Wednesday, 1 February 2017

விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு படலம்

அகற்றும் பணி தொடங்கியது


திருவொற்றியூர், ஜன.29:எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே இரண்டு சரக்குப் கப்பல்கள் சனிக்கிழமை மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய் படலமாக எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கரை ஒதுங்கியது. இதனால் இப்பகுதியில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக 
கூறப்படுகிறது. 
   எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில்  எம்.டி.பிடபுள்யூ  மாப்பிள் என்ற கப்பல் சமையல் எரிவாயு ஏற்றிக் கொண்டு விசாகபட்டனம் நோக்கி புறப்பட்டது. அதேபோல் டீசல், வாகன ஆயில் ஆகியவற்றை  ஏற்றிய எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மும்பைத் துறைமுகத்திலிருந்து வந்து காமராஜர் துறைமுகத்திற்குள் நுழைவதற்காக வந்து கொண்டிருந்தது. இதன் மீது துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பல் மோதியது. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த துறைமுக அதிகாரிகள், கடலோரக் காவல் படை அதிகாரிகள் விரைந்து வந்து 
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன். இழுவை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு விபத்து முழுவையாகச் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு கப்பல்களும் 
நங்கூரமிடப்பட்டு நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் கசிவு:
   இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரை அருகே கருமை நிறத்தில் எண்ணெய் படலம் கடற்கரை முழுவதும் படர்ந்திருந்தது. மேலும் கடல் நீரில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு படலமாக பரவியிருந்தது. இந்நிலையில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவிருந்த மீனவர்கள் எண்ணெய்ப் படலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து துறைமுக நிர்வாகம், காவல் துறையினருக்கு தகவல் தெரிவி்த்தனர். சில இடங்களில் ஆமைகள் செத்து மிதந்து கொண்டிருந்தன. இது குறித்த விசாரணையில் அது ஏற்கனவே அங்கு கிடந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் இப்பகுதியி்ல் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்துள்ளதாகவும், எண்ணெய்ப் படலத்தை அகற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் கடலோரக் காவல்படையினர் தலைமையில் பல்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
கசிவு ஏற்பட்டது எப்படி?
இது குறித்து காமராஜர் துறைமுக அதிகாரிகள் கூறியது,
  விபத்தில் டான் காஞ்சிபுரம் கப்பல்தான் அதிக சேதமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியிலிருந்து கசிந்த எண்ணெய்தான் படலமாக மாறி கரையில் ஒதுங்கி உள்ளது. 
இது கப்பலை இயக்குவதற்கான எண்ணெய்தான். இக்கப்பலில் ஏற்றி வந்த டீசல் வாகன எண்ணெய் சரகுக்குகள் பத்திரமாக உள்ளன. விபத்தின்போது ஏற்பட்ட கசிவினைத் தவிர எவ்வித எண்ணெய்க் கசிவும் இல்லை. விபத்து குறித்த சேதங்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடைபெற்றது. தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அச்சமடையும் வகையில் எவ்வித பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனர். 

எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படை

இது குறித்து இந்திய கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

விபத்தில் சிக்கிய கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் வருவாய்த்துறை, காமராஜர் துறைமுகம், மீன்வளத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து கடலோரக் காவல்படை 
ஈடுபட்டு வருகிறது. எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடலோரக் காவல்ப் படை சட்ட விதிகளின்படி விபத்துக்குள்ளான கப்பல்களின் மாஸ்டர் மற்றும் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளன. 
விசாரணையின் முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment