Saturday, 11 February 2017

எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பு:

இழப்பீடு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடக்கம் 

கப்பல் போக்குவரத்து இயக்குனர் மாலினி சங்கர் தகவல்

திருவொற்றியூர், பிப்.6: விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக இழப்பீட்டு அலுவலகம் (Claims Desk) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது என கப்பல் போக்குவரத்து இயக்குனர் டாக்டர் மாலினி சங்கர் 
சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
    இது குறித்து சென்னைத் துறைமுகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாலினி சங்கர் கப்பல் விபத்து குறித்து அளித்த விளக்கம்:
     எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த பிப்.28-ம் தேதி மாபில், டான் காஞ்சிபுரம் ஆகிய டேங்கர் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக துறைமுக நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் விபத்தில் பலத்த சேதமடைந்த டான் காஞ்சிபுரம் கப்பல் மீட்கப்பட்டு பத்திரமாக காமராஜர் துறைமுகத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இதில் இருந்த 32 ஆயிரம் பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டன. மாபில் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்து துணை கடல்சார் ஆலோசகர் கேப்டன் கே.பி.ஜெயக்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைமுகங்களின் நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதிகபட்சமாக இரு மாதங்களுக்குள் விபத்துகான காரணம், கப்பல்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் 
குறித்து அறிக்கை அளிக்கும். விசாரணை முடியும்வரை கப்பல்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்படாது. மேலும் கடல்சார் வணிகச் சட்ட விதிகளின் படி விபத்துக்குள்ளான கப்பல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பெட்ரோலிய அமைச்சக கூடுதல் செயலாளர், கப்பல்த் துறை அமைச்சக இணைச் செயலாளர் சில தினங்களுக்கு முன்பு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இழப்பீடு வழங்க ஆயத்தம்:
      விபத்து குறித்து விசாரணை ஒரு புறம் நடைபெற்றுவரும் நிலையில் கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவால் சுற்றுச்சூழல், மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு கப்பல்களும் முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் எண்ணெய்க் கசிவு வெளியே டான் காஞ்சிபுரம் கப்பலுக்கு காப்பீடு அளித்துள்ள பி அன் ஐ என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை அளிக்கும். இதற்கான அலுவலகம்  எம்.எல்.எம். பில்டிங், 9, வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கசிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம். இழப்பீட்டைப் பெறுவது குறித்து மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே இழப்பீடு குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை.
கடல்சார் சட்டங்களின் படிதான் இழப்பீடு:
    இதற்கிடையே எண்ணெய்க் கசிவால் ரூ.123 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில மீன்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் பொத்தாம் பொதுவாக இத்தொகையை வழங்க முடியாது. சர்வதேச கடல்சார் சட்டங்களின் அடிப்படையில்தான் கப்பல் நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற முடியும். பாதிப்புகள் குறித்த புகார்களின் உண்மைத் தன்மை, ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகே காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்கும். எண்ணெய்க் கசிவுகளை அகற்றுவதற்கான செலவாகும் தொகை உடனடியாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் மாலினி.
    பேட்டியின்போது கப்பல் போக்குவரத்துத் துறை கூடுதல் இயக்குனர் அமிதாப் குமார், 
விசாரணை குழு தலைவர் கேப்டன் ஜெயக்குமார், துறைமுகத்தலைவர்கள் பி.ரவீந்திரன் (சென்னை), எம்.ஏ.பாஸ்கராச்சார் (காமராஜர்), கடலோரக்காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா ஆகியோர் உடன் இருந்தனர். 


மோதிய கப்பலின் மாலுமியின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம்:
எம்.ஏ.பாஸ்கராச்சார், காமராஜர் துறைமுகத் தலைவர்
  விபத்து ஏற்பட்டவுடன் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே துறைமுக நிர்வாகம் மெத்தனமாகச் செயல்பட்டது என்ற புகாரில் உண்மை இல்லை. மேலும் துறைமுகத்திலிருந்து வெளியேறிய கப்பலான மாபிலில் துறைமுகத்தின் மாலுமி கருணாநிதி சென்றுள்ளார். ஆனால் துறைமுகத் தடுப்புச் சுவரைக் கடந்தவுடன் இவரை இனி எவ்வித பிரச்னையும் இல்லை, இறங்கிச் செல்லலாம் என கப்பலின் மாலுமி கூறியுள்ளார். எனவே அவர் கப்பலிலிருந்து இறங்கிவிட்டார். அப்போதுதான் டான் காஞ்சிபுரம் துறைமுகத்தின் கடல் எல்லைக்கு  உள்ளே நுழைய ஆயத்தமாகியுள்ளது. இந்தக் கப்பலில் காமராஜர் துறைமுகத்தின் மாலுமியான டேனியல் என்பவர் இருந்துள்ளார். அப்போது விபத்து ஏற்படும் வாய்ப்பு இருந்ததையடுத்து மாபில் கப்பலின் மாலுமியை கருணாநிதி தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் எச்சரித்துள்ளார். ஆனால் அதனை மாபில் கப்பலின் மாலுமி கவனத்தில் கொள்ளவில்லை. இதனையடுத்துதான் விபத்து ஏற்பட்டது. உடனடியாக மாலுமி கருணாநிதி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுதான் இந்த விபத்தின் முதற்கட்ட தகவல்கள். ஆனால் விபத்துக்கான முழுமையான காரணங்கள் விசாரணைக் குழுவின் அறிக்கையில்தான் தெரிய வரும் என்றார் பாஸ்கராச்சார். 

No comments:

Post a Comment