Thursday, 21 July 2016

மணலி அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்

திருவொற்றியூர், ஜூலை 10:மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     மணலியைச் சேர்ந்த 21-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் ஞானசேகர். இவர் சனிக்கிழமை மணலி பாடசாலை தெருவில் உள்ள தனது நண்பரின் அடகுக் கடையில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஞானசேகரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதனையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைப் பிடிக்கும் பணியை மாதவரம் போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
    இந்நிலையில் மாதவரம் பால்பண்ணை அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெபகுமார் (22), ராஜேஸ் (33), ராஜீவ் பகதூர் (23), பிரபு (28) ஆகிய நால்வரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர். இதனையடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோ பதிவுகளை ஒப்பிட்ட போது பிடிபட்ட நால்வரும்தான் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது உறுதியானதானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடம் நடத்திய 
விசாரணையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஞானசேகரின் மகன் கிருஷ்ணன் சேகருக்கும், பிடிபட்டவர்களுக்கும் கிரிக்கெட் விளையாடுவதில் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும், இதில் ஞானசேகர் தொடர்ந்து தனது மகனுக்காக தலையிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக ஞானசேகரைக் கொலை செய்ததாக
தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் இது மட்டுமே கொலைக்கு காரணமா? அல்லது வேறு யாரேனும் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளார்களா? என்பது குறித்து நான்கு பேரிடமும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி விசாரணைக்குப் பிறகு திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இறுதி ஊர்வலம்: கடைகள் அடைப்பு, பதற்றம்
   இதற்கிடையே ஞானசேகரின் சடலத்தன் பிரேதப் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது. பிறகு பலத்த பாதுகாப்புடன் ஞானசேகரின் சடலம் மணலி அண்ணா தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், மக்களவை உறுப்பினர்கள் டாக்டர் வேணுகோபால், வெங்கடேஸ்பாபு, மேயர் சைதை எஸ்.துரைசாமி, கிழக்கு  மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று ஞானசேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் மணலி பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தனர். பதற்றம் நிலவியதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆங்காங்கு குவிக்கப்பட்டனர். மாலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு மணலி சுடுகாட்டில் ஞானசேகரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
இரங்கல் கூட்டம்:
   நல்லடக்கம் நடைபெற்ற பிறகு மணலி சுடுகாட்டில் ஞானசேகர் மரணம் குறித்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவொற்றியூர் பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர். 

No comments:

Post a Comment