Sunday, 19 February 2017

வி.கே.சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகச் சிறைக்கு மாற்றப்படுகிறார்?

விதிகளில் தடையில்லை: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

திருவொற்றியூர், பிப்.:சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 
வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பண அக்ரகாரா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தமிழகச் சிறைக்கு மாற்றுவதில் சட்டவிதிகள் ஏதும் தடையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து 
மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினர். இதனையடுத்து இங்குள்ள பரப்பண அக்ரகாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அப்போது சிறையில் முதல்வகுப்பு சிறைக் கைதிகளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் வி.கே.சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாயின. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறியது,
சிறைமாற்றம் என்பது வழக்கமானதுதான்:
எஸ். அறிவழகன் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர்):
    சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டம் 1950-ல் கூறப்பட்டுள்ள விதிகளின் படி 
எந்த ஒரு கைதியையும் ஒரு மாநிலத்திற்குள் உள்ள எந்த சிறைக்கும் சிறைக் கண்காணிப்பாளர்களே உடனடியாக மாற்றிவிட முடியும். ஆனால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கைதிகளை மாற்ற வேண்டும் எனில்
இரு மாநில அரசுகளின் ஒப்புதல்கள் தேவை. வி.கே.சசிகலா வழக்கினைப் பொருத்தவரை குற்றம் நிகழ்ந்த இடமே தமிழ்நாடுதான். வழக்கு விசாரணை மட்டுமே கர்னாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் முறைப்படி விருப்ப மனு அளித்தால் தமிழகச் சிறைக்கு மாற்றுவதற்கு 
தார்மீக அடிப்படையிலும், சட்ட விதிகளின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க
கர்னாடக அரசு மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இது போன்று ஏராளமானவர்கள் தொடர்ந்து சிறைச்சாலை மாற்றப்படுவது வழக்கமானதுதான் என்றார் அறிவழகன்.
அந்தந்த மாநில சிறைவிதிகள் பொருந்தும்:
வி.கண்ணதாசன் (சிறைக்கைதிகளுக்கான சிறப்பு வழக்கறிஞர்):
     சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டத்தின் படி  பெங்களூரு சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு சசிகலா மாற விரும்பினால் இதற்கான மனுவை தற்போதைய சிறையின் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளிக்க வேண்டும். இம்மனு அம்மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இக்கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிறைக்கைதிகளுக்கான பாதுகாப்பு, உடல் நலம், மருத்துவ வசதிகள், அமைதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் சசிகலா மற்றும் இருவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் விடுப்புகள், சலுகைகள் உள்ளிட்டவைகள் எந்த மாநில வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதோ அந்த மாநில சிறை விதிகள்தான் பொருந்தும். தற்போதைய நிலையில் இது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். இதற்காக மற்றவர்கள் வழக்கு ஏதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது, அது தேவையும் இல்லை என்றார் கண்ணதாசன்.
மறுஆய்வு மனுவால் மாற்றம் இராது:
எஸ்.நந்தகுமார்,(உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், டெல்லி):
      அரசியலமைப்புச் சட்ட விதி 32-ன்படி உச்சநீதிமன்றத்தில் நேரடியாகவே ரிட் மனு தாக்கல் செய்து கர்நாடகச் சிறையிலிருந்த தமிழக சிறைக்கு சசிகலா மாற்றிக்கொள்ளலாம். தண்டனை குறித்து மறு ஆய்வு செய்யக் கோரும் மனு என்பது தீர்ப்பு அளித்த நீதிபதிகள் முன்புதான் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் இதில் பயன் ஏதும் இருக்காது. நிச்சயமாகத் தள்ளுபடி செய்யும் வாய்ப்பே உள்ளது என்றார் 
சிறை மாற்றம் குறித்து பரிசீலனை: 
ஏ.நவநீதக்கிருஷ்ணன் (அதிமுக எம்.பி., வழக்கறிஞர் பிரிவு செயலாளர்):
     இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் தண்டனை குறித்த மறுஆய்வு 
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழு ஈடுபட்டு வருகிறது. இதன் பின்னர்தான் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான 
நடவடிக்கைகள் தொடங்கும். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின்
ஆலோசனைக்குப் பிறகே மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்  என்றார் நவநீதக்கிருஷ்ணன்.
      வி.கே.சசிகலாவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் எடப்படி கே. பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக வியாழக்கிழமை பதவி ஏற்றுள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அதிமுக முன்னணி தலைவர்களின் கருத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிறை மாற்றத்திற்கான நடவடிக்கைகள் சில தினங்களில் தொடங்கும் என்பதே தற்போதைய நிலை.

No comments:

Post a Comment