Wednesday, 1 February 2017

சேதமான கப்பலை பார்வையிட்ட அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
    

  சேதமான கப்பலிலிருந்து வெளியேறிய கனரக எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை கடற்கரை முழுவதும் எண்ணெய் படலம் பரவிவிட்டது. மேலும் நடுக்கடலிலும் இது பொன்ற படலங்கள் காணப்படுகின்றன. கப்பலில் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு இருந்து வருகிறது என்பது போன்ற தகவல் விஷமிகள் சிலரால் தொடர்ந்து பரப்பப்பட்டன. இந்நிலையில் கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு திடீர் வருகை தந்தார். பின்னர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடுக்கடலுக்குச் சென்று விபத்து ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். அப்போது கப்பலில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை அமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கிக் கூறினர். இதில் திருப்தியடைந்த அமைச்சர் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டான் காஞ்சிபுரம் என்ற கப்பலில் இருந்த வாகன எண்ணெய் சரக்கை இறக்கும் பணியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். 

கரையில் தத்தளித்த 'கழுகுகள்' 

 இந்தியாவின் ஒட்டு மொத்த கடலோரப் பரப்பையும் கழுகுப் பார்வையில் கண்காணித்து  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் கடலோரக் காவல் படையினருக்கு கடற்கரையில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி புதிய அனுபவமாகவே இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சுமார் 25 பேருடன் எர்ணாவூர் வந்த கடலோரக் காவல் படையினர் உடனடியாக எண்ணெய் படலத்தை ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு குடிபோதையில் வந்த சிலர் படை வீரர்களை பல்வேறு கேள்வி எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். காவல்த் துறை, வருவாய், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட எவ்வித ஆதரவும் இன்றி பணியில் ஈடுபட்ட கடலோரக் காவல் படை வீரர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். கும்மிருட்டில் மேற்கொண்டு செய்வதறியாது திளைத்த கடலோரக் காவல்படையினர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பின்னர் திங்கள்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பணியை அவர்கள் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment