இணைக்கப்பட்ட பகுதிகளைப் புறக்கணிக்கும் மெட்ரோ வாட்டர்
7 கோட்டங்களில் கழிவு நீரை அகற்ற 2 தனியார் லாரிகளே உள்ளன
கட்டணம் செலுத்தியும் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம்
திருவொற்றியூர், பிப்.28:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் மண்டலத்தில் பாதாளச் சாக்கடை வசதி இல்லாத 7 கோட்டங்களில் கழிவுநீரை அகற்ற 2 தனியார் ஒப்பந்த லாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் (1-வது) மண்டலத்தில் உள்ள 14 கோட்டங்களில் கத்திவாக்கத்தில் 2 கோட்டங்கள், திருவொற்றியூரில் 5 கோட்டங்கள் என 7 கோட்டங்களில் பாதாளச் சாக்கடை வசதிகள் கிடையாது. இப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சிகளாக இருந்தபோது கழிவு நீரை அகற்ற கத்திவாக்கத்தில் ஒரு லாரியும், திருவொற்றியூரில் 2 லாரிகள் மட்டுமே இருந்தன. பாதாளச் சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் இலவசமாகவே கழிவு நீர் அகற்றப்பட்டன.
கழிவுநீரை அகற்ற கட்டணம்: :
இப்பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதையடுத்து கழிவுநீர் அகற்றும் பணி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியத்துக்கு (மெட்ரோ வாட்டர்) மாற்றம் செய்யப்பட்டன. இதனால் கூடுதலாக லாரிகள் வரும், தேக்கநிலை நீங்கும், வசதிகள் பெருகும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை ம் ஒரு லாரி கூட கூடுதலாக இப்பகுதிக்கு ஒதுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, டிச.10, 2013 முதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது. ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்ற லாரி அனுப்ப வேண்டுமெனில் வீட்டின் உரிமையாளரோ அல்லது வாடகைதாரரோ பகுதி அலுவலகத்துக்கு நேரில் வந்து ரூ.200 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
50 ஆயிரம் வீடுகளுக்கு இரண்டே லாரிகள்:
இப்பகுதிகள் நகராட்சியாக இருந்தபோது பயன்பாட்டில் இருந்த 4 லாரிகளையே தொடர்ந்து வாரியம் பயன்படுத்தி வந்தது. இதில் 2 லாரிகள் முற்றிலும் பழுதடைந்து உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீதம் உள்ள 2 லாரிகளும் தற்போது
தகுதிச் சான்றிதழைப் பெற புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2 லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் கழிவு நீரை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் பாதாளச் சாக்கடை வசதி இல்லாத நிலையில் 2 லாரிகள் போதுமானதாக இல்லை. இதனால் கழிவு நீரை அகற்றுவதில் பல மாதங்களாக தேக்கநிலை இருந்து வருகிறது. இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தங்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
பாராமுகத்தில் இணைக்கப்பட்ட பகுதிகள்:
இது குறித்து நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகியான கே.சுப்பிரமணி கூறியது,
திருவொற்றியூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் சாலைகள், தெருவிளக்குகள், குப்பைகள் அகற்றல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் ஓரளவு மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மெட்ரோ வாட்டர் நிறுவனம் இப்பகுதியின் வளர்ச்சியில் தொடர்ந்து பாராமுகமாகவே இருந்து வருகிறது.
நகராட்சியில் ஊழியர்களாக இருந்தவர்களை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில்
முறைப்படி சேர்க்கவே ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்தது. கழிவுநீரை அகற்ற ரூ.200 கட்டணம் செலுத்தியும் மாதக்கணக்கில் காத்திரும் அவலம் நீடிக்கிறது. பல இடங்களில் வீடுகளில் உள்ள தொட்டிகளிலிருந்து கழிவு நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. சமீபத்திய மழையில் திருவொற்றியூர் மேற்கு பகுதியே கழிவுநீரில் மிதந்தது. மேலும் குடிநீர் கட்டணமும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாரபட்சமாக வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் வாரியத்தின் பல்வேறு நடைமுறைகளைக் கூறுகின்றனர்.
முன்பு மெட்ரோ வாட்டர் நிறுவனம் சென்னை மாநகரில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் இதெற்கென புதிய விதிமுறைகளை ஏற்படுத்துவதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்படவில்லை. எனவே இதுகுறித்தி விரிவான ஆலோசனைக்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும். திருவொற்றியூர் மண்டலத்திற்கு கூடுதல் லாரிகளை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையெனில் கழிவு நீரை அகற்றுவதில் தனியார் லாரிகளின் கட்டண வசூலை பொதுமக்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார் சுப்பிரமணி.
வாரிய ஊழியர்கள் ஒப்புதல்:
இப்பிரச்னை குறித்து பகுதி வாரிய கீழ்நிலை ஊழியர்கள் கூறியது,
2 லாரிகள் பழுதடைந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது உண்மைதான். வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப லாரிகள் போதுமானதாக இல்லை. இது குறித்து பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உயர் அதிகாரிகளிடம் போதிய பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் பழைய விதிமுறைகளையே வாரிய உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து 9 ஆண்டுகளாக திருவொற்றியூர் பாதாளச்சாக்கடைத் திட்டம் நடைபெற்று வருகிறது. இதனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதிலும் மெத்தனம் இருந்து வருகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில் மெட்ரோ வாட்டர் நிறுவனப் பணிகள் பொதுமக்களுக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. கழிவுநீரை அகற்ற தனியார் லாரிகள் நம்பியிருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தனியார் லாரிகள் அகற்றும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பக்கிங்காம் கால்வாய், கடற்கரை பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இது குறித்து உயர்அதிகாரிகள் எவ்வித
நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றனர் ஊழியர்கள்.
கல்வி, சுகாதாரம், சாலை வசதிகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பது மட்டுமல்ல, கட்டாயமும், அவசியமும்கூட என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment