழில், பணி நிமித்தமாக இடம் பெயர்வது என்பது தவிர்க்க இயலாதது. மேலும் வளர்ச்சிடைந்து வரும் பகுதிகளை நோக்கி மாவட்டம் விட்டு, மாநிலம் விட்டு, நாடு விட்டு நாடு என பயணப்படுவர்களின் எண்ணிக்கை படித்தவர்கள் முதல் தினக்கூலி தொழிலாளிகள் வரை அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன. நாடு முழுவதும் ஒரே சீரான பொருளாதார வளர்ச்சி இல்லாதபோது இது போன்ற இடம் பெயர்வுகளும் தவிர்க்க இயலாது.
போட்டிக்குப் போட்டி என போராட ஆரம்பித்தால் இனி ஒரு மாநிலத்திலும் மொழிச் சிறுபான்மை மக்கள் நிம்மதியோடு இருக்க முடியாது. மேலும் பிரச்னைகளில் நியாயமாகப் படும் ஒரு கருத்தைக் கூட அந்த மாநிலங்களுக்கு எதிராக யாரும் கூறிவிடக் கூடாது என்பதால்தான் நடிகர்கள் முதல் அரசியல்வாதிகள், ஊடகவியலார் வரை ஓர் குரலில் எதிரொலிக்கின்றனர். ஆனால் அறிவு சார்ந்து சிந்தித்தால் இது போன்ற கூச்சல்கள், கதவடைப்புகளால் ஒரு பயனும் கிடைக்கப் போவது இல்லை. விவசாயிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது வேறு. இன,மொழி வெறி அடிப்படையில் போராட்டங்களை நடத்துவது வேறு.
பெங்களூரு கன்னடர்களுக்கு மட்டுமேயும், சென்னை தமிழர்களுக்கு மட்டுமேயும், மும்பை மராட்டியர்களுக்கு மட்டுமேயும் சொந்தமானது அல்ல. அனைத்து இடங்களிலும் அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலத்தவர்களாலும் பெருமளவில் நடத்தப்படுகின்றன. இவற்றின் முதலாளிகள் யார்? தொழிலாளிகள் யார்? எந்த மாநிலத்தவர் என இனம் பிரிக்க முடியுமா?. இந்திய குடிமைப் பணி, மத்திய அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருமே அந்தந்த மாநிலத்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்பதையெல்லாம் போராட்டத்தில் ஈடுபடுவோர்கள்
நினைத்துப் பார்ப்பதில்லை. தமிழகத்தில்கூட நிர்வாகத் தலைமையில் இருப்பவர்கள் வேறு மொழியைக் தாய்மொழியாகக் கொண்டவர்களாக உள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையர்-மலையாளி, தலைமைச் செயலாளர்- தெலுங்கர், உயர்நீதிமன்ற நீதிபதி-இந்தி, இது தவிர என்னற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இவர்களெல்லாம் தமிழகத்தின் மீது அக்கரையற்றவர்கள் எனக் கூறிவிட முடியுமா?
ஒரு ஸ்வரன் சிங் ஐ.ஏ.எஸ். ஆணையராக இருந்தபோது திருச்சி மாநகரமே ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது என்பதை அப்பகுதி மக்கள் இன்னும் மறக்கவில்லையே. இதுபோன்ற எண்ணற்ற அதிகாரிகள் நாடு முழுவதும் பணியில் உள்ளனர்.
தமிழகத்தில் கதவடைப்பினை முதலில் அறிவித்த வியாபாரி சங்கங்கள் என்றைக்காவது ஒரு கிலோ தக்காளி ரூ 2, கத்தரிக்காய் ரூ. 5-க்கும் விற்றபோது இவற்றை விளைவித்த விவசாயிகள் என்னாவாகியிருப்பார்கள் என ஒரு முறையாவது கவலைப்பட்டிருப்பார்களா? அல்லது விவசாய விளை பொருள்களுக்கு நியாயவிலை கிடைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டாம், ஒரு அறிக்கையாவது வெளியிட்டதுண்டா?. அதேபோல் உள்ளூர் மாநில விவசாயிகளின் பொருள்களை மட்டுமே விற்போம். காவிரித் தண்ணீரில் கர்நாடகாவில் விளைவித்த பொருள்களை விற்க மாட்டோம் என உறுதி எடுக்க முடியுமா? இதேபோல் கதவடைப்பின்போது விடுமுறையை உண்டு களித்த நகரவாசிகள், படித்த இளைஞர்கள் எல்லாம் நமது விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என அக்கரை கொண்டு வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பழங்கள் உள்ளிட்ட வேளான்விளைபொருள்களையெல்லாம் புறந்தள்ளிவிடுவார்களா?. குறைந்தபட்சம் விவசாயிகளின் நலன் கருதி செயற்கை பானங்களைத் தவிர்த்து இயற்கை பழச்சாறுகளை மட்டுமே என பருகுவோம் என உறுதி எடுக்க முடியுமா? இதே கருத்து அனைத்து மாநிலத்தவர்களுக்கும் பொருந்தும். இதனை குறையாகக் கூறவில்லை மாறாக இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஒவ்வொரு சமுதாயமும் மற்றொரு சமுதாயத்தைச் சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும், இதில் இனம்,மதம்,சாதி,மொழி பேதங்கள் பார்த்தாலும் இங்கு ஒருவரும் வாழ முடியாது என்பது வாழ்வியல் நடைமுறை.
ஒரு போக விவசாயம் பொய்த்துவிட்டால் அடுத்த போகம் விளையும் வரை ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் எதிர் நோக்கும் பிரச்னைகள் கணக்கிலடங்காது. தற்போதைய நிலையில் விவசாயம் செய்யாத விவசாயி பணக்காரனாக இல்லாவிட்டாலும் கடன்காரனாக இல்லாமலிருப்பான். தமிழக விவசாயிகளின் உழைப்பால் விளையும் காய்கறிகள் கேரளா செல்கிறது, கர்நாடக வெங்காயம், தக்காளி சென்னையில் குவிகிறது, ஆந்திர பருப்பு, மிளகாய் தமிழகம் வருகிறது. எனவே சோறு போடும் விவசாயிகள் எங்கிருந்தாலும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. இதில் இன, மொழி பிரிவினை கூடாது. இதை அனைவரும் உணர்ந்தாக வேண்டும். சரி போராட்டங்களைத் தவிர்க்க என்னதான் செய்ய வேண்டும்?. தீர்வு மக்களிடம் கிடையாது, ஆட்சியாளர்களிடம்தான் உள்ளது. .
நான்கு மாநிலங்களுக்கிடையே 75 ஆண்டு காலமாக இருந்து வரும் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு. இதில் காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி என்பதெல்லாம் வேறுபாடு கிடையாது. வெறும் 146 இடங்களை வைத்து அன்றைக்கு ஆட்சி செய்த பிரதமர் வி.பி.சிங்கால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க முடிந்தது எனில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்ட
காவிரி ஒழுங்குமறை ஆணையத்தை அமைக்க பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்த, தற்போது இருக்கிற மத்திய அரசால் ஏன் முடியவில்லை?. முடியும்தான், ஆனால் பாழாய்ப் போன வாக்கு வங்கி அரசியல்தான் குறுக்கே நிற்கிறதே?
நாட்டில் நடைபெற்று வரும் அண்மைச் சம்பவங்களைப் பார்க்கும்போது தேச நலன் குறித்து யாருக்கும் அக்கரையிருப்பதாகத் தெரியவில்லை. காவிரி பிரச்னை மட்டுமல்ல, தெலங்கானா-ஆந்திரம் இடையேயான பிரச்னைகள், பாலாறு பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை என இருமாநிலங்கள் சம்மந்தப்பட்ட எந்த பிரச்னையிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் சமீப காலமாக திருப்திகரமாக இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கவலையாக உள்ளது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றம் சென்றுதான் போராட வேண்டும் எனில் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவக் கொள்கைகள் எல்லாம் எதற்கு?
காவிரி கலவரத்தில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டது. அடுத்து என்னாகுமோ என மக்கள் பீதியில் உறைகின்றனர். காட்சி ஊடகங்கள் தங்களின் ரேட்டிங்கை உயர்த்துவதற்காக கலவரச் செய்திகளை பாரபட்சமின்றி(?) நேரலையாகவே ஒளிபரப்பின. ஆனாலும் நாட்டின் பிரதமரும், உள்துறை அமைச்சரும் இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் மவுனம் கலைகின்றனர். பிறகு இருமாநில மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக ஒரு வேண்டுகோள் விடுத்து தங்கள் கடமையை நிறைவு செய்தனர். தேசத்தை தனது அறிவுக் கூர்மையால் ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் சர்தார் பட்டேல் இங்கே? தேச ஒற்றுமையைக் கூறுபோடும் தற்போதைய தலைவர்கள் எங்கே?
இரு மாநிலங்கள் வழியே ஓடும் நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கி தன்னாட்சி அதிகாரம் நிறைந்த ஆணையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்களுக்கு நீர் மேலாண்மை குறித்து போதிய பயிற்சி, விழிப்புணர்வு அளிக்க வேண்டும். மழைக்காலத்திற்கு முன்பே கால்வாய்கள், கண்மாய்களைச் சீரமைத்து மழைநீரைச் சேமிக்க வேண்டும். நதிகளை இணைப்பது என்பது பெருங்கனவே, இருப்பினும் அதற்கான செயல்திட்டங்களை வகுத்து காலவரையறை செய்திட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் வகையில் விளைபொருள்களுக்கு சந்தையில் நியாயமான விலை கிடைக்காதபோது அரசே கொள்முதல் செய்து விநியோகம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நடைமுறையில் உள்ள சட்டங்களை, நீதிமன்றத் தீர்ப்புகளை யார் மீறினாலும், அது மாநில அரசாகவே இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கு வேண்டும். பலமானவன் சட்டத்தைக் கையெலெடுக்க ஆரம்பித்தால், ஏளியவனை அரசனே காப்பாற்ற வேண்டும்.
இது போன்ற கருத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை விட்டுவிட்டு ஒற்றுமை, இன உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்ற போர்வையில் கதவடைப்பு செய்து கலவரத்தில் ஈடுபடுவதால் எவ்வித பயனும் விழையப்போவது இல்லை. மாறாக ஒரு நாள் கூத்துப்பட்டறையாகவே முடியும். மனித நேயம் மட்டுமே மக்களை வாழ வைக்கும். இதற்கு எந்த இனமும் விதிவிலக்கல்ல. இது உலகளாவிய பொதுமறை...
No comments:
Post a Comment