Sunday, 28 August 2016

நான்கு நாள்களாகியும் நீடிக்கும் மர்மம் 

காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது 

கடலோரக் காவல் படை ஐ.ஜி. ராஜன் பர்ஹோத்ரா தகவல் 


திருவொற்றியூர், ஜூலை 25: கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து போர்ட் பிளைர் சென்றபோது காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என கடலோரக் காவல் படை ஐ.ஜி.(கிழக்கு பிராந்தியம் ) ராஜன் பர்ஹோத்ரா திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
   சென்னை தாம்பரம் விமானப் படை தளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 29 பேருடன் புறப்பட்ட AN-32 ரக விமானம் வங்கக் கடலில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும்பணி கடந்த நான்கு நாள்களாக நடந்து வருகிறது. இருப்பினும் விமானம் குறித்து எவ்வித தகவல் மற்றும் தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. 
     இந்நிலையில் இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தேடும் பணிக்கு தலைமையேற்றுள்ள கிழக்கு கடலோரக் காவல்படை ஐ.ஜி.ராஜன் பர்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறியது,
  சென்னையிலிருந்து 150 கடல் மைல் தூரத்தில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது தற்போது 200 கடல் மைல்வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக 
மோசமான வானிலையால் மேகமூட்டம், கடல் கொந்தளி்ப்பு உள்ளிட்டவை தேடும் பணிக்கு சிரமமாக இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை வானிலை சீராகியுள்ளது. இதனையடுத்து தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
தேடும் பணியில் 16 கப்பல்கள் 12 விமானங்கள்: 
    தேடும் பணியில் 13 கடற்படை கப்பல்கள், 2 கடலோரக் காவல்படை கப்பல்கள், 12 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் தேடப்பட்டு வரும் பகுதியை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது வான்வழி பார்வையில் (Aerial view)60 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவு,  தரைவழியில் (Surface) 40 ஆயிரம் சதுர கடல் மைல் பரப்பளவிலும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
சமிஞ்சை கிடைக்கவில்லை:
   சுமார் 3 ஆயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் காணாமல் போன விமானத்தின் அவசரகால இருப்பிடம் அறியும் கருவியிலிருந்து (ELT- Emergency Location Transmitter) எவ்வித சமிஞ்சையும் கிடைக்கவில்லை. மேலும் விமானத்தின் பாகங்களோ, சிதைவுகளோ எங்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஏதேனும் அடையாளங்கள் கிடைத்தால் தேடும் பணி எளிதாக இருக்கும். பிறகு அந்த இடத்தைச் சுற்றி தண்ணீருக்குள் 
ஆய்வு செய்யும் கப்பல்களை ஈடுபடுத்த முடியும்.  மேலும் இவ்வழியே வரும், செல்லும் வணிகக் கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆபரேசன் தலாஷ்: 
     தேடும் பணிக்கு இஸ்ரோ, தேசிய கடலாய்வு தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவைகளின் உதவிகள் பெறப்பட்டு வருகின்றன்.  தற்போதைய சூழலில் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவிகள், ஆலோசனைகள் ஏதும் கோரப்படவில்லை.  ஆபரேசன் தலாஷ் என பெயரிடப்பட்டுள்ள இத்தேடுதல் பணியில் முப்படையும் ஈடுபட்டுள்ளது. விமானத்தைத் தேடும் பணிக்கான காலவரையறை ஏதும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார் பர்ஹோத்ரா.


பெட்டிச் செய்தி:
விமானத்தில் சென்றவர்களின் விபரங்கள் எங்கே?
       AN-32 விமானம் காணாமல் போய் நான்கு நாள்களாகியும் இதுவரை விமானத்தில் பயணம் செய்த 29 பேர்களின் முழுமையான விபரங்களை விமானப்படை அதிகாரிகள் வெளியிடவில்லை. இது குறித்து ராஜன் பர்ஹோத்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விமானத்தில் சென்றவர்களில் முத்துக்கிருஷ்ணன் என்ற ஒருவர் மட்டுமே கடலோரக் காவல்படையைச் சேர்ந்தவர். இதர நபர்கள் குறித்து விமானப்படை அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும். இதனையடுத்து டெல்லியிலுள்ள விமானப்படை செய்தி தொடர்பாளர் அனுபம் பானர்ஜியை நாம் தொடர்பு கொண்டும் இதற்கான பதில் கிடைக்கவில்லை.  தினசரி சரக்குகள், ஆள்களைச் சுமந்து செல்லும் இந்த விமானத்தில் படையினருடன், கட்டட பணிக்கான வேளையாள்கள், படையினரின் உறவினர்களும் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் விதிமுறைகளை அதிகாரிகள் கடைப்பிடிக்காததே இந்த மௌனத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment