நவம்பரில் காமராஜர் துறைமுக புதிய சரக்குப் பெட்டக முனையம்
துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார் உறுதி
திருவொற்றியூர், ஆக.15:எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டு வரும் அதானி குழும சரக்குப் பெட்டக முனையம் வரும் நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அப்போது பாஸ்கராச்சார் பேசியது,
சுதந்திர இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவில் பல்வேறு துறைகளில் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறைகளில் பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவின் பாரம்பரியக் கலையான யோக உலகளவில் வரவேற்பினை பெற்று வருகிறது.
காமராஜர் துறைமுகம் தொடக்கம் முதலே நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை அளித்து வருகிறது. குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளை இத்துறைமுகம் படைத்துள்ளது. மேலும் சரக்குகளைக் கையாள புதிய தொழில்நுட்பங்களை புகுத்த துரித நடவடிக்கைகளை எடுக்க துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது.
நவம்பரில் புதிய சரக்குப் பெட்டக முனையம்:
இத்துறைமுகத்தில் அதானி குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் அதி நவீன சரக்குப் பெட்டக முனையம் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் செயல்பாட்டுக்கு வரும். மேலும் பல சரக்கு முனையம் (Multi Cargo Terminal) விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதேபோல் புதிய கப்பல் தளங்கள், எண்ணெய் இறக்குமதி சிறப்பு தளம் உள்ளிட்டவைகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது காமராஜர் துறைமுகத்தின் ஒட்டுமொத்த முகமே மாறிவிடும். ஏராளமான கண்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள், பலவகை சரக்குகள் இங்கு வரும். அப்போது சென்னைத் துறைமுகத்தில் நீண்ட நாள்களாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை இங்கும் வந்துவிடக் கூடாது. எனவே இதனை ஒரு சவாலாக ஏற்று இப்போது இருந்தே துறைமுக அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
மீனவர்கள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை:
காமராஜர் துறைமுகத்தின் வளர்ச்சி என்பது கடலோர மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்ததாகவே இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற கருத்தறியும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளூர் மக்களின் உணர்வுபூர்வமானது. இதனை மதித்து துறைமுக நிர்வாகம் செயல்படும். எண்ணூர் முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதன்மூலம் இப்பகுதி பாரம்பரிய நீர்நிலைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் வரும். சமுதாய ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சியே நிலையானதாக இருக்கும் என்றார் பாஸ்கராச்சார்.
இவ்விழாவில் பொது மேலாளர்கள் சஞ்சய், கிருஷ்ணசாமி, ஏ.கே.குப்தா, ராதாகிருஷ்ணன், கருப்பையா மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment