ஒப்பந்தம் பெறுவதில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்: போலீஸார் தடியடி
திருவொற்றியூர், பிப்.17:தாற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடர்பாக ஒப்பந்கமிஷன் பெறுவதில் அதிமுகவின் இரு குழுவினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
சென்னை மணலியில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் நிறுவனத்தில் விரிவாக்கப் பணிகள் சுமார் ரூ.3,500 மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக
கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் உயர் ரக கொதிகலன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாக உள்ளது. இதன் எடை சுமார் 750 டன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகர் அருகே பக்கிங்காம் கால்வாயில் தாற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான ஒப்பந்தப் பணியை அதிமுக வட்டச் செயலாளர்கள் செபாஸ்டின், பிரபாகரன், மணிக்குமார், அரசு ஆகியோர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் தலைமையில்
அதிமுகவினர் திரண்டு வந்து தங்களுக்கும் ஒப்பந்தப் பணியை பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வேலை செய்து வந்து தொழிலாளர்கள் அங்குமிங்கும் ஓடினர். இதனால் இப்பகுதியே கலவரமாக மாறியது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து சாத்தாங்காடு போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து தாற்காலிக சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment