Thursday, 13 October 2016



3 மாத சம்பள பாக்கியை கேட்ட வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பு

திக்கற்ற நிலையில் காவல் நிலையத்தில் தஞ்சம் 

திருவொற்றியூர்,செப்.3:திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த வடமாநிலத் தொழிலாளர்களின் 3 மாத சம்பளப் பாக்கியைத் கேட்டதற்காக விரட்டியடிக்கப்பட்டதையடுத்து காவல் நிலையத்தில் தஞ்சம்
புகுந்தனர்.
   திருவொற்றியூரில் கொதிகலன்கள் தயாரிக்கும் கே.சி.பி.லிமிடெட் என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு திருச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஒப்பந்தப் பணிகளை எடுத்து வேலை செய்து வருகிறார். இதற்கான பணிகளில் உத்தரபிரதேஷ், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த  50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகின்றனர்.
ரூ.4 லட்சம் சம்பளப்பாக்கி:
     இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் சம்பளத்தொகை சுமார் ரூ.4 லட்சம்வரை பாக்கி இருப்பதாகக்  எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஒப்பந்ததாரர் மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் சம்பளத்தைப் பெறமுடியவில்லையாம்.  இந்நிலையில் இவர்கள் அனைவரும் தொழிற்சாலையிலிருந்து சில தினங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மூன்று நாள்களாகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி காவல் நிலைய வளாகத்திலேயே இவர்கள் தங்கியிருக்கினறனர்.
தொழிலாளர் நலத்துறையில்தான் முறையிட வேண்டும்: காவல் ஆய்வாளர்
இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் கூறியது,
     தொழிலாளர்கள் அளித்த புகாரையடுத்து ஆலை நிர்வாகம், ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை நடத்தினோம். இதில் ஒப்பந்த பணிகளை நிறைவு செய்வதில் ஒப்பந்ததாரருக்கும், ஆலை நிர்வாகத்திற்கும் இடையே தகராறு உள்ளது. இதனால் ஆலை நிர்வாகம் சார்பில் பில் தொகை பட்டுவாடா செய்யப்படவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கான ஈட்டுறுதியையும் ஒப்பந்ததாரர் செலுத்தியிருக்கவில்லை. இது போன்ற பிரச்னைகளால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. இதில் போலீஸார் தலையிட்ட பின்பும் பிரச்னைக்குத் தீர்வு காண இயலவில்லை.  இதில் தொழிலாளர் நல ஆணையகரத்தைத் தான் தொழிலாளர்கள் அணுகியிருக்க வேண்டும். இதனைவிடுத்து காவல் நிலையத்தில் 
தங்கியிருப்பதால் பயன் ஏதும் இல்லை என்றார் பிரகாஷ்.
கொத்தடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்கள்: 
இது குறித்து சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த திருவொற்றியூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.ஜெயராமன் கூறியது. 
    திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கனரக, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் பீகார், உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு முன் தொகை கொடுத்து அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள் 
முறையான கூலியை வழங்குவதில்லை. மேலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகின்றனர். ஊருக்குப் போகும்தான் பெரும்பாலும் கூலி வழங்கப்படுகிறது. ஈட்டுறுதி, சேமநலநிதி ஏதும் செலுத்துவதுமில்லை. மொத்தத்தில் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை 
அதிகாரிகள் வழக்கம்போல் பாராமுகமாகவே இருக்கின்றனர். இது குறித்து இதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் போதிய நடவடிக்கை இல்லை.  மேலும் இதில் மின்வாரியம், காமராஜர் துறைமுகம், தேசிய அனல் மின்னுற்பத்திக் கழகம்  உள்ளிட்ட அரசுத் துறைகளின் இத்தகைய கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து
வருவது வேதனையலிக்கிறது என்றார் ஜெயராமன் 
      வேலை பார்ப்பவனுக்கு கூலியைத் தவிர ஏதும் தெரியாது. சட்டங்களை அறிந்து கொள்ளும் கல்வியறிவும் இவர்களுக்கு இல்லை. இந்தி மட்டுமே தெரிந்த இந்த அப்பாவி தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவார்களா? பொருத்திருப்போம்....

No comments:

Post a Comment