கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பல் மற்றும் அதிவேகப் படகுகள்
சென்னையிலிருந்து அந்தமானுக்கு இடமாற்றம்
திருவொற்றியூர்,மார்ச் 25:சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத்தில் பணியாற்றிய ராஜ்கமல் என்ற ரோந்துக் கப்பல், 6 இடைமறிக்கும் அதிவேகப் படகுகள் (Interceptor Boats) அந்தமான், நிகோபர் பிராந்தியத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான வழியனுப்பும் விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ரோந்துக் கப்பல் மற்றும் படகுகள் வரிசையாக அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி தல்கா, இக்கப்பல்களில் இருந்த வீரர்கள், பொறுப்பு அதிகாரிகளுக்கு கைகுழுக்கினார். பின்னர் பாண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு கப்பல், படகுகள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டுச் சென்றனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு பிராந்திய டி.ஐ.ஜி. தல்கா செய்தியாளர்களிடம் கூறியது,
நாடு முழுவதும் கடலோரக் காவல்படையை வலுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்தியாவின் கிழக்கு பிராந்திய நாடுகளிலிருந்து அந்தமான், நிகோபர் பகுதியை அனைத்து வகை சட்ட விரோத செயல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி பாதுகாப்பு அமைச்சக உத்தரவின்பேரில் கிழக்கு பிராந்தியத்திலிருந்து ராஜ்கமல் என்ற ரோந்துக் கப்பல் மற்றும் 6 இடைமறிக்கும் அதிவேகப் படகுகள் உள்ளிட்டவைகள் இதில் தற்போது பணியாற்றும் வீரர்களுடன் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்கப்பலுக்குப் பதிலாக ஆர்ன்வேஷ் என்ற ரோந்துக் கப்பல் கிழக்குப் பிராந்தியத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. தற்போது கடலோரக் காவல்படையில் தற்போது சுமார் 120 ரோந்துக் கப்பல்கள் உள்ளன. மேலும் தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் 20 புதிய கப்பல்கள் விரைவில் காவல் படையில் இணைக்கப்பட உள்ளன. எனவே மேலும் புதிய கப்பல்கள் கிழக்குப் பிராந்தியத்திற்கு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். இந்திய கடலோரக் காவல்படை இருபத்தி நான்கு மணி நேரமும் தீவிரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது என்றார் தல்கா.
நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment