காமராஜர் துறைமுகம் சார்பில்
கிராம மக்களுக்கு ரூ.1.57 கோடி செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
திருவொற்றியூர், ஜூன் 27:எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி செலவில் கிராம மக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தரைவழி, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பரிசோதனை மையம், தையல் பயிற்சி, குளிரூட்டும் இயந்திரங்களை பழுது பார்த்தல், வாகன மெக்கானிக், கம்பியாளர், மோட்டார் ரீவைண்டிங்கு, வெல்டிங், கைபேசி பழுதுபார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க காமராஜர் துறைமுகம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நிறுவனங்களுக்கான தேசிய நிலையம் சிறப்புப் பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து 865 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இதற்கான பயிற்சி தொடக்கவிழா திங்கள்கிழமை அத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
தொழில் வளர திறமையான தொழிலாளர்கள் தேவை அவசியம்:
அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியது,
வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்திய இடம்பெற வேண்டுமெனில் தொழில் வளமும், விவசாயமும் வளர்ச்சியடைய வேண்டும். தொழில் வளர்ச்சி சீராக இருக்க வேண்டும் எனில் திறமையாக மேம்பாடு அடைய வேண்டும் எனில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் தேவை. ஆனால் தற்போதைய கல்விமுறையில் படித்து முடித்த இளைஞர்களில் உடனடியாக வேலையில் சேர 80 சதவீதம்பேருக்கு தகுதி இல்லாத நிலை உள்ளது. எனவேதான் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கென தனி அமைச்சகத்தையே பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். திறன்மேம்பாட்டுப் பயிற்சி மூலம் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பார்கள், இதன்மூலம் தொழில்கள் வளரும், உற்பத்தி பெருகும், நாட்டின் பொருளாதாரம் வளரும். எனவே பயிற்சி பெறுபவர்களின் வீடு மட்டுமின்றி நாடும் வளரும். நாடு முதல்நிலைக்கு வரவேண்டும் எனில் அனைவரும் கூட்டாக உழைக்க வேண்டும். காமராஜ் துறைமுகம் கடந்த ஆண்டு ரூ. 7 கோடியும், நடப்பாண்டில் ரூ. 8 கோடியும் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதனை இப்பகுதி மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.
நிகழ்ச்சியில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தேசிய நிலையத்தின் பயிற்சித் துறை நிர்வாகி டாக்டர் திப்யேந்து சவுத்ரி, காமராஜர் துறைமுக துணை பொது மேலாளர் பி.ராதாகிருஷ்ணன், பொதுமேலாளர்கள் சஞ்சய்குமார், கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment