Sunday, 28 August 2016

மணலி கவுன்சிலர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

கொலைக்கு காரணம் ஒப்பந்தத் தகராறுதான்?

திருவொற்றியூர்,ஜூலை 28:மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தில்லை பாஸ்கர் (43) மற்றும் விஜய்ஆனந்த் (29), குதிரை வெங்கடேஷ் (37), ரபீக் (36), சுரேஷ் (32) ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
    மணலியைச் சேர்ந்த மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலரான ஞானசேகரன் கடந்த ஜூலை 9 அன்று மணலியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  
    இதனையடுத்து இதுவரை ஜெபகுமார், ராஜேஸ், ராஜீவ் பகதூர், பிரபு, குமாரவேல், முத்துராஜ் ஆகிய 6 பேரையும் முதன்முதலாக கைது செய்தனர். பின்னர்  மதுரை சுரேஷ், காஜா சுரேஷ், கார்த்திக், கணேஷ்குமார் ஆகிய நான்கு பேரும் கடந்த ஜூலை 20-ல் கைது செய்தனர். இந்நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான மணலியைச் சேர்ந்த தில்லை பாஸ்கர் (43), மணலி பெரிய தோப்பைச் சேர்ந்த விஜய்ஆனந்த் (29), மணலியைச் சேர்ந்த குதிரை வெங்கடேஷ் (37), ரபீக் (36), மதுரையைச் சேர்ந்த சுரேஷ் (32) ஆகிய ஐந்து பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருவொற்றியூர் குற்றவியல் நடுமன்ற நீதிபதி முன்பு புதன்கிழமை இரவு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலையின் பின்னணி என்ன?
      மணலியின் முக்கிய பிரமுகரான ஞானசேகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான முக்கிய காரணத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாடுவதில் கொலை செய்யப்பட்ட ஞானசேகர் மகனுடன் ஏற்பட்ட முன் விரோதமே இக்கொலைக்குக் காரணம் என கூறப்பட்ட நிலையில் இறுதியில் ஞானசேகர் கொலைக்கு அரசியல் விரோதங்கள், தொழிற்சாலைகளில் ஒப்பந்தங்கள் எடுப்பது, மாமூல் வாங்குவது உள்ளிட்டவைகளில்  எடுப்பதில் ஏற்பட்ட போட்டியே இதற்கு காரணங்களாக இருந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தில்லை பாஸ்கர் அ.தி.மு.க 18-வது வார்டு செயலாளராக இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவர் என்பதும், மற்றொரு குற்றவாளியான விஜய் ஆனந்த் இந்திய ஜனநாயகக் கட்சியின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment