சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பொன்விழா நிகழ்ச்சி
தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்
திருவொற்றியூர், ஜூலை 23:தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இதற்கான பொன்விழா நிகழ்ச்சி சனிக்கிழமை ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலையின் மேலாண்மை கவுதம் ராய் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விழாவிற்கு தலைமை வகித்தார். அப்போது பொன்விழா நினைவுத் தூண்,
மைல்கற்கள் விபரங்கள் அடங்கிய தகவல் பலகை உள்ளிட்டவைகள் அமைச்சர் தர்மேந்திரபிரதான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது,
1965-ம் ஆண்டு இந்த ஆலை தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு 2.5 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறனைக் கொண்டிருந்தது. இது படிப்படியாக வளர்ந்து தற்போது
11.5 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிக்கும் திறனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை எட்டுவதற்கா பங்கு வகித்த அனைத்து தரப்பினரையும் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கான நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளன. இதனால்தான் தமிழகம் துறைமுகங்கள், வாகன உற்பத்தி தொழில்கள், கணிணி மென்பொருள் துறைகளில் அபரிதமாக வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் ஹஜிரா பகுதியைப் போல் சென்னையின் அருகே அமைந்துள்ள மணலி வளர்ந்து வருகிறது.
ஐ.ஓ.சி.யுடன் சி.பி.சி.எல் இணைப்பு:
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆலை கடந்த ஆண்டு லாபத்தை நோக்கிச்
செல்ல ஆரம்பித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 230 மில்லியன் மெட்ரிக் டன்
பெட்ரோலிய பொருள்களை உபயோகித்து வருகிறோம். இது அடுத்த 25 ஆண்டுகளில் 600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும். எனவே தற்போது 50 ஆண்டுகளை நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஆலையின் அடுத்த 50 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்களை அதிகாரிகள் கண்டறிய வேண்டும். இந்தியன் ஆயில் கார்போரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமானச் செயல்பட்டு வரும் இந்த ஆலையை தாய் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவிற்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது. இனி இந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும். இதன் மூலம் உற்பத்தியையும், விற்பனையையும் ஒரே நிறுவனமே மேற்கொள்ள முடியும்.
மாநில அரசின் இணக்கம் தேவை:
ஒட்டுமொத்த இந்தியாவும் வளர வேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சியின் பயன் ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன்தான் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மாநில அரசுகள் ஒரு படி இறங்கி வந்தால் மத்திய அரசு இரண்டு படி இறங்கிவரத் தயாராக உள்ளது. தமிழகத்தி்ல் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசின் இணக்கமான உறவு தேவை. எனவே இணைந்து செயல்பட்டால் தமிழகத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்றார் தர்மேந்திர பிரதான்.
இந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஐ.ஓ.சி நிறுவனத் தலைவர் பி. அசோக், மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் பி.வேணுகோபால், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment