பிரசவ செலவிற்காக பெற்ற குழந்தையை விற்ற அன்னை
வறுமையைப் பயன்படுத்தி மருத்துவர்கள் அலட்சியம்
திருவொற்றியூர், ஆக.9:திருவொற்றியூரில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த நித்யா (26) என்ற பெண் மற்றொரு தம்பதியிடம் ரூ.85,000-க்கு விற்பனை செய்துள்ளதும், ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் குழந்தையைத் திரும்பப் பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குழந்தை மீட்கப்பட்டு நித்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்த விபரம் வருமாறு:
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (30). இவரது மனைவி நித்யா (26). தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களுக்கு கடந்த 2010 ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஜெயசூர்யா (5) என்ற ஆண்குழந்தை உள்ளது. கட்டட தொழிலாளியான ஜெயராமன் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கித் திருப்பித் தராததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயராமன் சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டாராம். இந்நிலையி்ல் நிறைமாதமாக கற்பிணியாக இருந்த நித்யா கடந்த கடந்த ஜூலை 10-ம் தேதி திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த நாள் நித்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் பிரசவத்திற்கான கட்டணம் ரூ.35 ஆயிரத்தை செலுத்தும்படி மருத்துவமனை ஊழியர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் நித்யா கணவர் காணாமல் போய்விட்ட நிலையில் மருத்துவமனைக் கட்டணம் செலுத்த தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து இங்கு பணியாற்றும் மகப்பேறு மருத்துவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்த பம்மலைச் சேர்ந்த சுரேஷ்குமார், லதா தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்துவிவிட்டு, இதற்காக பிரசவச் செலவு ரூ.35 ஆயிரத்தைக் கழித்துக் கொண்டு ரூ.50 ஆயிரம் ரொக்கமாக நித்யா பெற்றுள்ளார்.
இந்நிலையில் காணாமல் போயிருந்த நித்யாவின் கணவன் ஜெயராமன் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவியிடம் குழந்தை குறித்து கேட்டபோது குழந்தையை விற்றுவிட்டதாக நித்யா கூறியுள்ளார். இதற்கிடையே
குழந்தையைத் திருப்பித்தருமாறு மருத்துமனை நிர்வாகம் மூலம் நித்யாவும், ஜெயராமனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு மருத்துமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து குழந்தையை மீட்டுத் தருமாறு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நித்யா புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக பம்மல் சென்று குழந்தையை மீட்டு வெள்ளிக்கிழமை இரவு நித்யாவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரவணன், மகப்பேறு நிபுணர் டாக்டர் செல்வி மகாலட்சுமி, குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய சுரேஷ்குமார், லதாவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment