திருவொற்றியூரில் சலவைத் தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு
திருவொற்றியூர், ஆக.17: திருவொற்றியூரில் சலவைத் தொழிலாளர்களுக்கு ரூ.10.21 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பழமையான சென்னையை ஒட்டி அமைந்திருந்த கிராமங்களின் ஒன்றான திருவொற்றியூர் காலடிபேட்டையில் 1946-ல் டோபிகானா உருவானது. இதே பகுதியில் சுமார் 8 குடும்பங்களைச் சேர்ந்த சலவையாளர்கள் இங்கு சலவைத் தொழில் செய்து வந்தனர். மேலும் இவர்கள் இதே பகுதியில் தனித்தனியே குடியைகளை அமைத்திருந்தனர். தற்போது சுமார் 128 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. சலவைத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையினை அடுத்து இவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு 1998-ம் ஆண்டு திருவொற்றியூர் நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நில உரிமை மாற்றம், ஒரு பிரிவினருக்கான குடியிருப்பு, திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 18 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு சமீபத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதன்பேரில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் ரூ.10.21 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு பணியாணை வழங்கப்பட்டது. இதனையடுத்து திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை காலடிப்பேட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், சலவைத் தொழிலாளர் சங்கத் தலைவர் மாசிலாமணி, மாமன்ற உறுப்பினர் பேரரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment