திருவொற்றியூர் முருகன் கோயிலில் 6 சாமி சிலைகள் திருட்டு
மர்மநபர்கள் கைவரிசை
திருவொற்றியூர், ஆக.20:திருவொற்றியூர் முருகன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 6 உற்சவர் சாமி சிலைகளை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
திருவொற்றியூர் ஜோதிநகர் பிரதான சாலையில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை ஜோதிநகர் கிராம நிர்வாகத்தினர் நிர்வகித்து வருகின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றனர். இங்குள்ள அறை ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை காலையில் கோயிலைத் திறந்து பூஜை செய்ய வந்த கோயில் அர்ச்சகர் கார்த்திக் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு கதவைத் திறந்து பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டிருந்த முருகன், ஈஸ்வரன், பார்வதி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட 6 உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்த கார்த்திக், பிறகு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் காவல்த்துறை கைரேகை பிரிவு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். சென்னை மாநகர காவல்த் துறையின் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர் சிலை காப்பக மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு:
திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் சிலை பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திருவொற்றியூரில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தையடுத்து இம்மையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.