மனித எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம் கண்டெடுப்பு
கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா தகவல்
திருவொற்றியூர், ஜூலை 14:விமானத்தின் முக்கிய பாகங்கள், மனித எலும்புத் துண்டுகள் கண்டறிந்து மீட்கப்பட்டதையடுத்து மாயமான விமானம் தேடும் பணி உடனடியாக நிறுத்திக் கொள்வதாக கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் எஸ்.பி. சர்மா கூறியது,
இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து விமானமான டோர்னியர் 791 கடந்த ஜூன் 8-ல் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து தேடும் பணி ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த 36 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் கடற்படை கப்பல்கள் சந்தயாக், சிந்துத்வாஜ், தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் சாகர்நிதி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கேன்யன் உள்ளிட்ட கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் கடற்கரை பகுதியிலிருந்து கிழக்கே சுமார் 28 கி.மீ.
விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. தொடக்கத்தில் காணாமல் போன விமானத்திலிருந்து சமிஞ்சை
கிடைத்தாலும் சுமார் ஒரு மாதம்வரை எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை.
எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம் மீட்பு:
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 990 மீட்டர் ஆழத்தில் கிடந்த விமானத்தின் கருப்புப் பெட்டி (Flight Data Recorder), விமானி குரல் பதிவு பெட்டி (Cockpit Voice Recorder) உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இதே பகுதியில் விமானத்தின் இயந்திரங்கள், இறக்கை உள்ளிட்ட முக்கிய பாகங்கள் திங்கள்கிழமை காலையில் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இதே பகுதியில் சிதறிக்கிடந்த விமானத்தின் பல்வேறு சிதைந்த பாகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இப்பாகங்களுடன் சிக்கிய மனித எலும்புத் துண்டுகள், கைக்கடிகாரம், சோனி கேமரா, விமானியின் கவச உடை உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இவையனைத்தும் ஒலிம்பிக் கேன்யான் கப்பலில் ஏற்றி சென்னைத் துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.
எலும்புகளை மரபணு சோதனைக்கு உட்படுத்த முடிவு:
மீட்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மீனம்பாக்க்தில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையி்ல் மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி இருப்பது மீ்ட்கப்பட்ட சிதைந்த பாகங்களிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட எலும்புத் துண்டுகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
விமானத்தில் பயனித்த மூன்று பேரின் பெற்றோர், உறவினர்கள் மூலம் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மீட்கப்பட்ட எலும்பின் மரபணுவுடன் ஒப்பீடு செய்யப்படும்.
இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில்தான் விமானத்தில் பயனித்தவர்கள் இறந்து போனார்களா? இல்லையா? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.
அதுவரை எங்களைப் பொருத்தவரை மூன்று காணாமல் போனவர்களாகவே கருத முடியும்.
தேடும் பணி முடிவுற்றது:
விமானத்தை தேடும் பணி கடந்த 36 நாள்களாக அதிநவீன அறிவியல் தொழில்நுட்ப உதவிகளுடன், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முழுமையான ஈடுபாட்டோடு நடைபெற்று வந்தது. தற்போது மாயமான விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பது மீட்கப்பட்ட பாகங்களைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்ட இடம் 990 மீட்டர் ஆழத்தில் 140 பி.எஸ்.ஐ (PSI-Per Square Inch to kg/cm2) கடல் அழுத்தம் உள்ளது. இது ஒரு எலி மீது யானை ஏறி இருந்தால் எவ்வளவு அழுத்தம் இருக்குமோ அதனைப் போன்றது. இவ்வளவு அழுத்தம் நிறைந்த பகுதியில் ஆழத்தில் மனிதர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. தேடும் பணியைத் தொடர்வதால் எவ்வித கூடுதல் பயன்களும் ஏற்படப் போவதில்லை என்பதால் செவ்வாய்க்கிழமையுடன் தேடும் பணி முடித்துக் கொள்ளப்படுகிறது. இதில் ஈடுபட்ட வந்த கப்பல்கள் அனைத்தும் அதனதன் இருப்பிடங்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டன.
இனி விமான விபத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து விசராணை அறிக்கையை அளிக்கும் என்றார் எஸ்.பி.சர்மா.
No comments:
Post a Comment