Wednesday, 1 February 2017




பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சியப்படுத்தியதே விபத்துக்கு காரணம் 

உண்மையை மூடி மறைக்கும் முயற்சியில் கப்பல்துறை அமைச்சகம்?

திருவொற்றியூர், ஜன.31:எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை இரண்டு சரக்குப் கப்பல்கள் மோதி ஏற்பட்ட விபத்திற்கு கப்பல்கள் வருகை புறப்பாடுகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அலட்சியப்படுத்தியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.


லேசான சேதம்தான் ஏற்பட்டது எனக் கூறப்பட்டு வந்த நிலையி்ல் கப்பலின் அடிப்பகுதியிலேயே பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. 
   எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை எரிவாயு ஏற்றிக் கொண்டு விசாகபட்டனம் நோக்கிச் சென்ற எம்.டி.பிடபுள்யூ  மாப்பிள் என்ற கப்பலும், வாகன எண்ணெய் ஏற்றிக் கொண்டு மும்பையிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் நோக்கி வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் துறைமுகத்தின் நுழைவுக் கால்வாயில் மோதிக் கொண்டன. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு தற்போது எண்ணூர் முதல் பட்டனம்பாக்கம் வரை கடற்கரையை பாலாக்கி சுற்றுச் சூழலுக்கு குந்தகம் விளைவித்துள்ளது. 
பாதுகாப்பு விதிமுறை என்ன?:
    தரைவழியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த சாலை போக்குவரத்து விதிகள் உள்ளது போல் கப்பல்கள் வருகை, புறப்பாடுகளை ஒழுங்குபடுத்த கடல்சார் விதிகள் (Maritime Rules) உள்ளன. இதன்படி இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (VTMS- Vessel Traffic Management System) உள்ளது. இதனை துறைமுகத்தின் சமிஞ்சை துறை (Signal Department) செயல்படுத்தி வருகிறது. கப்பல் துறைமுகத்திற்கு உள்ளே வருவது என்றாலும், வெளியே செல்வது என்றாலும் இத்துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. மேலும் உலகின் ஒவ்வொரு துறைமுக புவி சார்ந்த அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. இது வெளியூர்களிலிருந்து வரும் கப்பல் மாலுமிகளுக்குத் தெரியாது. எனவே ஒவ்வொரு துறைமுகமும் தங்களுக்கென மாலுமிகளை பணியில் அமர்த்தி கப்பல்களை இயக்க வேண்டும். இவர்களுக்கு மட்டுமே கப்பல் கால்வாய், முகத்துவாரம், கப்பல் தளம், காற்றின் வேகம், திசைகள்,  உள்ளூர் விதிமுறைகள் உள்ளிட்டவை அனைத்தும் அறிவார்கள். 
விதிமீறல்களே விபத்துக்கு காரணம்:
   இந்நிலையில் சனிக்கிழமை விபத்து ஏற்பட்ட போது இரண்டு கப்பல்களிலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் உள்ளூர் மாலுமிகள் பணியில் இருந்துள்ளனர். இவர்களுக்கு துறைமுகத்தின் எல்லை, கப்பல் வருகை புறப்பாடு, காற்றின் வேகம், கப்பலின் எடை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதிகாலை 4 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. டான் காஞ்சிபுரம் கப்பலின் நடுப்பகுதியில் நேராகச் சென்று துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பலான மாப்பில் மோதியுள்ளது. குறுக்காக நிற்கும் கப்பல் மீது 'T' வடிவத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. எனவே இரு கப்பல்களும் ஏதோ லேசாக உராய்ந்து சென்றது என்பது உண்மையல்ல.
கப்பலின் சேதத்தைப் பார்க்கும்போது டான் காஞ்சிபுரம் கப்பல் கடலில் மூழ்கி இருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது என்பதே உண்மை. சுமார் 100 டன் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கே திணறுகின்ற நிலையில் இக்கப்பலில் இருந்த சுமார் 32 ஆயிரம் டன் அதிவேக டீசல் எண்ணெயும் கடலில் கொட்டியிருந்தால் உலகமே பதைக்கும்வண்ணம் சென்னை உள்ளிட்ட தமிழக கடற்கரையே சின்னபின்னமாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது. 
அமைச்சகத்தின் அழுத்தமே விதிமீறலுக்குக் காரணம்:
     விபத்து குறித்து துறைமுகங்களின் சமிஞ்சை துறை, மாலுமிகள் சிலரிடம் பேசியபோது இதற்கான காரணங்களை வரிசையாக விவரித்தனர். போட்டிசார்ந்த உலகில் ஒவ்வொரு துறைமுகத்தின் விரைவாகக் கையாளும் திறன் அளவீடாகக் கொள்ளப்படுகிறது. இதில் வணிகம் சார்ந்த காரணிகள் ஏராளமாக உள்ளன. எனவே சர்வதேசத் துறைமுகங்களுக்கு இணையாக இந்திய பெருந்துறைமுகங்களிலும் விரைவாகக் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு இலக்கு, அழுத்தங்களை துறைமுக நிர்வாகங்களுக்கு கப்பல்த்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உதாரணமாக கப்பல்கள் உள்ளே வந்து சரக்குகளை இறக்கி ஏற்றிவிட்டுச் செல்வதற்கு ஆகும் நேரத்திற்கு ஏற்பவே கட்டணம் விதிக்கப்படுகிறது. எனவே குறைந்த நேரத்தில் ஒரு கப்பலைக் கையாண்டால் அது விரும்பத் தகுந்ததாகவே உள்ளது. இந்த விரும்பத் தகுந்த விசயமே விதிமீறல்களுக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது. இந்த விபத்திலும் கப்பல்களை இயக்குவதில் போதுமான கால இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அவசர கோலத்தில் மாலுமிகளும், துறைமுக அதிகாரிகளும் செயல்பட்டுள்ளதே இவ்விபத்திற்கு முக்கிய காரணம் என்பது 
தெளிந்த உண்மையாகியுள்ளது என்றனர் அவர்கள். 
மூடிமறைக்கும் அமைச்சகம்:
   விபத்துக்கான காரணம் இவ்வாறாக இருக்கும் நிலையில் இதனை மறைக்கும் முயற்சியில் கப்பல்த்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் எவ்வித பெரிய சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சேதமான கப்பலின் நிலையைப் பார்க்கும்போது விபத்தில் சேதமான கவிழ்ந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை என்ற நிலையே உள்ளது. காமராஜர் துறைமுகம், கடலோரக் காவல்படை உள்ளிட்டவை தொடர்ந்து வெளியிடும் செய்திக் குறிப்புகளில் கூட விபத்தின் தன்மை சாதாரணமாகவே கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கப்பல்த்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை காமராஜர் துறைமுகத்திற்குச் சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் துறைமுகத்திற்கு வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் காரில் இருந்தவாறே, சிறு விபத்துதான், இதனால் பெரிய பாதிப்பும் ஏதும் இல்லை என பொதுவாகவே கூறிவிட்டுச் சென்றார்.
    இந்தியத் துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தாமல், கையாளும் திறனில் மட்டும் அழுத்தம் தருவது என்பது பாதுகாப்புக்கு குந்தகமாகவே அமையும் என்பதைத்தான் இந்த விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து அமைச்சகம் பாடம் கற்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. 

No comments:

Post a Comment