அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் ஒருங்கிணைத்த பொன்விழா
கடந்த சுமார் 5 ஆண்டுகளாக பொதுவாக மத்திய அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வது அபூர்வமாக இருந்து வந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட கலந்து கொள்ள மாட்டார்கள். அழைப்பிதழ்களில் பெயர் மட்டும் அச்சிடப்பட்டிருக்கும். சனிக்கிழமை நடைபெற்ற சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பொன்விழா மத்திய அரசு சார்பில் நடைபெற்ற விழா. இதில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், வடசென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர். இதுமட்டுமல்லாது, ஒவ்வொருவர் பேசும்போதும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களையும் மறக்காமல் விழித்துப் பேசியது வந்திருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. விழாவிற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment