கார் ஏற்றுமதியில் சாதனையை எட்டிய ஹூண்டாய் நிறுவனம்
வாடகை கட்டணத்தில் ரூ.20 கோடியைத் திருப்பியளித்தது சென்னைத் துறைமுகம்
திருவொற்றியூர், ஜூலை 27:சென்னைத் துறைமுகம் வழியாக கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து கார் ஏற்றுமதி செய்து சாதனை அளவினை எட்டியதையடுத்து கப்பல்த்தள வாடகை கட்டணத்தில் (Wharfage Charges) ரூ.19.70 கோடியை துறைமுக நிர்வாகம் புதன்கிழமை திருப்பியளித்தது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் வாகன தயாரிப்பு நிறுவனம் தனது ஆலையில் தயாரிக்கப்படும் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு வசதியாக கார்களை நிறுத்தி வைக்க கப்பல் தளத்தில் போதுமான இடம் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறைமுக நிர்வாகமும், ஹூண்டாய் வாகன நிறுவனமும் கடந்த 2006-ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதனையடுத்து இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில்
சுமார் 20 லட்சம் கார்களை சென்னைத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சாதனை அளவினை ஹூண்டாய் நிறுவனம் எட்டியதை அடுத்து இந்நிறுவனம் செலுத்திய கப்பல்த் தள வாடகை கட்டணம் ரூ.165 கோடியில் ரூ.19.70 கோடியை சென்னைத் துறைமுகம் புதன்கிழமை திருப்பி அளித்தது.
இதற்கான காசோலையை புதன்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ் ஹூண்டாய் வாகன நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஓ.கே.கூ-விடம் வழங்கினார்.
போட்டிகளைச் சமாளிப்போம்:
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் சிரில் ஜார்ஜ் கூறியது,
கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் சென்னைத் துறைமுகத்தின் வழியாகவே தொடர்ந்து கார்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கார்களை ஏற்றுமதி செய்வதில் நாட்டிலேயே சென்னைத் துறைமுகம் முன்னணி துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. எனவே கார் ஏற்றுமதிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பல்லடுக்கு கார் நிறுத்த முனையம் தற்போதைய நிலையில் அவசியமற்றதாக உள்ளது. எனவே இதனை உடனடியாக செயல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை.
தற்போது சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியில் கரை அமைக்கப்பட்டு தரைப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் காலியாக உள்ளது. மேலும் ஏற்றுமதியாகும் சரக்குகளை இருப்பு வைக்க போதுமான கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரவாயல் துறைமுக உயர்மட்ட மேம்பாலத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மொத்தத்தில் அனைத்து விதமான போட்டிகளையும் சந்திக்க சென்னைத் துறைமுகம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது என்றார் சிரில் ஜார்ஜ்.
நிகழ்ச்சியில் துறைமுக போக்குவரத்து மேலாளர் பி.விமல், முதுநிலை போக்குவரத்து மேலாளர் பிரபாகரன், ஹூண்டாய் வாகன நிறுவன முதுநிலை பொது மேலாளர் வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெட்டிச் செய்தி
சென்னையிலிருந்து 92 நாடுகளுக்கு கார் ஏற்றுமதி
நிகழ்ச்சியில் ஹூண்டாய் மேலாண்மை இயக்குனர் ஒய்.கே.கூ கூறியது,
வாகன உற்பத்தியில் ஆசியாவின் மையமாகச் செயல்பட்டு வரும் தமிழகத்திலிருந்து சென்னைத் துறைமுகம் வழியாக சுமார் 92 நாடுகளுக்கு கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்றுமதிகான கார்களை பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக துறைமுகத்திற்கு எடு்ததுவர சிறப்பு அனுமதியை போக்குவரத்து காவல்த்துறை அளித்துள்ளது. எதிர்காலத்திலும் சென்னைத் துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதியைத் தொடர விரும்புகிறோம்.
No comments:
Post a Comment