Saturday, 2 July 2016

சென்னைத் துறைமுகத்தில் எண்ணெய்க் கப்பல் மூழ்குகிறதா?

வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு

திருவொற்றியூர், ஜூலை 1:சென்னை வந்த எண்ணெய்க் கப்பல் மூழ்கி வருவதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியதையடுத்து துறைமுக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கப்பலில் தண்ணீர் அதிகம் புகுந்து ஏற்பட்ட பிரச்னையே வதந்திக்கு காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. 
     பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான, பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட  எம்.டி. ஃபேட்ல் இ ரப்பி (MT FADL E RABBI)என்ற கப்பல் இந்தோனேசியா நாட்டின் பெலாவான் துறைமுகத்திலிருந்து 5400 மெட்ரிக் டன் பாமாயில் ஏற்றிக்கொண்டு கடந்த திங்கள்கிழமை ஜூன்  27 அன்று சென்னைத் துறைமுகம் வந்ததடைந்தது. சென்னைத் துறைமுகத்தில் பாரதி துறையில் கட்டப்பட்டிருந்த இக்கப்பல் படிப்படியாக மூழ்கி வருவதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. இது குறித்து துறைமுக அதிகாரிகளிடம் விசாரித்தபோது எவ்வித தகவலும் அளிக்கவில்லை.
      இதனையடுத்து கப்பலின் சென்னை ஏஜென்சி ஜெஸ்பா சிப்பிங் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது அதன் இயக்குனர் பன்னீர்செல்வம் கூறியது, 
      கப்பல் மூழ்கும் அபாயம் ஏதும் இல்லை. டேங்கர் வகை கப்பலான இதில் பல டேங்கர்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருக்கும் மேலும் கப்பலின் எடையை சீராகப் பராமரிக்கும் வகையில் தண்ணீர் நிரப்பும் அறைகளும் இருக்கும். இந்தோனேசியாவிலிருந்து கப்பல் வந்து கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாகவும், கடல் கொந்தளிப்புடன் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால்  அளவுக்கு அதிகமாக கடல் நீர் கப்பலுக்குள் புகுந்துவிட்டது.  இதனையடுத்து வழக்கத்தைவிட சற்று மூழ்கிய நிலையில் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குள் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டது.
     இது குறித்து தகவல் அறிந்தவுடன் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கடல் நீர் உள்புகுந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது கப்பல் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் பணி தொடங்கும். எனவே கப்பலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கப்பல் மூழ்கிவிட்டதாக பரவிய தகவல் வெறும் வதந்திதான் என்றார் பன்னீர்செல்வம்.
   கப்பல் மூழ்கிவிட்டதாக பரவியத் தகவலையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான செய்தியாளர்கள், கேமராமேன்கள் துறைமுக வளாகத்தில் குவிந்தனர். இது குறித்து துறைமுக நிர்வாகமும் போதிய தகவல்கள் அளிக்காததால் வெள்ளிக்கிழமை இரவுவரை இது குறித்து ஒருவருக்கொருவர் விசாரித்தவண்ணமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment