எண்ணூரில் தீ விபத்து: 75 குடிசைகள் சாம்பல்
திருவொற்றியூர், பிப்.13:எண்ணூர் எர்ணாவூரில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 75 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. சேதமதிப்பு சுமார் ரூ.60 லட்சம்வரை ரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் புது குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தீ மளமளவெனப் பரவியது. இதனையடுத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு லாரிகள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இதனால் இப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் தீ விபத்திலிருந்து தப்பின. இருப்பினும் சுமார் 75 வீடுகள் முற்றிலும் சாம்பலாயின.
நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உயிர் தப்புவதையே
முதல் நடவடிக்கையாக இருந்ததால் துணிமணிகள், புத்தகங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாயின. சேதமதிப்பு சுமார் ரூ.60 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர், எம்.எல்.ஏ. பார்வையிட்டனர்:
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு உடமைகள் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மாற்று தங்குமிடம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்தார். இதனையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இங்கு வந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய ஜெயக்குமார், இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தையும் அகற்றிவிட்டு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் மூலம் தீப்பிடிக்காத வீடுகளை அமைத்தல் அல்லது குடிசை மாற்று வாரியம் மூலம் விலையில்லா அடுக்குமாடி தொகுப்பு வீடுகளை அமைத்துத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தீ விபத்தால் ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அரசு நிவாரண உதவிகளை வழங்க ஏதுவாக கணக்கெடுக்கும் பணியை உடனடியாக
மேற்கொள்ள வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment