உணவு பொருட்கள் முறையாக வழங்காததைக் கண்டித்து
ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்
திருவொற்றியூர், பிப்.15: திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் ரேஷன் கடையில் உணவு பொருட்களை முறையாக விநியோகம் செய்யாததைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி செயலாளர் எஸ்.பாக்கியம் கூறியது,
இங்குள்ள கடையில் கடந்த இரண்டு மாதங்களாக பாமாயில் வழங்கப்படவில்லை. மொத்தத்தில் துவரம்பருப்பு 300 கிலோ ஒருமாதத்தில் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான நாட்களில் அனைத்து பொருட்களும் காலியாகிவிட்டன என்றே கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியெனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு
ஒதுக்கீடு செய்யப்படும் பொருள்கள் எங்கே என்பதில் ஐயம் உள்ளது. இதனைக் கண்டித்தே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் பாக்கியம்.
இதனையடுத்து உணவு பொருள் வழங்கல் துறை திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் நேரில் வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு வாரத்திற்குள் நிலுவையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர்.

No comments:
Post a Comment