ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்
திருவொற்றியூர், செப்.28:ஆன்லைன் வர்த்தகத்தால் சிறுவணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
திருவொற்றியூர் பொதுவர்த்தகர் சங்க 43-வது பொதுக்குழு மற்றும் ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சி்க்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். இதில் வியாபாரம் செய்வதில் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்த இருபதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாராட்டப்பட்டனர். மேலும் இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் மூன்று இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பூடான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற, திருவொற்றியூரைச் சேர்ந்த என்.ஷெசன் ராமசாமியைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
அப்போது த.வெள்ளையன் பேசியது,
43 ஆண்டுகள் சங்கத்தை ஒற்றுமையாக நடத்திய அனைத்து நிர்வாகிகளும் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போது சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் வர்த்தகத்தால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் தற்போதைக்கு தங்களை ஒன்று அவ்வளவாகப் பாதிக்காது என நாம் இருக்கக் கூடாது. வெளிநாட்டுப் பொருள்களை இந்தியாவில் விற்பதை எதிர்த்து அமைதி வழியில் போராடிய காந்தியடிகள் பின்னர் அவற்றை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தினார். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பொருள்களை மொத்தமாக வழங்கும் உற்பத்தியாளர்களின் பொருள்களை சில்லரை வியாபாரிகள் புறக்கணிக்க வேண்டும். சுதந்திர நாட்டில் வணிகர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வாதரத்துடன் வாழ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் வெள்ளையன்.
இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் வி.ராமசாமி, பொதுச் செயலாளர் ஏ.முருகேசன், சங்க நிர்வாகிகள் கனி, நளராஜன், எம்.காமாட்சி, எ்ஸ்.ராமசாமி, மணலி வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment