காணாமல் போன சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக மீட்பு
பொதுமக்கள் சாலை மறியல்
திருவொற்றியூர்,பிப்.19:திருவொ ற்றியூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரித்திகா (3) என்ற சிறுமி சனிக்கிழமை காணாமல் போன நிலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இறந்து போன நிலையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
திருவொற்றியூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பழனி, மீனவர். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகள் ரித்திகா. மூன்று வயது சிறுமியான ரித்திகா காணாமல் போய்விட்டதாக சனிக்கிழமை எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இறந்து போன சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. கருணாகரன் என்பவர் லாரியில் எடுத்து வந்த குப்பையைப் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோதுதான் சிறுமியின் சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்தக் குப்பை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பிலிருந்து சேகரித்து கொண்டு வரப்பட்டது என தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீஸார் குப்பைக் கிடங்கில் கிடந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இச்சடலம் சனிக்கிழமை காணாமல் போன ரித்திகாவின் சடலம்தான் என்பது தெரியவந்தது. பின்னர் ரித்திகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காணாமல் போன ரித்திகா கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்த சுனாமி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இரு நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கொலையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை எழுப்பினர். சாலை மறியலால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, எண்ணூர் விரைவு சாலைகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாரின் உறுதியையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
இந்நிலையில் ரித்திகா கொலைச் சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment