எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தொடரும் குழப்பங்கள்
திருவொற்றியூர், பிப்.2:விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறி சென்னை எர்ணாவூர் கடற்கரை அருகே படிந்துள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் போதிய திட்டமிடல், எண்ணெய் படலத்தின் அளவீடு உள்ளிட்டவைகளில் உரிய துறைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது தற்போது வெளிப்படையாகியுள்ளது.
எண்ணெய் படலத்தின் அளவை மதிப்பிடுவதில் தோல்வி:
கப்பல்கள் விபத்துக்குள்ளான தகவல் சனிக்கிழமை காலை பரவியது. இதனையடுத்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், லேசான விபத்துதான், மேலும் மாசு ஏற்படுத்தும் வகையில் எவ்வித எண்ணெய்க் கசிவும் இல்லை, இரு கப்பல்களும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையே பெரிய அளவிலான எண்ணெய் படலம் எர்ணாவூர் கடற்கரையை வந்ததடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் தன்னிச்சையாக எண்ணெய் படலத்தை உரிஞ்சி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அது சாத்தியாக இருக்கவில்லை. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவர்களை மிரட்டியதையடுத்து பின்னர் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்பு, கழிவு நீர் அகற்றல் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஆளுக்கொரு
யோசனையைச் சொன்னாலும், இறுதியில் ஆள்கள் மூலம் அகற்றுதல் என்ற பழமையான முறையே செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கு காரணம்
சுமார் 4 டன் அளவிற்கே எண்ணெய் படலம் இருக்கும் என மதிப்பிடப்பட்டதுதான் இதில் ஏற்பட்ட முதல் தோல்வி. புதன்கிழமைவரை அகற்றப்பட்ட எண்ணெய் படலத்தின் அளவு சுமார் 100 டன்னைத் தாண்டிவிட்ட நிலையில் இன்னும் 100 டன் எண்ணெய்
அகற்றப்பட வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடுதலில் குழப்பம் நீடிக்கிறது:
இதன் மூலம் பிரச்னையின் மீதான அதிகாரிகளின் மதிப்பீடு மலைக்கும், மடுவுக்கும் இடையேயான இடைவெளியாகவே உள்ளது. இப்பணி யார் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது? ஒருங்கிணைப்பது யார்? விளக்கமான திட்ட அறிக்கை ஏதும் உள்ளதா? என்றால் எந்தக் கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு கூட்டமாகப் பணி செய்ய வேண்டிய அவசரம் என்ன? இதனால் பாறாங்கற்களால் ஆன கடலறிப்பு தடுப்புச் சுவர் முழுதும் எண்ணெய் படலதால் தார் பூசப்பட்டுவிட்டது. இப்பணி நிறைவுற்ற பிறகு இத்தடுப்புச் சுவரைப் பயன்படுத்துவோர்கள் வழுக்கி விழும் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என்பது குறித்து எந்த அதிகாரிக்கும் கவலை இல்லை. எனவே முழுமையான மதிப்பீடு, திட்டமிடல் ஏதும் இல்லாமல் திசை போன போக்கில் இப்பணி நடைபெறுகிறது. இது எதிர்காலத்தில் அனுபவப் பாடமாக போய்விடுமோ என்ற கேள்வியும் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கடலோரக் காவல் படையே பொறுப்பு:
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இ.சுந்தரவல்லி கூறியது,
எண்ணெய் கசிவு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய அனுபவம் இல்லை. கடலோரக் காவல்படைதான் இதனைச் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான தொழில் நுட்பத்தால் எண்ணெய் படலத்தை அகற்ற முடியவில்லை. பிறகு ஆள்கள் மூலம் அகற்றலாம் என அவர்கள் முடிவெடுத்துக் கூறியதன் பேரில்தான் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. எங்களது உயர் அதிகாரிகள் அனைத்துப் பணிகளையும் கண்காணித்து வருகின்றனர். தடுப்புச் சுவர் முழுவதும் எண்ணெய் படலம் சிதறிக் கிடப்பது குறித்து
இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்த கடலோரக் காவல்படையினர்தான் பதிலளிக்க வேண்டும் என்றார் சுந்தரவல்லி.
கடலில் பணியாற்றுவது மட்டுமே எங்கள் கடமை:
இது குறித்து கடலோரக் காவல் படை அதிகாரி அலோக் சர்மா கூறியது,
விபத்து என்றவுடன் எங்களது ரோந்துக் கப்பல் உடனடியாக அங்கு சென்றது. பிறகு எண்ணெய்க் கசிவு குறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாகப் பணியில் ஈடுபட்டோம். ஆனால் அதற்குள் எண்ணெய் படலம் கரைக்கு வந்துவிட்டது. கடலில் மட்டுமே எண்ணெய் கசிவை அகற்றி அனுபவம் பெற்றுள்ளோம். ஏனெனில் இதற்கான வசதிகள் எங்களது கப்பல்களில் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக கரைப் பகுதியில் இது போன்ற பகுதிகளில் ஈடுபடுவது எங்களது கடமைகளில் ஒன்றாக குறிப்பிடப்படவில்லை. மாநில எல்லையின் அதிகார வரம்பிற்குள் வந்துவிட்ட பிறகு இதற்கான பணிகளை மாநில அரசுதான் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் எங்களது ஒத்துழைப்பைத் தொடர்ந்து அளித்து வருகிறோம் என்றார் அலோக்.
சாதாரணமான விபத்தாகக் கூறப்பட்ட இப்பிரச்னை எதிர்காலத்தில் ஏற்படப் போகும் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான படிப்பினைகளை அனைவருக்கும் வலியுறுத்துகிறது என்பதுதான் உண்மை. கடந்த நான்கு நாள்களில், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதைவிட விரைவாகப் பணிகளை முடித்துவிட்டு இதிலிருந்து வெளியேறுவதில்தான் அக்கரையாக உள்ளனர் என்கின்றனர் இப்பிரச்னையக் கூர்ந்து கவனிக்கும் சமூக ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment