Saturday, 2 July 2016

திருவொற்றியூர் விம்கோ மார்க்கெட்டில் தீ விபத்து: 15 கடைகள் நாசம் 

மர்ம நபரின் கைவரிசையா?

திருவொற்றியூர், ஜூன் 25: திருவொற்றியூர் விம்கோ நகர் மார்க்கெட்டில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் எரிந்து நாசமாயின. மொத்த சேத மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
    திருவொற்றியூர் விம்கோ நகரில் ரயில் நிலையம் செல்லும் பாதையில் இரு புறமும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை விற்கும் கடைகள் அடங்கிய மார்க்கெட் உள்ளது. இங்கு கணேசன் என்பவரது காய்கறிக் கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் தீ மளமளவெனப் பரவி சுமார் 15 கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் கடைகளில் இருந்த பழங்கள், காய்கறி, மளிகை சாமான்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாயின. மொத்த சேதமதிப்பு ரூ.3 லட்சம்வரை இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தீவிபத்தில் சந்தேகம்:
  காய்கறி மார்க்கெட்டில் தீவிபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் விம்கோ நகர் அருகே உள்ள சக்திபுரம், ஸ்ரீரங்கம் நியூடவுன் ஆகிய இடங்களில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வணிக அங்காடியில் இருந்த கேமரா பதிவினைச் சோதனையிட்டபோது இதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சைக்கிளில் 
அங்குமிங்கும் சென்று வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து சந்தேகம் எழுந்த போலீஸார் குமாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போன்ற தீவைப்புச் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
   இச்சம்பவங்கள் குறித்து எண்ணூர் போலீஸார் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment